முகப்பருவால் எரிச்சலா...? இத மட்டும் பண்ணுங்க... அப்றம் பாருங்க...!
பன்னீர் - எலுமிச்சைச் சாறு, சந்தனம், ரோஜா மொட்டு,வேப்பிலை இதனை பயன்படுத்தினால் முகப்பரு எப்படி சரியாகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.
முகப்பரு:
13வயது முதல் 19 வயது வரை உள்ள டீன் ஏஜினரை பாடாய்ப்படுத்தும் பிரச்சனை . பலவகையான கிரீம்களையும் சோப்புகளையும் பயன்படுத்தினாலும், தீர்வு என்னவோ கிடைக்கவில்லை. இதனால் ஏற்படும் மனஉளைச்சலும் தாழ்வுமனப்பான்மையும் கடுமையானவை. வெளியில் செல்லும்போதும், பொது நிகழ்ச்சிகள்,திருமண நிகழ்வுகளில் பங்கேற்கும்போதும் போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும்போதும் முகப்பரு தரும் சங்கடம் மோசமானது. சில பருக்கள் வலி, அரிப்பை ஏற்படுத்துவதோடு, மறைந்தாலும் தழும்பை உருவாக்கி முக அழகைக் கெடுக்கின்றன. முகப்பருவில் இருந்து விடுதலையே கிடையாதா? இதற்கான தீர்வுதான் என்ன? வாங்க பார்க்கலாம்.
முகப்பரு வர காரணம் என்ன ?
சருமத்துக்கு அடியில் உள்ள செபேசியஸ் சுரப்பிகள் எண்ணெய் போன்ற வழுவழுப்பான திரவத்தைச் சுரக்கும். இதை, சீபம் என்பார்கள். உடல் முழுதும் இந்த சுரப்பி இருந்தாலும், இந்தத் திரவம் முகத்தில் கன்னம், மூக்கு, நெற்றி ஆகிய பகுதிகளில்தான் அதிகமாகச் சுரக்கும். இது சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைப்பதோடு சருமம் வறட்சி அடையாமல் பாதுகாக்கும் பளபளப்பான தோற்றம் தரும். மேலும் முகத்தசைகள் சுருங்கி விரியவும் இந்தச் சுரப்புகள் உதவும். பருவ வயதில் ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோன் சுரக்கத் தொடங்கும். சிலருக்கு ஆண்ட்ரோஜன் சுரப்பு அதிகமாகும்போது அது சீபத்தையும் அதிகமாகச் சுரக்கச்செய்கிறது. இதனால் முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகரித்து பருக்கள் உருவாகின்றன. காற்றில் உள்ள கண்ணுக்குத் தெரியாத தூசுக்கள் பருக்களில் ஒட்டிக்கொள்ளும்போது பாக்டீரியா தொற்று ஏற்பட்டு முகப்பரு உருவாகிறது.
முகப்பரு நீங்க சில வழிகள்:
பன்னீர் - எலுமிச்சைச் சாறு:
எலுமிச்சைச் சாறு, ரோஜாவால் தயாரிக்கப்பட்ட பன்னீர் இரண்டையும் சம அளவு எடுத்துக் கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் ஊறவைத்து. பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் மூன்று நாட்கள் இவ்வாறு செய்துவந்தால் முகப்பரு மறைந்துவிடும். எலுமிச்சைச் சாற்றைத் தனியாக முகத்தில் தேய்க்கக் கூடாது. இதில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தைப் பாதிக்கும். பன்னீர் வாங்கும்போது அதன் தரத்தைப் பரிசோதித்து வாங்கிப் பயன்படுத்துவது அவசியம்.
சந்தனம்:
சந்தனத்தூளைப் பன்னீரில் குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு செய்துவந்தால் பருத்தொல்லை நீங்கும். சந்தனக் கட்டையைப் பன்னீர் விட்டு அரைத்து முகத்தில் தடவினால் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.
ரோஜா மொட்டு:
ரோஜா மொட்டுக்களை எடுத்துச் சூடான நீர் விட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின் அந்த நீரை வடிகட்டி முகத்தில் பூசி அரை மணி நேரம் ஊறிய பின் துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு வாரத்துக்கு ஒரு முறை செய்துவர முகப் பருக்கள் நீங்கி சருமம் பொலிவடையும்.முகத்தில் அழகு சேர்க்கும்.
வேப்பிலை:
வேப்பிலை சிறந்த கிருமி நாசினி. கொழுந்து வேப்பிலையைத் தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ முகப்பருக்கள் நீங்கும். உடனே தீர்வு இல்லை தொடர்ந்து செய்து வந்தால் சரி ஆகும் முகம் பிரகாசமா தெரியும்.
சோற்றுக்கற்றாழை:
சோற்றுக்கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. காற்றாழையின் நடுப்பகுதியில் உள்ள சோற்றை எடுத்து நீரில் நன்றாக அலசியபின் சோற்றை கூழாக்கி முகத்தில் தடவிவர பருவுக்கு நல்ல பலன் கிடைக்கும். சருமம் மென்மையாகும்.
குப்பைமேனி இலை :
அருகம்புல் பொடியையும் குப்பைமேனி இலைப் பொடியையும் குளிர்ந்த நீரில் கலந்து பருக்களில் தடவலாம். இது சிறந்த கிருமி நாசினியாகச் செயல்பட்டு பருவைக் குணமாக்கும்.
ஃபேஸ் பேக்குகள்:
ஆப்பிள் மற்றும் பப்பாளிச் சாற்றை முகத்தில் பூச வேண்டும். ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசிவர பருக்கள் மறையும். வாரம் இருமுறை இதைச் செய்ய வேண்டும்.
முகப்பரு வராமல் இருக்க சில கட்டுப்பாடுகள் :
1. பவுடர், அழகு சாதன கிரீம்கள் உபயோகப்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
2. உணவு கட்டுப்பாடு முக்கியம்.
3. தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
4. பருக்களை கிள்ளவோ ,அழுத்தவோ கூடாது.
5. நம் உடலை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.