கோவை மேயர் கல்பனா பதவி ராஜினாமா! அதிர வைக்கும் பின்னணி
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மேயர் கல்பனாவின் 19வது வார்டில் திமுக-வை விட, பாஜக அதிக வாக்கு வாங்கியது.
கோவை மாநகராட்சி 19-வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார், செந்தில் பாலாஜி கோவை பொறுப்பு அமைச்சராக இருந்தபோது அவரின் ஆசியில் மேயரானார்.
மிகவும் எளிமையானவர், பாரம்பரிய திமுக குடும்பம் என்று பாசிட்டிவான பிம்பத்துடன் கோவையின் முதல் பெண் மேயராக பதவி ஏற்றார். 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவுடன் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போதுகூட கல்பனா பேருந்தில் தான் சென்னை சென்றார்.
கணவர் ஆனந்தகுமாரும், கல்பனாவும் மணியகாரம்பாளையம் பகுதியில் இ–சேவை மையம் நடத்தி வந்தனர். லைன் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தனர்.
கடந்த சில நாள்களாகவே கல்பனா, தி.மு.க தலைமையிடம் ராஜினாமா கடிதம் கொடுத்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், கல்பனா கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். உடல்நிலை, குடும்ப சூழல் உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களை முன்வைத்து ராஜினாமா செய்துள்ளதாக ஆணையர் சிவகுரு தெரிவித்துள்ளார்.
ஆனால், கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது கிடைத்தத் தகவல்கள் தலைசுற்ற வைத்தன. இது குறித்து தி.மு.க கட்சி மற்றும் கோவை மாநகராட்சி வட்டாரங்களில் விசாரித்தோம். இது குறித்து கட்சினர் கூறுகையில், கல்பனா மேயராக பதவி ஏற்றது முதல் அடுத்தடுத்து பல்வேறு புகார்கள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கினார். மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பனிப்போர் நிலவியது. துணை மேயர், மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் உட்பட சொந்தக்கட்சிக்காரர்களே அதிருப்தியில் இருந்தனர்.
கல்பனா உள்நோக்கத்துடன் கோப்புகளில் கையெழுத்து போடாமல் இருக்கிறார் என மத்திய மண்டலத் தலைவர் மீனாலோகு மாமன்ற கூட்டத்தில் வெளிப்படையாக புகார் கூறினார். கான்ட்ராக்டர்களை மிரட்டி கமிஷன் கேட்டதாகவும் புகார் எழுந்தது. ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மேயர் அரசு இல்லம் சுமார் ரூ.1 கோடி செலவில் புனரமைக்கப்பட்டது. ஆனால் அங்கு அமானுஷ்ய சக்தி இருப்பதாக கூறி கல்பனா தங்கவில்லை. மணியக்காரம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் இருந்தார்.
அங்கும் பக்கத்து வீட்டுக்காரர்களை தரக்குறைவாக நடத்தி மிரட்டுவதாக கல்பனா மற்றும் அவர் குடும்பத்தினர் மீது புகார் எழுந்தது. முக்கியமாக அவர் கணவர் ஆனந்தகுமார் ஆதிக்கம் அதிகமிருப்பதாக கூறப்பட்டது.
மேலும் கல்பனா செந்தில் பாலாஜி ஆதரவாளர் என்பதால், துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கான்ட்ராக்ட் உள்ளிட்ட விஷயங்களில் நேருவிடம் மோதல் போக்கில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கல்பனா சரியாக பணியாற்றவில்லை என்று புகார் எழுந்தது. அவரின் 19வது வார்டில் திமுக-வை விட, பாஜக அதிக வாக்கு வாங்கியது. கோவை புறநகர் பகுதிகளுடன் ஒப்பிடும் போது, மாநகர் முழுவதுமே பாஜக அதிக வாக்குகளை வாங்கியுள்ளது.
எனவே மாநகராட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தும் விதமாகவும், சட்டமன்ற தேர்தலுக்கு திமுக-வுக்கு களப்பணியாற்றும் விதமாக மேயரை மாற்ற முடிவு செய்துள்ளனர் என்றனர்