ஜெயங்கொண்டம் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மர்மமாக உயிரிழப்பு
ஜெயங்கொண்டம் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மர்மமான முறையில் இறந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்து உடையார்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (58). இவர் ஸ்ரீபுரந்தான் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 5ஆண்டுகாலமாக தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு உஷாராணி என்ற மனைவியும், காவியக்கண்ணி, சரண்யா என்ற 2 மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவரும் பி.இ பட்டதாரி ஆவார்கள். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. மனைவி உஷாராணி உஞ்சினி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து செல்வராஜ் தனது மோட்டார் சைக்கிளில் ஸ்ரீபுரந்தானிலிருந்து வீட்டிற்கு சென்ற போது சோழன்குறிச்சி அய்யனார் கோவில் அருகில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
கழுத்தில் காயம் இருப்பதால் இறப்பில் சந்தேகம் உள்ளதாக செல்வராஜின் உறவினர்கள் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தகவலறிந்த போலீசார் செல்வராஜுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.
கொலையா? அல்லது விபத்தா? வேறு ஏதேனும் முன்விரோதம் இருக்குமோ? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.