கோவையில் தேசிய பாதுகாப்பு முகமை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு..!
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.;
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கொடுத்த வாக்குறுதி விவரங்கள் வருமாறு:
கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில், உலக வரைபடத்தில் முக்கிய இடம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பலனளிக்கும் வண்ணம், 100 வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறோம். இந்த 100 வாக்குறுதிகளையும் அடுத்த 500 நாட்களுக்குள் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வோம் என்பதே நமது பாரதப் பிரதமர் மோடியின் உறுதியான கேரண்டி.
கோவை பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் குறைதீர்ப்பு மையமாகச் செயல்படும். கோவை விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாகத் தரம் உயர்த்தப்படும். கோவை மெட்ரோ திட்டம் விரைவுபடுத்தப்படும்.
தமிழகத்தின் இரண்டாவது இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (IIM), கோவையில் நிறுவப்படும். விவசாய மக்களின் சுமார் எழுபதாண்டு கால கோரிக்கையான, ஆனைமலை – நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும். கோவையின் ஜீவநதியான நொய்யல் மற்றும் அதன் கிளை நதியான கௌசிகா நதிகள் மீட்டெடுக்கப்பட்டு, கோவையின் நீர்வளம் மேம்படுத்தப்படும்.
விசைத்தறி உரிமையாளர்கள் பலனடையும் வண்ணம், பவர்டெக்ஸ் திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டு, அதன் மூலம், சூரிய ஒளி மின் தகடுகள் மற்றும் நாடா இல்லாத விசைத்தறிகள் அமைக்க மானியம் வழங்கப்படும். கோவையில், தேசிய பாதுகாப்பு முகமை (NIA) மற்றும், போதைப் பொருள் தடுப்பு பிரிவு (NCB) ஆகியவற்றின் கிளை அலுவலகங்கள் அமைக்கப்படும்.
கோவையில் Automotive Corridor அமைக்கப்படும். கோவை பாதுகாப்புத் தளவாடத்தில் செமிகண்டக்டர்கள் தயாரிக்க, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்திடம் வலியுறுத்தப்படும். கோவை பாராளுமன்றத் தொகுதியில், நான்கு நவோதயா பள்ளிகள் அமைத்து, குழந்தைகளுக்கு உயர்தரக் கல்வி கிடைக்க வழிவகை செய்யப்படும்.
பாட்டியாலாவில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப் பெரிய விளையாட்டுப் பயிற்சி மையங்களில் ஒன்றான தேசிய விளையாட்டு ஆணையத்தின் கிளை பயிற்சி மையம், கோவையில் அமைக்கப்படும். கோவை பாராளுமன்றத் தொகுதியில், 250 மக்கள் மருந்தகங்கள் புதிதாகக் கொண்டு வரப்படும். கோவையில், உலகத் தரம் வாய்ந்த தேசிய முதியோர் நல மருத்துவ மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாடு முழுவதும் உள்ள புராதனமான ஆன்மீகத் தலங்களுக்கு, கோவையில் இருந்து 10 ரயில்கள் இயக்கப்படும். சபரிமலை யாத்திரையை ஒருங்கிணைக்க உதவி மையம் அமைக்கப்படும். கொங்கு மண்டலத்தில், மத்திய அரசின் உதவியோடு, உயர்தர புற்று நோய் சிகிச்சை மருத்துவமனை நிறுவப்பட்டு, ஆயுஷ்மான் பாரத் திட்டப் பயனாளிகளுக்கு, இலவச சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கர்மவீரர் காமராஜர் நினைவாக, அரசு மற்றும் தனியார் பங்களிப்போடு, கோவை மாநகரில் மூன்று Food Bank (உணவகம்) நிறுவப்படும். கடந்த பத்து ஆண்டுகளில், கோவை பாராளுமன்றத் தொகுதிக்கு, மத்திய அரசு வழங்கிய அனைத்து நலத்திட்டங்கள், மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதி ஆகியவை அனைத்தும் சிறப்புத் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். இந்தத் தணிக்கையில் கண்டறியப்படும் முறைகேடுகளுக்குக் காரணமானவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்படும்.
இவை உட்பட நூறு வாக்குறுதிகளும், அடுத்த ஐந்நூறு நாட்களில் நிறைவேற்றப்படும் என்ற உறுதியை, கோயம்புத்தூர் மக்களுக்கு அளிக்கிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில், கோவை தனது பெருமையை மீட்டு, கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்ற சொல்லுக்கு உதாரணமாக மீண்டும் எழுச்சி பெற, நாட்டின் வளர்ச்சிக்கு நமது கோவையும் முக்கிய பங்காற்ற, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நேரடிப் பார்வையில், கோவை முழுவதுமாக வளர்ச்சி பெற, வரும் ஏப்ரல் 19 அன்று, தாமரை சின்னத்தில் வாக்களித்து, உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் தம்பி அண்ணாமலை ஆகிய எனக்கு, உங்களுக்குப் பணி செய்ய வாய்ப்பளிக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். வளர்ச்சியடைந்த கோவை நம் ஒவ்வொருவரின் கனவு.