உலகத்தில் சிறந்தது எது?
உலகில் சிறந்தது எது என்று நீங்கள் முடிவு செய்த பின்னர், இந்த செய்தியை படித்துப்பாருங்கள். உங்கள் முடிவு சரியானதா என்பது புரியும்.
"எங்கள் நிறுவனத்தில் மானேஜ்மென்ட் ட்ரெய்னியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் எட்டு பேருக்கும் பாராட்டுகள்.
"ஆப்டிட்யூட் டெஸ்ட், க்ரூப் டிஸ்கஷன், இன்டர்வியூ என்று பல படிகளை நீங்கள் ஏற்கெனவே தாண்டி வந்திருக்கிறீர்கள். இப்போது உங்களுக்கு இன்னொரு க்ரூப் டிஸ்கஷன் இருக்கிறது.
"பயப்படாதீர்கள். இது நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதை பாதிக்காது. ஒரு நோக்கத்துக்காக நாங்கள் இதை வைத்திருக்கிறோம். இந்த க்ரூப் டிஸ்கஷனை நீங்கள் உங்களுக்குள் நடத்திக் கொள்வீர்கள். நாங்கள் யாரும் உங்களை கவனித்து மதிப்பெண் கொடுக்கப் போவதில்லை.
"அரை மணி நேரம் கழித்து நான் வருவேன். நீங்கள் என்ன முடிவுக்கு வந்தீர்கள் என்று சொன்னால் மட்டும் போதும். மறுபடியும் சொல்கிறேன். உங்கள் செலக்ஷன் ஃபைனல். அதனால் கவலைப்படாமல் இதைச் செய்யுங்கள். நீங்கள் விவாதிக்க வேண்டிய தலைப்பு 'உலகத்தில் சிறந்தது எது?'" என்றார் பர்சனல் ஆஃபீஸர்.
சொல்லி விட்டு அவர் போய் விட்டார். வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 பேரும் கொஞ்சம் கவலையுடனும், கொஞ்சம் குழப்பத்துடனும் வட்டமாக அமர்ந்தனர்.
"இது நம்ம செலக்ஷனை பாதிக்காதுன்னு சொன்னாலும், கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. ஏதாவது டிராப் இருக்குமான்னு சந்தேகமா இருக்கு!" என்று ஒருவன் ஆரம்பிக்க, மற்றவர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
"பர்சனல் ஆஃபீஸர் தான் கவலைப்பட வேண்டாம்னு சொல்லி இருக்காரே. அதனால நாம கொஞ்சம் ரிலாக்ஸ்டாவே இருப்போம். முதல்ல இந்த டாபிக் கொஞ்சம் விசித்திரமா இருக்கு. நாம பாக்கப் போற மானேஜ்மென்ட் வேலைக்கும், இந்தத் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்?"
"உலகத்தில் சிறந்தது எதுன்னு ஒரு பழைய சினிமாப் பாட்டு இருக்கு. அதில கதாநாயகி உலகத்தில சிறந்தது காதல்னு சொல்லுவா, கதாநாயகன் தாய்மைன்னு சொல்லுவான். இதிலேர்ந்து நாம ஆரம்பிக்கலாம்."
"அப்படிப் பாத்தா காதல், தாய்மை இரண்டுக்கும் அடிப்படை அன்பு தான். அதனால உலகத்தில சிறந்தது அன்புன்னு சொல்லலாமா?" "நாம இப்ப வேலையில சேந்திருக்கறதால கடமை தான் முக்கியம்னு சொல்லலாமே."
"கடமை, அன்பு, காதல், பாசம்னு சினிமா மாதிரி போய்க்கிட்டிருக்கு. தேசபக்தின்னு சொல்லலாமே!"
"அதுவும் சினிமா சென்டிமென்ட்தான்!"
"தர்மம்?"
"தர்மம்னா அறமா அல்லது தர்மம் செய்யறதா அதாவது கொடையா?"
"தர்மம், அன்பு, பாசம் இதெல்லாம் பழைமையான விஷயங்கள். நாம இருக்கறது ஒரு விஞ்ஞான யுகத்தில. அதனால உலகத்தில சிறந்தது விஞ்ஞான அறிவு அதாவது, சுருக்கமா அறிவுன்னு சொல்லலாமே!"
"ஆமாம். அறிவுன்னா அது விஞ்ஞான அறிவாகவும் இருக்கலாம், மெய்ஞ்ஞான அறிவாகவும் இருக்கலாம். பழமை, புதுமை இரண்டுக்குமே அறிவுங்கற கருத்து பொதுவா இருக்கு. அதனால அறிவு தான் உலகத்தில சிறந்த விஷயம்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும்."
"என்ன? எல்லாரும் ஒத்துக்கறீங்களா? அறிவுன்னு முடிவு செஞ்சுடலாமா?"
"இருங்க. எனக்கு இன்னொண்ணு தோணுது. அறிவுங்கறது உயர்ந்த விஷயம் தான். ஆனா அறிவுங்கறது எதைக் குறிக்குது? அதாவது விஞ்ஞான அறிவுன்னு சொல்றமே, அது என்ன?"
"விஞ்ஞான அறிவுன்னா விஞ்ஞானத்தால் நாம அறிஞ்ச உண்மை." "ஆங், அது தான். உண்மை! எனவே உலகத்தில சிறந்தது உண்மைன்னு சொல்றது தான் பொருத்தமா இருக்கும்." மற்றவர்கள் இதை ஒப்புக் கொள்வதா என்ற யோசனையில் இருந்தார்கள்.
"இப்படிப் பாருங்க. உண்மைங்கறது நாம இங்கே விவாதிச்ச எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும். பாசம், அன்பு, தேசபக்தின்னு எதை எடுத்துக்கிட்டாலும் அவற்றோட தன்மையைப் பத்தி நாம என்ன சொல்றோம்? உண்மையான அன்பு, உண்மையான பாசம் அப்படியெல்லாம் சொல்றோம் இல்ல? அதனால உண்மைங்கறது சிறந்தது மட்டும் இல்ல, எல்லா விஷயங்களையும் சிறந்ததாக ஆக்குவது. எனவே உலகத்தில் எல்லாவற்றையும் விடச் சிறந்தது உண்மைன்னு சொல்லலாம் இல்ல?" மற்ற ஏழு பேரும் கை தட்டி அவன் சொன்னதை ஏற்றுக் கொண்டனர்.
"என்ன உலகத்தில் சிறந்தது எதுன்னு பேசி ஒரு முடிவுக்கு வந்துட்டீங்களா?'" என்றார் பர்சனல் ஆஃபீசர்
"ஆமாம் சார்!"
"என்ன அது?"
"உண்மை!"
"பிரமாதம்.ஒரு விஷயம் சொல்றேன். ஆச்சரியப்படுவீங்க! நம்ம கம்பெனியோட மோட்டோ என்ன தெரியுமா? 'உண்மை'. இங்க பாருங்க. நம் கம்பெனியோட லோகோ. அதில உண்மைன்னு எழுதி இருக்கா?"
"இல்லையே சார்!"
"அது கண்ணுக்குத் தெரியாது. லோகோவோட நடுவில ஒரு சின்ன வட்டம் இருக்கா?"
"ஆமாம்."
"அந்த வட்டத்துக்குள்ள இந்தியாவில் இருக்கிற மொழிகள் மற்றும் உலகத்தின் முக்கியமான மொழிகள் உட்பட 36 மொழிகளில் உண்மைன்னு ரொம்ப சின்னதா செதுக்கியிருக்கு. லென்ஸ் வச்சுப் பாத்தாத்தான் தெரியும். உண்மையை நாம தேடணும்கற கருத்தைப் பிரதிபலிக்கிற மாதிரி இப்படி உருவாக்கி இருக்காரு நம் கம்பெனியோட நிறுவனர்" என்றார் பர்சனல் ஆஃபீஸர்.
இதனையே திருவள்ளுவரும் துறவறவியல் அதிகாரம் 30ல் வாய்மை தலைப்பில் குறள் 300ல் கூறியுள்ளார்.
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
இதன் பொருள்:
நான் உண்மையாகக் கற்றறிந்த நூல்கள் எதிலும் வாய்மையை விடச் சிறந்த அறம் வேறு எதுவும் இல்லை.