கடன் செலுத்த அவகாசம் தேவை: அரசுக்கு விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை
ஊரடங்கு காலம் முடியும் வரை கடன்களை திருப்பிச் செலுத்த கால அவகாசம் தர வேண்டும் என்று, அரசுக்கு பள்ளிப்பாளையம் பகுதி விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் ஏராளமான விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிலில் 30-ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். பள்ளிபாளையத்தில் உற்பத்தி செய்யப்படும் வேட்டி, லுங்கி, பாலிஸ்டர் லுங்கி, வெள்ளை பீஸ் எனப்படும் வெள்ளை ரக ஜவுளிகள் தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்கள் பலவற்றுக்கும் ஏற்றுமதியாகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று அலையை தடுக்க, தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால், பள்ளிபாளையத்தில் பிரதான தொழிலாக இருக்கக்கூடிய விசைத்தறி தொழிற்கூடங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. இந்த தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து விசைத்தறி தொழிலாளர்கள் சிலர், 'இன்ஸ்டாநியூஸ்' செய்தி இணையதளத்திடம் கூறியதாவது: சிறுவயது முதலே விசைத்தறி தொழில் சார்ந்து உள்ளதால் வேறு தொழில்கள் எதுவும் தெரியாது. முழு ஊரடங்கால் விசைத்தறிகள் இயங்காததால் வருமானம் இன்றி தவித்து வருகிறோம். போதிய வருமானம் இல்லாததால் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கந்துவட்டி மற்றும் மைக்ரோ பைனான்ஸ் என சொல்லக்கூடிய நுண்கடன் நிறுவனங்களில் நாங்கள் வாங்கிய. பணத்திற்கான தவணை தொகையை கடனை கட்ட முடியாமல் தவித்து வருகிறோம்.
ஒரு சில கடன் கொடுத்த நிறுவனங்கள், ஊரடங்கு காலத்திலும் கடன் தொகை கேட்டு நெருக்கடி கொடுப்பதால் தவித்து வருகிறோம் எனவே தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்படும் வரை, பைனான்ஸ் நிறுவனங்கள் கடனை வசூலிக்க கூடாது என உத்தரவிட வேண்டும் விசைத்தறி தொழிலாளர்கள் கூடுதல் நிவாரணம், வேலையின்றி தவிக்கும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு மளிகை பொருட்களை வழங்க வேண்டும் என்றனர்.