புற்று நோயாளிகளை புரிந்து கொள்வோம், புறக்கணிக்க வேண்டாம்

பல குடும்பங்களில், புற்று நோயாளிகளையும் வெறுத்து ஒதுக்கிவிடுகின்றனர். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். யார் உடலில் வேண்டுமானாலும் புற்று செல் விதைக்கப்பட்டு, சரியான தருணத்திற்காகக் காத்திருக்கலாம்.;

Update: 2024-01-28 05:31 GMT

புற்றுநோய் செல் 

திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி புற்று நோய்க்கு ஆளாகி, சிகிச்சை பயனின்றி காலமானார். மரணம் என்பது இயற்கை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், அது பவதாரணி போன்ற இளையவர்களுக்கு வரும்போது மனம் வலிக்கவே செய்கிறது.

ஊடகங்களில் சில, 'புற்று நோய்க்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்ட பவதாரணி இறந்துவிட்டார்' என்று சொன்னது. ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டதாலேயே பவதாரணிக்கு மரணம் நேர்ந்ததாகக் குறிப்பிடுவது மிகவும் தவறான அணுகுமுறை. சென்னை அடையாறு உள்பட நாட்டில் உள்ள பல அலோபதி புற்றுநோய் மையங்களுக்குச் சென்று பார்த்தால், தெரியும் தினமும் எத்தனைபேர் இறந்துகொண்டிருக்கிறார்கள் என்று. புற்றுநோய் யாருக்கு வேண்டுமானாலும் வரும், எந்த வயதினருக்கும் வரும்.

புற்று நோய்: வலியும், வாழ்வும்

அனைத்துத் தரப்பினருமே பெயரைச் சொல்வதற்குக் கூட அச்சம்கொள்ளும் நோயாக புற்று நோய் இருந்து வருகிறது. அசுர வளர்ச்சியடைந்துவிட்ட தகவல்தொடர்பு, வாகன வசதி, வீட்டுசாதன வசதி போன்ற தொழில்நுட்ப சாதனைகள் ஒருபுறம் என்றால், மலினமாகிப்போன மிகை இரத்த அழுத்தம், மிகை சர்க்கரை, மிகைக் கொழுப்பு, இதய இரத்த நாளங்களில் அடைப்பு, பழுதடைந்த சிறு நீரகங்களுக்கான டயாலிசிஸ் என மக்களின் அன்றாட வாழ்க்கையில் பழகிப் போன வேதனைகள் மறுபுறம் என்பது இன்றைய நிலையாக உள்ளது.

மக்களிடையே புற்றுநோய் பரவி வரும் வேகத்தைப் பார்த்தால், அடுத்த பத்து ஆண்டுகளில் மற்ற நோய்களைப் போல் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு சொல்லாகப் புற்றுநோயும் மாறிவிடக்கூடும்.

புற்று எப்படி உருவாகிறது?

உயிரினங்கள் அனைத்திற்கும், உடல் கட்டமைப்புக்கு அடிப்படையாக அமைவது ‘செல்’ (Cell) ஆகும். ஒரு செல் இரண்டாகப் பிரிந்து, இரண்டு நான்காகி, நான்கு எட்டாகி,  இப்படியே பிரிந்து பிரிந்து எண்ணிக்கையில் உயர்வது ‘செல் பெருக்கம்’ இதன் காரணமாகவே நாம் உயிர் வாழ்கிறோம்.

இந்த செல்களின் வளர்ச்சி, மற்றும் பல்வேறு செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கென்றே சில குறிப்பிட்ட மரபணுக்கள் (ஜீன்கள்) உள்ளன. ‘ஆங்க்கோ மரபணு’ (Onco genes) செல்கள் எப்போது பிரிய வேண்டும் எனக் கட்டளையிடுகின்றன. ‘கட்டி கட்டுப்படுத்தும் மரபணு’ (Tumor Suppression gens) செல்கள் எப்போதெல்லாம் பிரியக் கூடாது என்று கட்டளை இடுகின்றன. ‘தற்கொலை மரபணு’ (Suicide genes), ஏதேனும் தவறு நிகழும் போது, செல்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ள வேண்டும் என்கிற கட்டளையைப் பிறப்பிக்கின்றன. ‘டி.என்.ஏ.’ பழுது நீக்கும் மரபணு (DNA Repair gens) ‘பழுதடையும் டி.என்.ஏ-வை சரி செய்வதற்கான கட்டளையை செல்களுக்குப் பிறப்பிக்கின்றன.

மரபணு கோளாறு காரணமாக ‘திட்டமிட்ட செல் மரணம்’ (Programmed Cell Death) என்னும் செயல் தடைப்படும்போது, புற்று உருவாக ஆரம்பிக்கின்றது. வளர்வதும் பிரிவதும், பெருகுவதுமாக இருக்கும் இந்த ‘ராட்சச செல்கள்’ (Giant Cells) தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் செயலை மறந்து விடுகின்றன என்பதுதான் புற்று உருவாவதற்கான காரணம். இப்படிப் பல்கிப் பெருகும் புற்று செல்கள், நம் உடலில் உள்ள நல்ல செல்களையும் அழிக்க ஆரம்பிக்கின்றன.

நுண்ணோக்கியில் பார்த்த்தால், புற்று செல்களில் சிலவற்றின் வடிவம் ‘நண்டு’ வடிவில் இருக்கும். ‘நண்டு’ வடிவில் வானில் காணப்படும் விண்மீன் தொகுப்பு) ‘கேன்சர்’(Cancer) என்று அழைக்கப்படுகிறது. அப்படித் தான், ‘நண்டு’ வடிவில் இருந்த புற்று செல்களை, ஆரம்பத்தில் ‘கேன்சர்’ என்று அழைத்ததால், பின்னால் அந்தப் பெயரே நிலைத்து விட்டது.

யார் யாருக்குப் புற்று நோய் வரும்?

சாதாரண செல்கள் ஆக்சிஜனில் உயிர் வாழும் என்றால், புற்று செல்கள் சர்க்கரை நொதியில் உயிர் வாழக் கூடியவை. புற்று யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், எந்த வயதினருக்கும் வரலாம். சில புற்று நோய்கள் எந்தவித அறிகுறியையும் காட்டுவதில்லை. காட்டப்படும் ஒருசில அறிகுறிகளும் நம் கவனம் ஈர்ப்பதில்லை. ஒருவருக்கு புற்றுநோய் இருப்பது, பெரும்பாலும் தற்செயலாகவே கண்டறியப்படுகிறது.

ஒருவருடைய உடலில் புற்று இருப்பது தெரிய வரும்போது அனேகமாக அது முற்றிய நிலையை அடைந்திருக்கக் கூடும். புற்றின் வளர்ச்சியைப் பொருத்து, நோயின் தாக்கம் நான்கு நிலையாகப் பிரிக்கப்படுகிறது. நான்காவது நிலை (Stage IV), நோய் முற்றி, நோயாளியின் இறுதிக் கட்டத்தைக் குறிப்பது ஆகும்.

உடலில் எங்கோ ஓர் இடத்தில் புற்று விதைக்கப்பட்டாலும் புதிய இடத்தில் புதிய சூழலில் வளர்வது எளிதல்ல. எனினும், புதிய புற்று செல் வளர முடியாமல் நெடுங்காலம் முடங்கி ஓய்ந்து கிடந்தாலும்கூட, வளர்ச்சிக்கு ஏற்ற சூழ் நிலையை எதிர்பார்த்துக் காத்திருக்குமே தவிர, அழிந்து விடாது.

ஒரு செல்லின் ‘மரபணுக் கட்டமைப்பு’ சீர் குலைந்து, படிப்படியாக மாற்றமடைந்து, புற்று நோய் உச்சகட்ட வளர்ச்சி அடைய முப்பது ஆண்டுகள் கூட ஆகலாம்.

ஓர் இடத்தில் உருவான புற்று செல்கள் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவும் போது, அது ‘துணை நிலை புற்று’ எனப்படுகிறது. இந்த நிலை மிகவும் ஆபத்தானது. சிகிச்சை அளிக்க சிக்கலானது. தொண்ணூறு விழுக்காடு புற்று நோய் மரணங்களுக்கு இதுவே காரணமாகிறது.

உடலின் எந்த பகுதியைப் புற்று தாக்குகிறது என்பதை அடிப்படையாக வைத்து நூற்றுக்கு மேற்பட்ட புற்று நோய் வகைகள் உள்ளன. என்றாலும் அவை அனைத்தும் ஐந்து தொகுதிகளுக்குள் அடக்கப்பட்டு விடுகின்றன.

1. ‘கார்சினோமா’(Carcinoma) என்பது தோல், சளிப் படலங்கள் சுரபிகள் போன்றவற்றைத் தாக்கக் கூடியவை.

2. ‘லெக்வேமியா’(Laukemia) இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அழித்துவிடும். இது, ‘இரத்தப் புற்று நோய்’ (Blood Cancer) என்றும் அழைக்கப்படுவதுண்டு.

3. ‘சர்கோமா’(Sarcoma) என்பது தசை, இணைப்பு சவ்வு, எலும்பு ஆகியவற்றைத் தாக்கக் கூடியது.

4. ‘லிம்போமா’ (Limphoma) என்பது, நோய் எதிர்ப்பு அமைப்பைத் (Immune System) தாக்கி, அதன் மூலம் வளர்வது.

5. ‘அடினோமா’ (Adenoma) தைராய்டு, பிட்யூட்டரி, அட்ரினல் போன்ற நாளமில்லா சுரப்பிகளைத் தாக்கி அதன் காரணமாக வளர்வது.

பரம்பரை உள்ளிட்ட எத்தனையோ காரணங்கள் புற்று வருவதற்காகச் சொல்லப்பட்டாலும்கூட புகையிலை, ஆர்சனிக், ஆஸ்பெஸ்டாஸ், கதிர்வீச்சு, வாகனப் புகை ஆகியவற்றில் உள்ள கார்சினோஜன்கள், பற்பசையில் இருக்கும் ஃப்ளூரைடு, வறுத்த மீன், சிகரெட் புகை, கல்லீரல் சிதைவு போன்றவை முதன்மையாகச் சொல்லப்படுகின்றன.

எக்ஸ்-கதிர், எம்.ஆர்.ஐ. , சி.டி. ஸ்கேன் போன்ற நோயறியும் சோதனைகளால், புற்று இருப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பதை அறிந்துகொள்ளலாம். என்றாலும், ‘பயாப்சி’ (Biopsy) சோதனைதான் புற்று இருப்பதையும், அது எந்த வகையைச் சேர்ந்தது என்பதையும் உறுதி செய்யும். புற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் உடல் உறுப்பிலிருந்து வெட்டி எடுக்கப்படும் சிறிய தசைப் பகுதியை நுண்ணோக்கியில் ஆய்வு செய்யும் முறைதான், ‘பயாப்சி’ சோதனை ஆகும்.


என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன?

புற்றுநோய்க்கான மருத்துவர்கள் ‘ஆங்க்காலஜிஸ்ட்’ (Ongologist) எனப்படுவர். புற்று நோய்களின் வகையைச் சார்ந்து, ஆங்க்காலஜிஸ்டுகளும் தனித் தனியே உள்ளனர். ஒருவரே அனைத்து விதமான புற்று நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பார் என்று எதிர்பார்ப்பது தவறு. முதலில், ஏதேனும் ஒரு பொது மருத்துவர்தான், புற்று இருப்பதற்கான சாத்தியத்தை சந்தேகிக்கிறார். பின் அவர் வழிகாட்டலில், அரசு அல்லது தனியார் புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்ப சிகிச்சைக்காகச் செல்லலாம்.

அறுவைச் சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, கீமோ சிகிச்சை, மருந்து சிகிச்சை என்பன பொதுவாகப் பயன்படுத்தப்படும் புற்று நோய்க்கான சிகிச்சை முறைகள்.

இவை தவிர, நோய் எதிர்ப்பு சிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை, மரபணு சிகிச்சை போன்ற மேலும் பல சிகிச்சை முறைகளும் உண்டு.

குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே இருக்கும் புற்றுக் கட்டி’ அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படுகிறது. மிகக்குறைந்த ‘அரை-ஆயுள்’ கொண்ட ‘ரேடியோ ஐசடோப்'புகளில் வெளிப்படும் கதிர் வீச்சைக்கொண்டு, புற்று செல்களை அழிப்பது, கதிர்வீச்சு சிகிச்சை முறை ஆகும்.

கீமோ சிகிச்சை என்பது, புற்று செல்களை அழிக்கும் திறன்கொண்ட வேதிப் பொருள்களை ஊசி மூலம் இரத்தத்தில் செலுத்துவது ஆகும். இந்த சிகிச்சை நோயாளியை மிகவும் பலவீனமடையச் செய்யும். பலருக்கு முடி கொட்டி விடுவதும் உண்டு. அதனால் கீமோ சிகிச்சைக்கு உள்ளானவர்கள், தலையில் ‘விக்’ வைத்துக் கொள்வதுண்டு. கதிர்வீச்சு மற்றும் கீமோ சிகிச்சை முறைகள் புற்று செல்களை அழிப்பதோடு நில்லாமல், நல்ல செல்களையும் அழித்துவிடும் ஆபத்தும் உண்டு.

பெண்களுக்கு வரும் மார்புப் புற்று நோய்க்கு,மார்பகங்களை அகற்றிவிட்டால் அத்தோடு பிரச்சினை தீர்ந்தது என்று அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மார்பகங்கள் இருப்பதன் காரணமாக, ‘மார்புப் புற்று’ பெண்களுக்கு மட்டுமே வரும் என்பதாக ஒரு பொதுக் கருத்து உள்ளது. ஆனால், அது ஆண்களுக்கும் கூட வரும் என்று சொன்னால் நம்பிக்கை வராதுதான். எனினும் அதுதான் உண்மை. இங்கிலாந்து நாட்டில் மட்டும், இது வரை முந்நூறுக்கும் மேற்பட்ட ஆண்களுக்கு மார்புப் புற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

எந்த ஒரு சிகிச்சை முறையைக் கொண்டும் புற்றுநோயைக் கட்டுப் படுத்தலாமே தவிர, முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்பது தான் உண்மை. புற்று நோய் தாங்க முடியாத அளவிற்கு வலியை ஏற்படுத்தக் கூடியது. பெரும்பாலான சிகிச்சை முறைகள் அப்படிப் பட்ட வலியைக் குறைக்கவே பயன்படுகின்றன.

புற்று நோய்க்கான சிகிச்சைக்கு நிறைய பணம் செலவாகும். ஆனாலும் பணம் மட்டுமே புற்று நோயாளியைக் காப்பாற்றி விடாது. புற்று நோயால் மரணம் அடைந்தவர்கள் பட்டியலில், பல உலகக் கோடீஸ்வரர்களின் பெயர்களும் இருப்பதே அதற்கு சான்றாகும்.

புற்றுநோயாளிகளுக்கான உணவு

இனி, புற்று நோயாளிகளின் உணவு முறை பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். அலோபதி மருத்துவ முறை, எவ்வித உணவுக் கட்டுப்பாட்டையும், புற்று நோயாளிகளுக்கென்று தனியே விதிப்பதில்லை. என்றாலும், சரியான உணவு முறையைத் திட்டமிடுவதன் வழியாக நல்ல செல்களை வலுவூட்டி, அவற்றால் புற்று செல்களைக் கட்டுக்குள் வைக்க முடியும் என்று நம்பப் படுகிறது.

பொதுவாக, அசைவ உணவைத் தவிர்ப்பது நல்லது.

ஆராக் கீரை, பிரண்டை போன்றவையும் கடற் பாசி (Spirulea) கோதுமைப் புல் (Wheat grass), எலுமிச்சைப் புல் (Lemon grass), பார்லி புல் (parly grass) போன்றவையும், கேரட், சோயா பீன்ஸ், கைக் குத்தல் அரிசி போன்றவையும், புற்றால் பாதிக்கப் பட்டவரின் உடலில் உள்ள நல்ல செல்களை வலுவூட்டும் சில உணவு வகைகள்.

புற்றுநோயாளியைப் புறக்கணிக்கக் கூடாது

புற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டவுடன், மரணம் தனது அருகில் வந்து விட்டதாக நோயாளி எண்ணத் துவங்கி விடுகிறார். புற்று நோய் கொடுக்கும் உடல் வலியோடு மரணம் பற்றிய பயமும் சேர்ந்து கொள்கிறது. நோய் பற்றிய புரிதல் சிறந்த உணவு முறை, மனத் திண்மை, உறவினர் மற்றும் நண்பர்களின் அன்பான ஆதரவு ஆகியவற்றால் மட்டுமே உடல் வலியையும் மன உளைச்சலையும் ஓரளவிற்கேனும் வெற்றி கொண்டு வாழ முடியும்.

ஒரு வேதனை தரும் செய்தி என்னவென்றால், பல குடும்பங்களில், புற்று நோயாளிகளையும் வெறுத்து ஒதுக்கிவிடுகின்றனர். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். யார் உடலில் வேண்டுமானாலும் புற்று செல் விதைக்கப்பட்டு, சரியான தருணத்திற்காகக் காத்திருக்கலாம்.

புற்று ஒரு தொற்று நோய் அல்ல. புற்று நோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும், கணவன் - மனைவி உறவு கொள்ளத் தடை ஏதும் இல்லை.

புற்றுநோயாளியைப் புறக்கணிக்காதீர்கள். அவர்களைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களிடம், பரிவுடனும், அன்புடனும் நடந்து கொள்ளுங்கள். புற்று வராமல் தவிர்க்கவும், புற்று நோயாளிகளைத் தவிர்க்காமல் இருக்கவும் தேவையான அனைத்தையும் செய்யுங்கள்.

அமெரிக்க நாட்டில் புற்று நோயாளிகளை இரு கூறுகளாகப் பிரித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒருபுறம், நிறைய பணம் செலவு செய்து, வழக்கமான சிகிச்சைகளை எடுத்துக் கொண்டவர்கள். மறுபுறம், அப்படிப்பட்ட சிகிச்சை எதுவும் எடுக்காமல் சரியான உணவைத் தெரிவு செய்து, உணவுக் கட்டுப் பாட்டுடன் வாழ்ந்தவர்கள். அந்த இரு பிரிவினருமே, சம அளவிலான ஆயுள்காலத்தையே கொண்டிருந்தார்கள் என்கிற கணக்கெடுப்பின் ஆய்வு முடிவு நம்மை வியக்க வைக்கிறது. என்றாலும், எந்த முறையைத் தெரிவு செய்து வாழ்வது என்பது புற்று நோயாளியும், அவரது குடும்பத்தினரும் மட்டுமே முடிவு செய்ய இயலும்.

Tags:    

Similar News