தொடர் கனமழை: 200 ஏக்கர் நெல்நடவு செய்த பயிர்கள் நீரில் மூழ்கின
தொடர் கனமழை காரணமாக, தா.பழூர் சுற்றியுள்ள பகுதிகளில், 200 ஏக்கர் நடவு செய்யப்பட்ட நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கின.;
இதை ஏரி என்று நினைத்துவிட வேண்டாம். முட்டுவாஞ்சேரி கிராமத்தில் மழைநீரில் மூழ்கிய வயல்தான் இது. மழை நீரில் மூழ்கிய நடவு பயிர்களை காண்பிக்கும் விவசாயிகள்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகேயுள்ள அண்ணங்காரன்பேட்டை, கோடாலி கருப்பூர், வாழைக்குறிச்சி, மதனத்தூர், காரைக்குறிச்சி, ஸ்ரீபுரந்தான், சாத்தம்பாடி, அருள்மொழி, முத்துவாஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களில் தற்போது நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மேற்கண்ட கிராமங்களில் சம்பா நெல் நடவு செய்யப்பட்ட சுமார் 200 ஏக்கர் வயல்கள் மழைநீரில் மூழ்கி, கடல் போல் காட்சியளிக்கிறது. இதேநிலை மேலும் 2,3 நாட்களுக்கு நீடித்தால் பயிர்கள் அனைத்தும் அழுகிவிடும் சூழல் உள்ளது.
எனவே, அனைத்து பகுதிகளிலும் உள்ள வடிகால்களை சீரமைத்து, மழைநீர் வடிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.