உடல் நலத்தின் படிக்கட்டுகள் பற்கள்: குழந்தைகளின் பற்களை பராமரிக்க டிப்ஸ்
உடல் நலத்தின் படிக்கட்டுகள் பற்கள்என்பதால் குழந்தைகளின் பற்களை பராமரிக்க சில டிப்ஸ்கள் இங்கே தரப்பட்டு உள்ளது.;
பற்கள் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் அதுவே பல நோய்களுக்கான காரணமாக அமைந்து விடும். அதிலும் குழந்தைகள் பற்கள் மீது உரிய கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் பல் பாதிப்பு,சிகிச்சைமுறை, பராமரிப்பு குறித்து திருச்சி அரசு மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் மூத்த உதவி பேராசிரியர் காயத்ரி கூறியிருப்பதாவது:-
ஆறு மாதம் ஆன குழந்தைகள் பால் குடித்த பிறகு சுத்தமான துணியால் வாய் மற்றும் உதடுகளை துடைக்க வேண்டும் .இல்லை என்றால் வாயில் கிருமி பாதிப்பு ஏற்பட்டு பற்கள் முளைக்க தொடங்கியவுடன் இள வயது பல் சொத்தை ஏற்படும். பால் பற்களில் சொத்தை ஏற்பட்டால் பிற்காலத்தில் வளரும் நிரந்தர பற்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம். குழந்தை பிறந்து 12 மாதங்களுக்கு பிறகு குழந்தைகளை பல் டாக்டரிடம் அழைத்து சென்று பரிசோதிக்க வேண்டும்.
சிறுவயதில் அதிக சாக்லேட், ஐஸ்கிரீம் தந்தால் பற்களில் சொத்தை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் .காலை இரவு என இருவேளை பற்களை சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகள் எட்டு வயது வரை பெற்றோர்கள் மேற்பார்வையில் குறைந்தது மூன்று நிமிடங்கள் பற்களை துலக்க வேண்டும். குழந்தைகளை செல்ஃபோன், டிவி பார்த்துக் கொண்டு சாப்பிட அனுமதிக்க கூடாது. நாம் சாப்பிடும் உணவு வாயில் உள்ள உமிழ்நீர் மூலம் பாதி செரிமானம் ஆகிவிடும். மீதமுள்ள உணவு வயிற்றில் செரிமானம் ஆகிறது. செல்போன் பார்த்துக் கொண்டு சாப்பிடும் போது குழந்தைகள் உணவை நன்றாக மென்று சாப்பிட மாட்டார்கள் இதனால் செரிமான கோளாறு ஏற்படலாம்.
மேலும் வாயில் அதிக நேரம் உணவை வைத்திருப்பதால் துரித வேகத்தில் பரவக்கூடிய பல் சொத்தை ஏற்படலாம் .குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் வந்தால் கற்களை பரிசோதிக்க வேண்டும். பற்களில் சொத்தை உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தால் காய்ச்சல் ஏற்படும். திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள மாவட்ட பிறவி குறைபாடு கண்டறியும் துறையில் முதன் முதலாக நைட்ரஸ் ஆக்சைடு பயன்படுத்தி குழந்தைகளுக்கு பல்வேறு சிகிச்சை, பல் துளைகள் அடைப்பு, ஒட்டு நாக்கு அறுவை சிகிச்சை ஆகிய சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.