‘இந்தியா கூட்டணி தேர்தல் வரை கூட நீடிக்காது’ - மத்திய அமைச்சர் எல்.முருகன்

‘இந்தியா கூட்டணி தேர்தல் வரை கூட நீடிக்காது’ - என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

Update: 2024-01-25 10:36 GMT

மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற 'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்' நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று கலந்து கொண்டார். மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் வங்கி அதிகாரிகள், இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள், தபால் துறை அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கினர்.

இந்நிகழ்வில் பயனாளிகள் மற்றும் பொதுமக்களோடு சேர்ந்து மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கலந்து கொண்டு  வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான உறுதி மொழியை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து சாலையோர வியாபாரிகளுக்கான நிதி உதவி திட்டம், சுய உதவி குழுக்களான குழுக்களுக்கு கடன் உதவி, கல்விக் கடன் மற்றும் உஜ்வாலா கேஸ் இணைப்பு திட்டம் ஆகியவற்றை பயனாளிகளுக்கு மத்திய இணை அமைச்சர் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய அமைச்சர் எல். முருகன், 2047 ஆம் ஆண்டில் முன்னேறிய நாடாக இந்தியாவை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைவதோடு இந்தியாவின் கட்டமைப்புகள் உலக தரத்தில் உருவாக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அவர் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த யாத்திரை நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான பொதுமக்கள் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டதாகவும், இந்த நிகழ்ச்சியின் மூலம் புதிய பயனாளிகள் திட்டங்களில் இணைந்ததாகவும் குறிப்பிட்டார்.

நிறைவாக மத்திய அரசின் திட்டங்கள் அடங்கிய காலண்டர்களை பொதுமக்களிடம் வழங்கிய அமைச்சர் விழிப்புணர்வு வாகனத்தையும் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய இணை அமைச்சர் முருகன் திருப்பூர் மாவட்டத்தில் தனியார் தொலைக்காட்சியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதை காட்டுவதாகவும், பாதிக்கப்பட்ட பத்திரிகையாளருக்கான மருத்துவ செலவினை முழுவதுமாக அரசு ஏற்க வேண்டும் எனவும், அவரது குடும்பத்தினருக்கு உரிய நிவாரண நிதி தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்தியா கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், ஆரம்ப முதலே இந்த கூட்டணி நீடித்து பயணிக்காது என கூறப்பட்டிருந்ததைப் போலவே, தற்போது ஆம் ஆத்மி, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆகியோர் தனித்து செயல்பட்டு வருவதாகவும், இந்த கூட்டணி தேர்தல் வரை கூட நீடிக்காது எனவும் கூறினார்.

Tags:    

Similar News