கொரோனாவைத் தடுக்க ஒரே பேராயுதம் தடுப்பூசி தான்- பிரதமர் மோடி
தடுப்பூசி விநியோகத்திற்காக மாநில அரசுகள் இனி செலவு செய்யத் தேவையில்லை என பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்துள்ளார்.;
நாட்டின் பிரதமர் மோடி அவர்கள், நாட்டு மக்களுடன் கொரோனா பெருந்தொற்று குறித்து இன்று காணொளியில் உரையாற்றினார். அதில், தடுப்பூசி குறித்த விவரங்களை எடுத்துரைத்தார்.
கொரோனா தொற்று கடந்த ஆண்டு முதல் பரவத்தொடங்கியது. அதிலிருந்து நாட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மக்களின் பதட்டத்தை குறைக்கும் வகையில் பிரதமர் அவ்வப்போது பொதுமக்களிடம் காணொளி வாயிலாக உரையாடி வருகிறார். காணொளியில், நாட்டின் நோய் தடுப்பு நிலவரத்தை குறித்தும், தடுப்பூசி போடுவது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் அவர் இன்றும் கொரோனா தொற்று குறித்து பேசினார்.
அதில், கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நாட்டில் ஏப்ரல், மே மாதங்களில் கணிக்க முடியாத அளவிற்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்தது. ரயில்கள், விமானங்கள், டேங்கர்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டு தேவை பூர்த்தி செய்யப்பட்டது. கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளின் உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவைத் தடுக்க ஒரே பேராயுதம் தடுப்பூசி தான். சில தடுப்பூசி நிறுவனங்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டு உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி பலரது உயிரையும் காப்பாற்றியுள்ளது. நாட்டில் இதுவரை 23 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று வரும் ஜூன் 21ம் தேதி முதல் முற்றிலும் இலவசமாக கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும்.
தடுப்பூசி விநியோகத்திற்காக மாநில அரசுகள் வழங்கும் 25% பங்கையும் மத்திய அரசே ஏற்க உள்ளது. மாநில அரசுகள் இனி தடுப்பூசிக்காக செலவு செய்யத் தேவையில்லை என்றும் திட்டவட்டமாக பிரதமர் தெரிவித்துள்ளார். சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் வகையில், பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.