உலக நாடுகள் பங்கேற்கும் பருவநிலை மாற்ற மாநாடு : இன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்
உலக நாடுகள் பங்கேற்கும் பருவநிலை மாற்ற மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்.;
அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரையாற்ற உள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்பாடு செய்துள்ள இந்த பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சர்வதேச நாடுகள் பங்கேற்கின்றன. இன்று துவங்குகின்ற மாநாட்டில் இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 40 நாடுகளின் தலைவர்கள் 'வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பங்கேற்கின்றனர். இன்று மாலை இந்திய நேரப்படி மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை பிரதமர் மோடி இந்த மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.
உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து 2030ம் ஆண்டின் பருவநிலை இலக்கை அடையம் வகையில் செயல்பட வேண்டும்' என்ற தலைப்பில் பிரதமர் மோடி பேச உள்ளார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இம்மாநாட்டில் பருவநிலை மாற்றம், காற்று மாசுபாட்டை குறைக்கும் நடவடிக்கைகளுக்கு நிதியுதவி, தூய எரிசக்தி சார்ந்த தொழில்நுட்ப கண்டு பிடிப்புகளை ஊக்குவித்தல் போன்ற கருத்துக்களை உலகத் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.
மாநாட்டின் இறுதியில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் நவம்பரில் நடைபெற உள்ள ஐ.நா. பருவ நிலை உச்சி மாநாட்டில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.