ஏமாந்த காகம்..! படத்தைக்கொண்டு சிந்திக்க வைக்கும் ஒரு சிறுகதை..!
பிறவி என்பது நாம் முடிவு செய்வதல்ல. இயற்கை நமக்கு அளித்த வரத்தின்படி யாருக்கு என்ன பிறவி என்பது அவனால் தீர்மானிக்கப்படுகிறது.
ஏமாந்த காகம்
ஒரு காகத்துக்கு தான் கருப்பாக இருக்கிறோம் என்ற கவலை இருந்தது. அதை அடிக்கடி தன சகாக்களிடம் சொல்லி வருத்தப்படும். இது நமக்கு கடவுள் கொடுத்த உருவம். அதில் நிறமும் அவரே தீர்மானித்தது. இறைவன் படைப்பில் கருப்பாக எம்மை படைத்ததற்கு காரணமும் இருக்கும் என்று சகாக்கள் கூறினாலும் அதை அந்த காக்கையால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஒருநாள் ஒரு பெரிய மரத்தில் அமர்ந்து தனது சோகத்தை நினைத்து வருந்தியபோது ஒரு இனிமையான குரல் கேட்டது, காக்கையே..என்ன சோகமா..?
குரல் வந்த திசைநோக்கி காக்கை திரும்பிப்பார்த்தது. ஒரு அழகான பெண்தேவதை வானத்தில் தெரிந்தது. 'என்ன காகமே சோகமா..?' என்று மீண்டும் தேவதைக் கேட்டது.
'ஆமாம், தேவதையே.." என்றது தலையை கவிழ்த்தவாறே. அப்படி என்ன சோகம்..? நல்ல வளமான பூமியில் வாழ்கிறாய். நல்ல உணவு கிடைக்கிறது. சமூகமாக வாழ்வதில் உங்கள் குடும்பத்தினருக்கு சிறந்த பெயர் உண்டு. பின்னர் என்ன சோகம்?
'எல்லாம் இருந்தும் எனது நிறம் மட்டும் கருப்பாக இருப்பது எனக்கு கவலையைத் தருகிறது.'
அப்படியா..சரி உனக்கு என்ன நிறம் வேண்டும்..?
சிறிது யோசித்த காகம். தங்கம் என்றால் எல்லோருக்கும் பிடித்த ஒன்று. மினுமினுப்பாக மின்னலாம். என்று மனதுக்குள் எண்ணியவாறு, எனக்கு தங்கநிறம் வேண்டும்' என்றது.
சரி. உனக்கு இரண்டு வரம் தருவேன். ஒன்று தங்க நிறமாக மாறுவதற்கு. இன்னொன்று.. நீயே தேவைப்பட்டால் கேட்பதற்கு. ஆனால் அதை நல்லதற்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். ஒருவேளை நீ தவறாக பயன்படுத்தினால் உனக்கு கொடுத்த முதல் வரமும் தானாக மறைந்துவிடும் என்று கூறிய தேவதை, காகத்தின் உடல், அதன் அலகு ஆகியவையை தங்க நிறமாக்கிவிட்டு தலையை மட்டும் கறுப்பாக விட்டுச் சென்றது.
அந்த கருப்பு நிறம் மற்றும் மற்ற இடம் தங்கநிறமாக இருந்ததால் காகத்தைப் பார்ப்பதற்கு அது ஒரு தனி அழகாகவே இருந்தது. மற்ற காக்கைகள்,அடடே..சொன்ன மாதிரியே அவளது நிறத்தை மாற்றிக்கொண்டாளே என்று தங்களுக்குள் பேசிக்கொண்டன. தங்க காக்கைக்கு கர்வம் வந்துவிட்டது.
'நான்தான் இனிமேல் நமது இனத்துக்கே அரசி. எல்லோரும் என் இருப்பிடத்துக்கு தினமும் உணவுகள் கொண்டுவந்து தரவேண்டும். இல்லை என்றால் தேவதை எனக்கு ஒரு வரம் தந்துள்ளது. அந்த வரத்தை பயன்படுத்தி உங்களை எல்லாம் சபித்துவிடுவேன்' என்று மிரட்டியது.
அதில் ஒரு புத்திசாலி காகம், எங்கே உன் வரத்தை ஒருமுறை எங்களுக்கு சோதித்துக் காண்பி. அப்புறம் நம்புகிறோம் என்றது.
தங்க காக்கை தேவதை ஒருமுறை பயன்படுத்தும் வரம் என்பதை மறந்து, 'இந்த மரத்தை எரித்து காண்பிக்கிறேன்' என்று சபித்தது. அந்த மரமும் எரிந்து போனது. அதே நேரம் தேவதை கொடுத்த வரத்தை தவறாக பயன்படுத்தியதால் மீண்டும் தங்கநிறம் மாறி சாதாரண காகமாக மாறிப்போனது.
வரத்தை சரியாக பயன்படுத்தத் தெரியாத அறிவற்ற காகம், ஏமாந்துபோனது.
பிறவி யார் கொடுத்தும் வருவது இல்லை. யார் யாருக்கு என்ன பிறவி என்பதை நாம் எப்படி தீர்மானிக்கமுடியும்?
-கந்தசாமி மாதவன்.