ஜெயங்கொண்டம் அருகே இடுப்பளவு தண்ணீரில் வயலுக்கு செல்லும் விவசாயிகள்

இடுப்பளவு தண்ணீரில் விவசாய இடுபொருட்களை எடுத்து செல்லும் அவலம். போர்க்காலஅடிப்படையில் பாலம் அமைத்துதர கோரிக்கை.

Update: 2021-10-10 04:13 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சோழமாதேவி பஞ்சாயத்துக்குட்பட்டது குறிச்சி கிராமம். இக்கிராமத்தையொட்டி  பொன்னாற்று வாய்க்காலில் இருந்து ரங்கராஜபுரம் கிளை வாய்க்கால் மூலம், குறிச்சி, சோழமாதேவி, கண்டியன்கொல்லை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு பாசன வாய்க்கால் செல்கிறது. கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக, நீர்வரத்து அதிகரித்துள்ளதால், வயல்களிலும் சாலைகளிலும் நீர் நிரம்பி உள்ளது. விவசாயிகள் தங்களது வயலுக்கு இடுப்பளவு தண்ணீரில் இடுபொருட்களை சுமந்து செல்லுகின்றனர்.

தற்காலிக ஏற்பாடாக ஒவ்வொரு ஆண்டும் ஊராட்சி நிர்வாகம் மூலம் மூங்கில் கழிகளை கொண்டு தட்டி பாலம் அமைத்து தரப்படும். தற்காலிக மூங்கில் தட்டிபாலம் மூலம் விவசாயிகள் நடந்து சென்றனர்.

இந்த ஆண்டு ஊராட்சியில் பணம் இல்லை எனக்கூறி பாலம் அமைத்து தரப்படவில்லை. ஆகையால் இந்த ஆண்டு விவசாயிகளே மூங்கில் பாலத்தை சீரமைத்து வைத்து விதை, உரம் உள்ளிட்ட இடு பொருட்களை கொண்டு சென்று வருகின்றனர்.

தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மூங்கில் பாலம் தண்ணீரில் மூழ்கிய நிலையில் உள்ளது. விவசாயிகள் தண்ணீரில் தத்தளித்து செல்லும் சூழல் நிலை உருவாகி உள்ளது.

குறிப்பாக வயலுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் பாலத்தில் செல்லும் போது கால்இடறி கீழேவிழுந்து விடுகின்றனர்.

மேலும் அதிக மழை பெய்யும் நேரத்தில் வயல்வெளிகளில் வெள்ளம் புகுந்து விவசாயம் பாழாகும் சூழல் ஏற்படுகிறது.

எனவே போர்க்கால அடிப்படையில் வயலுக்கு செல்லக்கூடிய பாதையை உயர்த்தி தார்சாலையாக அமைப்பதுடன், தற்காலிகமாக வருடம் தோறும் போடப்படும் மூங்கில் பாலத்தை அகற்றிவிட்டு அதில் நிரந்தர கான்கிரீட் பாலம் அமைத்து கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News