சாலை மறியலில் ஈடுபட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கைது
ஜெயங்கொண்டம் காந்திபூங்கா முன்பு மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல்குவாரி அமைக்க வேண்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல்குவாரி அமைத்துக் கொடுக்க வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு வழங்கிய தொகுப்பு வீடுகளுக்கு மணல் இல்லாமல் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் தடைபட்டுள்ளது. வீட்டை வாங்கிய ஏழை எளிய பயனாளிகள் தங்களது வீடுகளை கட்டி முடிப்பதற்கு உதவிடும் வகையில் மணல் குவாரி அமைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். பறிமுதல் செய்து வைத்திருக்கும் மாட்டு வண்டிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும். வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு வண்டி மாட்டு கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கலைகதிரவன், தாசில்தார் ஆனந்தன் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இதனால் ஜெயங்கொண்டம் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.