வெற்றி தள்ளிப்போகிறதா? கவலைப்படாதீங்க..!
வெற்றி தள்ளிப்போகலாம். ஆனால் நாம் எடுக்கும் முயற்சிகள் வீண் போகாது.
தோல்விக்கான காரணங்கள் என்று இரண்டை சொல்லலாம். யோசிக்காமல் செய்வது ஒன்று, யோசித்த பின்பும் செய்யாமல் இருப்பது மற்றொன்று. எனவே வெற்றி என்பது தள்ளிப் போகலாம் ஆனால் முயற்சி வீண் போகாது.
நாம் செல்லும்பாதை சரியாக இருந்தால் வேகமாக அல்ல மெதுவாக சென்றாலும் வெற்றி தான். ஆனால் அதற்கு தேவை விடாமுயற்சியுடன் கூடிய உழைப்பு என்பதை மறந்து விடக்கூடாது. அதிர்ஷ்டம் பல நேரங்களில் நம்மை பற்றிக்கொள்ள மறுக்கலாம். ஆனால் செய்யும் செயலில் தீவிரமாக இறங்கி எடுக்கும் முயற்சிகளை மட்டும் கைவிடாமல் இருந்தால் வாழ்வில் தானாகவே வந்து சேரும் வெற்றிகள்.
நாம் எடுக்கும் முயற்சிகளுக்கு எந்தவிதமான எல்லைகளும் வகுத்துக் கொள்ளாமல் இருந்தால் நம்மால் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்த முடியும். ஒரு லட்சியத்தை உருவாக்கிக் கொண்டு அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேற வெற்றி நம் வசமாகும்.
வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. கடமையை செவ்வனே செய்தால் வெற்றி கிடைக்கும். அந்த செயலையே கடமைக்காக செய்தால் தோல்விதான் மிஞ்சும். வெற்றி தோல்வியைப் பற்றி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நாம் செய்யும் செயல்களில் தீவிரமான ஈடுபாட்டுடன் முயற்சி செய்தாலே வெற்றி கிடைக்கும். கடின உழைப்பு வெற்றிக்கு மிக முக்கியம். காலம் பொன் போன்றது என்பது உண்மை தான். தங்கத்தைவிட விலைமதிப்பற்றது. எனவே நம் இலக்குகளை அடைய நேரத்தையும், உழைப்பையும், வெற்றி பெற எடுக்க வேண்டிய முயற்சியையும் கைவிடுதல் கூடாது.
நாம் அடையவேண்டிய இலக்குகளை சரியாக குறிவைத்து அதற்கான முயற்சியில் ஈடுபடுவது வெற்றியைத் தேடித்தரும். இதற்கு தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கட்டாயம் தேவை. வெற்றியை நோக்கிய பயணத்தின்போது நாம் தேர்ந்தெடுக்கும் பாதையைத் தவிர மற்றவற்றை மனதில் ஏற்றிகொள்ளவோ, குழம்பிக் கொள்ளவோ கூடாது.
மற்றவர்களின் கருத்துகளுக்கு, அறிவுரைகளுக்கு ஏற்ப நம் பாதையை மாற்றிக்கொண்டே இருத்தல் கூடாது. வாழ்க்கை சவால்கள் நிறைந்தது. ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை ஒளிந்து கொண்டிருக்கும். அதை வெளிக்கொணர்ந்து எதிர்நீச்சல் போட்டு சாதித்து காட்டுவதே வெற்றிக்கான வழிகள்.
சரியான குறிக்கோளை தேர்ந்தெடுத்து, சிறந்த பயிற்சியுடன் முயற்சித்து, நேரத்தை திறமையாக் கையாண்டு, இதில் வெற்றி கிடைக்குமா என்று பயப்படும் எண்ணங்களை மனதிலிருந்து விலக்கி, திட்டமிட்டு முயற்சிப்பதே வெற்றிக்கான வாய்ப்பை அதிகம் கொடுக்கும்.
குதிரைக்கு இரண்டு பக்கமும் கடிவாளம் அமைத்து இருப்பதால் அதனால் எந்த பக்கமும் பார்க்க முடியாமல் நேராக அதற்கு எதிர்ப்படும் பாதையை பார்த்து ஓடிக்கொண்டே இருக்கும். அதுபோல் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி யோசிக்காமல் தொடர்ந்து நாம் நம் இலக்கை நோக்கி வேகமாக பயணிக்க எண்ணிய இடத்தை எளிதில் அடைந்து விடலாம்.
லட்சியம் நியாயமானதாக இருந்து, சிந்தனையும் தெளிவாக இருந்தால் அதற்கேற்ற செயல்திறன் தானாக வந்து விடும். சில சமயம் வாழ்க்கையில் ஸ்பீட் பிரேக்கர்கள் தேவை. சுதாரித்து நியூட்ரலுக்கு வந்து மீண்டும் சில வினாடிகள் கழித்து பயணப்படும் போதுதான் அந்த வேகத்தை கட்டுப்படுத்தும் நுணுக்கங்கள் நமக்கு புரிய ஆரம்பிக்கும். எனவே அவ்வப்போது ஏற்படும் சிறு தோல்விகளும், சறுக்கல்களும் நம் முயற்சிகளில் தேக்கத்தை உண்டு பண்ணாது. வெற்றிகள் தள்ளி போகலாம். ஆனால் முயற்சிகள் வீண் போகாது.