ஜெயங்கொண்டம்: இறந்தவரின் உடலை கழுத்தளவு நீரில் தூக்கி செல்லும் அவலம்

கழுவந்தோண்டி கிராமத்தில் மழைக்காலங்களில் காலம் காலமாக இறந்தவரின் உடலை கழுத்தளவு நீரில் தூக்கி செல்லும் அவல நிலை.

Update: 2021-11-13 09:38 GMT
மயான பாதை இல்லாததால்  ஜெயங்கொண்டம் அருகே இறந்தவரின் உடலை நீர் நிரம்பிய ஏரி வழியாக தூக்கி சென்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் உள்ள நைனார் ஏரி சுமார் 64 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு மழை காலங்களில் உடையார் பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து மழை நீரானது வடிகால் ஓடை வழியாகவும் காட்டு பகுதிகளின் வழியாகவும் வந்து கலக்கிறது. இதனால் மழை காலங்களில் இந்த ஏரி நிரம்பி இதில் உள்ள வடிகால் மதகு வழியாக வழிந்து சென்று கொள்ளிடத்தில் கலக்கிறது.

தற்போது பெய்த மழையில் ஏரி முழு கொள்ளளவை எட்டி வடிகால் ஓடையில் நீர் வழிந்து ஓடி வருகிறது. இந்த  கிராமத்தில் வடக்கு தெருவைச் சேர்ந்த கண்ணன், பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கண்ணன் ஆகிய இரண்டு பேர் உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் உடலை இடுப்பளவு தண்ணீரில் சுமந்து சென்றனர். மீண்டும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது போல் இந்த ஆண்டும் கழுத்தளவு நீரில் இறந்தவரின் உடலை சுமந்து சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த  கொளஞ்சி என்பவர்  கூறும்பொழுது, ஆட்சிகள் மாறுகின்றதே தவிர கழுவந்தோண்டி மக்களின் காட்சிகள் மாறவில்லை. ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் வந்து நேரில் ஆய்வு செய்து சரி செய்து தருவதாக கூறி செல்கின்றனர். தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களது நிலை பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் தற்போது வரை இருந்து என்றார்.

Tags:    

Similar News