ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி பசு மாடு பலியானதால் சாலை மறியல்

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி பசு மாடு பலியானதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-08-23 08:01 GMT

சாலை மறியல் நடத்தியவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட புதுக்குடி கிராமத்தில் திடக் கழிவு மேலாண்மை திட்டத்திற்காக புதிய மின்மாற்றி அமைத்து அதிலிருந்து மின்சாரம் எடுக்கப்படுகிறது. இந்நிலையில் இயந்திரங்களின் சோதனை ஓட்டத்திற்காக மின்சாரம் தற்காலிகமாக எடுத்து பயன்படுத்திய போது, அவ்வழியாக வந்த அதே பகுதி எதிர்வீட்டில் வசித்து வரும் ஞானசேகரன் என்பவரது பசுமாடு மின்வயரை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானது.

இதனால் ஆத்திரமடைந்த ஞானசேகர் உள்ளிட்ட பகுதி மக்கள் மின் வயரை அலட்சியமாக போட்ட அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் இப்பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தேவையில்லை என கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News