பாராட்ட மனமில்லாத மனிதர்கள்..!
நாம் மிக அதிகளவு சிந்திக்கின்றோம். ஆனால் மிக மிக குறைந்தளவே அக்கறை கொள்கிறோம்.
பணம் இருந்தால் மட்டும் சர்க்கரை நோயை குணமாக்கி விடலாம் என நினைக்கின்றோம். நாம் அனுபவிக்க வேண்டிய கர்ம வினைகளின் வலிகளை அனுபவித்துத் தான் ஆக வேண்டும். நம்மை விழ வைக்கவும் அழ வைக்கவும் எல்லோராலும் முடியும். ஆனால் நம்மை மீண்டும் எழ வைக்க நம் தன்னம்பிக்கை ஒன்றால் மட்டுமே முடியும்.
வாழ்க்கையில் கஷ்டங்கள் வலிமையானது. அதை விட வலிமையானது நீங்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. இந்த உலகில் யாரை நம்புவது என்று தோணும் போது, உங்கள் தன்னம்பிக்கையை மட்டும் நம்புங்கள். நீங்கள் உறுதியாக வெற்றி பெறுவீர்கள்.
ஒரு கதையை கேளுங்கள்
ஒரு சமயம், ஒரு வேட்டைக்காரன் உலகிலேயே நீர்மேல் நடக்கும் தனிச்சிறப்பு வாய்ந்த இனத்தைச் சார்ந்த ஒரு பறவை நாயை வாங்கி வந்தான். அந்த அற்புதம் நிகழ்வதைப் பார்த்தபோது அவனால் அவனது கண்களையே நம்ப முடியவில்லை. தனது நண்பர்களிடம் தனது புதிய மிருகத்தைக் காட்டி பெருமையடிக்கலாம் என்று எண்ணி மிகவும் சந்தோஷப்பட்டான்.
ஒரு நாள் அவன் தனது நண்பன் ஒருவனை அழைத்துக் கொண்டு வாத்து வேட்டைக்குச் சென்றான். அவர்கள் சில வாத்துக்களைச் சுட்டனர். தாங்கள் சுட்ட அந்தப் பறவைகளை ஓடிப்போய்க் கொண்டுவருமாறு அந்த வேட்டைக்காரன் தனது பறவை நாய்க்கு ஆணையிட்டான்.
நாள் முழுக்க அந்த நாய் நீரின் மேல் ஓடி ஓடிப் பறவைகளைக் கொண்டு வந்த வண்ணம் இருந்தது. அந்த வேட்டைக்காரன் அந்த அதிசயிக்கத்தக்க நாயைப்பற்றி வந்தவன் ஏதாவது புகழ்ந்து சொல்ல மாட்டானா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால், துரதிருஷ்டவசமாக வந்தவன் வாயையே திறக்கவில்லை.
வெகுநேரம் கழித்து அவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அவன் தனது நண்பனிடம், "எனது நாயிடம் ஆச்சரியமாக எதையாவது கவனித்தாயா?” என்று கேட்டான். அதற்கு அவனது நண்பனோ, "ஆமாம். உண்மையிலேயே ஒரு அசாதாரணமான விஷயத்தைக் கவனித்தேன். உனது நாயால் நீந்த முடியவில்லை" என்று பதிலளித்தான்.
எந்த நேரமும், எந்த சூழ்நிலையிலும் இதுபோன்று குறைகளை மட்டுமே உற்று நோக்கி குறை காணும். பாராட்ட மனமில்லாத மனிதர்களிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும்.
‘‘நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு, அவரவர் பண்புஅறிந்து ஆற்றாக் கடை".