சீனா பக்கம் சாயும் அண்டை நாடுகள் துல்லியமாக கணித்தார் ஜெய்சங்கர்..!

உலகம் ஒரு விளையாட்டுக்களம். சீனா தனது பொருளாதார பலத்தை பயன்படுத்தி தனக்கு சாதகமாக களத்தை வடிவமைக்கிறது.

Update: 2024-08-15 06:10 GMT

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

சீனா பொருளாதார பலத்தை பயன்படுத்தி அண்டை நாடுகளை தன்பக்கமாக சாய்க்க முயற்சி செய்து வருகிறது. அது தான் தற்போது நடந்து வருகிறது. இதனை சொன்ன நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியம், இதற்காக ‘நாம் சீனாவை பார்த்து பயப்பட வேண்டியதில்லை’ என்று திட்டவட்டமாக கூறியிருந்தார்.

பிரதமர் `மோடியின் வெளியுறவுக் கொள்கைகளால் இந்தியா உலக அரங்கில் மிளிர்கிறது. உலகுக்கு வழிகாட்டும் தலைவராக அவர் மாறிவிட்டார்’ என்கின்றனர். 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில், எப்போதும் இல்லாத வகையில் வெளியுறவுக் கொள்கை பற்றியெல்லாம் பேசி வாக்கு சேகரித்தார் பிரதமர் மோடி.

ஆனால் இன்று, வங்கதேசம் உட்பட இந்தியாவின் அண்டை நாடுகள் ஒவ்வொன்றாக சீனா பக்கம் சாய்ந்து கொண்டிருக்கின்றன. மத்திய அரசின் `அண்டை நாடுகள் முதலில்’ (Neighbourhood First) என்ற கொள்கை தோல்வியைச் சந்தித்துக்கொண்டிருக்கிறதா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

அண்டை நாடுகளிலேயே இந்தியாவுடன் அதீத நெருக்கம் காட்டியது வங்கதேசம் தான். ஷேக் ஹசீனாவுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம், அந்த நெருக்கத்தைச் சீர்குலைத்து விட்டது. ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்திருப்பதால், அவரது அவாமி லீக் கட்சியின் நிலை அதோ கதியாகி விட்டது. இனி அங்கு, முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பி.என்.பி) ஆதிக்கமே ஓங்கி இருக்கப்போகிறது. பி.என்.பி கட்சி பாகிஸ்தான், சீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருப்பதால், இந்தியாவுக்கு இனி தலைவலி தான்.

சர்வாதிகாரப் போக்கைக் கடைப்பிடித்ததால், ஹசீனாவுக்கு எதிராகத் தன்னெழுச்சியாக மக்கள் ஒன்று கூடினாலும், இந்தப் போராட்டங்களை வலுப்படுத்தியதன் பின்னணியில் பாகிஸ்தானும் சீனாவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. `இட ஒதுக்கீட்டை நீக்க வேண்டும்’ என்ற கோரிக்கையுடன் தொடங்கிய இந்தப் போராட்டம், `ஹசீனா பதவி விலக வேண்டும்’ என்று திசைமாறியதன் பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் இருப்பதாக முன்பே சொன்னார்கள் ஹசீனா அரசின் உயர்மட்ட அதிகாரிகள்.

மேலும், `பல வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், நாட்டைவிட்டு வெளியேறிய பி.என்.பி கட்சியின் தலைவரும், கலீதா ஜியாவின் மகனுமான தாரிக் ரஹ்மானை, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யைச் சேர்ந்த சிலர் சவுதி அரேபியாவில் சந்தித்திருக்கின்றனர். அங்குதான் இந்தப் போராட்டம் தொடர்பான சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது’ என்கிறார்கள்.

வங்கதேச அரசியலை உற்றுநோக்கும் சிலர், `பாகிஸ்தான் ஆதரவோடு வங்கதேசத்தில் செயல்படும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மாணவர் அமைப்பு தான், இஸ்லாமி சத்ரா ஷிபிர் (Islami Chhatra Shibir, ஐ.சி.எஸ்). இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே, இந்த அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் வங்கதேசத்தின் டாக்கா பல்கலைக்கழகம், சிட்டகாங் பல்கலைக்கழகம், ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பிரதான பல்கலைக்கழகங்களில் இணைந்திருக்கின்றனர்.

\பலரும் அங்கு மாணவத் தலைவராகவும் பொறுப்பேற்றிருக்கின்றனர். ஹசீனா அரசுக்கு எதிரான கருத்துகளை மாணவர்கள் மத்தியிலும், சமூக வலைதளங்களிலும் பரப்புவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்.இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, ஹசீனாவின் பதவியைத் தற்போது பறித்திருப்பதும் இந்த அமைப்புதான். பாகிஸ்தானில் செயல்படும் சீன நிறுவனங்களிலிருந்து தான் ஐ.சி.எஸ் அமைப்புக்கு நிதியுதவிகள் கிடைத்திருக்கின்றன’ என்கிறார்கள்.

டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ``வங்கதேச ஆட்சிக் கவிழ்ப்பில் பாகிஸ்தான் உள்ளிட்ட அந்நிய சக்திகளின் தலையீடு இருக்கிறதா?’’ என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்ப, ``அது குறித்து ஆராய்ந்து வருகிறோம்’’ என்று பதிலளித்திருக்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த வங்கதேசப் பொதுத் தேர்தலை, எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. குறிப்பாக பி.என்.பி கட்சி, `வங்கதேசத் தேர்தலில் இந்திய அரசு ஆதிக்கம் செலுத்துகிறது’ என்று குற்றம்சாட்டியது. சர்ச்சைக்குரிய அந்தத் தேர்தலில் வென்று, ஐந்தாவது முறையாகப் பிரதமரானார் ஹசீனா.

இதையடுத்து, பி.என்.பி தலைவர் தாரிக் ரஹ்மான், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ உதவியோடு, இந்தியாவே வெளியேறு கொள்கையை முன்னெடுத்ததாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். `வங்கதேச இறையாண்மையில் மூக்கை நுழைக்கும் இந்தியாவை விரட்டியடிப்போம்’ என்றனர் பி.என்.பி கட்சியினர். கிட்டத்தட்ட தற்போது அதைச் செய்து காட்டி விட்டது பி.என்.பி கட்சி!

ஓய்வுபெற்ற இந்திய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர், ``அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் ஹசீனாவின் தேர்தல் வெற்றியை அங்கீகரிக்காத போது, மோடி அரசு ஹசீனாவுக்குப் பேராதரவு அளித்தது. இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பை மனதில் வைத்துத்தான் இந்த ஆதரவை மத்திய அரசு அளித்தது. ஆனால், அதிகாரத்தில் இல்லாத எதிர்க்கட்சிக்கு ஆதரவளித்து, இன்று சீனாவும் பாகிஸ்தானும் வங்கதேசத்தை தங்கள் பக்கம் சாய்த்திருக்கின்றன.

நிச்சயம் இது மத்திய பா.ஜ.க அரசின் தோல்வி தான். அண்டை நாடுகளில் என்ன நடக்கிறது என்பதைக் கண்காணிக்கத் தவறிவிட்டது வெளியுறவுத்துறை. இந்திய உளவு அமைப்புகள், வங்கதேச அரசுக்கு இருக்கும் அபாயங்களை மோப்பம் பிடித்து, அவர்களை எச்சரித்திருக்க வேண்டும்.

வங்கதேசப் பிரச்னை உச்சம் தொட்ட சமயத்தில் இந்தியா தலையிட்டு, பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடிக்கும் வேலைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், `இது வங்கதேசத்தின் உள்நாட்டுப் பிரச்னை’ என்று ஒதுங்கி நின்று விட்டது. இதையெல்லாம் செய்யத் தவறியதால், தற்போது வங்கதேசத்திலும் சீனா ஆதிக்கம் செலுத்தப்போகிறது’’ என்கின்றனர்.

ஆப்கானிஸ்தான், நேபாளம், பூட்டான், பாகிஸ்தான், மாலத்தீவு, மியான்மர், இலங்கை, வங்கதேசம் என எட்டு நாடுகளுடன் நல்லுறவைப் பேண, `அண்டை நாடுகள் முதலில்’ என்ற வெளியுறவுக் கொள்கையை, 2008 முதல் கடைப்பிடித்து வருகிறது இந்தியா. இந்தக் கொள்கை மூலம், அண்டை நாடுகளுக்கு முடிந்த உதவிகளைச் செய்து, நட்புறவில் வைத்துக் கொள்வது இந்தியாவின் திட்டம். இதனால், இந்தியாவின் எல்லைகள் பாதுகாப்பாக இருப்பதோடு, சீன ஆதிக்கத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்பது தான் இந்தத் திட்டத்தின் குறிக்கோள்.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, ``மோடி தலைமையில், `அண்டை நாடுகள் முதலில்’ கொள்கை புத்துயிர் பெற்றிருக்கிறது. அண்டை நாடுகளுடனான உறவு மேலோங்குகிறது’’ என்று மார்தட்டிக்கொண்டனர் பா.ஜ.க-வினர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில், நேபாளம், மாலத்தீவு, வங்கதேசம், இலங்கை என நான்கு அண்டை நாடுகளில் சீன ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது.

சமீபத்திய அரசியல் குழப்பங்களால், வங்கதேசத்தில் இனி சீனாவின் ஆதிக்கம் மெல்ல மெல்ல அதிகரிக்கும்.  இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளோ, ``அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்தவில்லையென்றால் இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு பாதிப்பதோடு, நாட்டின் வளர்ச்சியும் தடைப்படும். சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. வெளியுறவுத்துறை கொள்கைகளை மேம்படுத்தி, அண்டை நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதில் ஜெய்சங்கர் பின்தங்கி வருகிறார்’’ என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஆனால் சீன ஆதிக்கம் குறித்து ஒரு கூட்டத்தில் பேசிய ஜெய்சங்கர், ``சீனாவைக் கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை. உலக அரசியல் என்பது போட்டிகள் நிறைந்த ஒரு விளையாட்டுக் களம். சீனா ஒரு பெரிய பொருளாதார நாடு. எனவே, தனது பொருளாதார வளங்களை மற்ற நாடுகளில் பயன்படுத்தி, சீனாவுக்குச் சாதகமாகக் களத்தை வடிவமைக்க முயலும். அதை நாம் குறைசொல்ல முடியாது. ஆனால், அந்த விஷயத்தில் சீனாவைவிட நாம் நன்றாகச் செயல்பட வேண்டும்’’ என்றிருந்தார்.

ஆக வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் சீனாவின் நாடகங்களை பற்றி தெள்ளத்தெளிவாக அறிந்து அதற்கேற்ப உலக அரங்கில் பல்வேறு நகர்த்தல்களை செய்து கொண்டு இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். சீனாவை சுற்றி உள்ள 17 நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாக உள்ளன என்பதும் உலகம் அறிந்த விஷயம்.

இதற்கு பதிலடி தர சீனா நம் அண்டை நாடுகளை வளைத்து போடுகிறது. ஆனால் இதில் இந்தியா நிச்சயம் வேடிக்கை பார்க்காது என்பதும், சீனாவின் நகர்வுகளுக்கு துல்லியமாக பதிலளிக்கும் என்றும் அதிகாரிகள் மிகுந்த தெளிவுடன் பதிலளித்து வருகின்றனர். உலக அரசியல் விளையாட்டுக்களத்தில் சீனா முந்துவது போன்ற ஒரு தோற்றம் தான் உருவாகியிருக்கிறது.

என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் எனவும் பா.ஜ.க.,வை சேர்ந்த சிலர் தெள்ளத்தெளிவாக கூறி வருகின்றனர். நாமும் பொறுந்திருந்து கவனிப்போம். என்ன தான் நடக்கிறது என பார்க்கலாம்.

Tags:    

Similar News