மஞ்சளில் உள்ள மகத்தான மருத்துவக் குணங்களை தெரிந்து கொள்வோமா?
மஞ்சளில் உள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவக் குணங்கள் குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.
நாம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மஞ்சள் உணவுப் பொருள் என்பதை விட ஒரு உணர்வு சார்ந்த பொருள் (sentimental product) என்றே சொல்லலாம். அப்படிபட்ட மஞ்சளில் உள்ள சத்துக்கள், அதன் பயன்பாடுகள் மற்றும் மருத்துவக் குணங்கள் குறித்து உணவு பாதுகாப்பு துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் அளித்துள்ள விளக்கம் இதோ:
இஞ்சி் குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சளில் நிறைய வகைகள் உள்ளது அதில் முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் ஆகியவை பூசுமஞ்சளாகவும், விரலி மஞ்சள் உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், உலகிலேயே மிகச் சிறந்த மஞ்சளாக கருதப்படுவது, மேகாலயா மற்றும் ஆலப்புழை மஞ்சள் வகைகளாகும். சமையலுக்குப் பயன்படும் விரலி மஞ்சளை, கிழங்கு மற்றும் பொடி ஆகிய இரண்டு வகைகளில் FSSAI தரங்களை நிர்ணயத்துள்ளது.
மஞ்சள் என்பது இயற்கையாக அறுவடையின் போது எப்படி இருந்ததோ அப்படியே இருக்கலாம் அல்லது மெஷின் மூலம் பாலீஷ் செய்திருக்கலாம் என்று FSSAI வரையறுத்துள்ளது. மஞ்சள் அதற்கான இயற்கை மணத்துடன் இருக்க வேண்டும். எந்த ஒரு அந்நிய வாசனையும் இருக்கக் கூடாது. பூஞ்சைகள், இறந்து போன அல்லது உயிருள்ள பூச்சிகள், அதன் துகள்கள், எலி எச்சங்கள், மண் துகள்கள் படிந்து இருக்கக் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது.
மஞ்சள் கிழங்கு அல்லது பொடியில் ‘லெட் குரோமேட்’ என்று சொல்லக்கூடிய நிறமியும் வேறு எந்த செயற்கை நிறமியும் இருத்தல் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. மஞ்சள் கிழங்கில் ஈரப்பதம் 12 சதவீதத்திற்கும் மேற்பட்டு இருக்கக் கூடாது. ஒருவேளை பூச்சிகள் தாக்கப்பட்டு இருந்தால், அவை ஒரு சதவீதத்திற்கு மேல் இருத்தல் கூடாது, பாதிப்படைந்த மஞ்சள் கிழங்கு 5 சதவீதத்திற்கும் மேற்பட்டு இருக்கக் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது.
மஞ்சளில் ஏற்கனவே கார்போஹைட்ரேட் உள்ளதால், மஞ்சள் பொடியில் அதன் கார்போஹைட் தவிர, மற்ற எந்த வகை வெளிப்புற ஸ்டார்ச்சும் சேர்க்கக்கூடாது, மொத்தமாக ஸ்டார்ச் 60 சதவீதத்திற்கும் மேற்படாமல் இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது. மஞ்சளில் இயற்கையாகவே ‘குர்குமின்’ என்ற நிறமி உண்டு. அந்த நிறமி குறைந்தபட்சம் இரண்டு சதவீதம் இருக்க வேண்டும். என்று FSSAI வரையறுத்துள்ளது. மஞ்சள் என்ற உணவுப் பொருள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கூடுதல் உணவு சேர்மமாகும்.
நூறு கிராம் மஞ்சளில் 312 Kcal எரிசக்தியும், மொத்த கொழுப்பு 3.3 கிராம் (தினசரி தேவையில் 4 சதவீதம்), மொத்த கார்போஹைட்ரேட் 67 கிராம் (தினசரி தேவையில் 24 சதவீதம்), நார்ச்சத்து 23 கிராம் (தினசரி தேவையில் 82 சதவீதம்), புரதம் 9.7 கிராம் (தினசரி தேவையில் 19 சதவீதம்), கால்சியம் 168 மில்லி கிராம் (தினசரி தேவையில் 13 சதவீதம்), இரும்புச்சத்து 55 மில்லி கிராம் (தினசரி தேவையில் 306 சதவீதம்), பொட்டாசியம் 2080 மில்லி கிராம் (தினசரி தேவையில் 44 சதவீதம்) என்ற அளவில் உள்ளன.
மஞ்சளில் உள்ள மகத்தான மருத்துவக் குணங்கள்:
மஞ்சளில் உள்ள மருத்துவ குணத்திற்கு முக்கிய காரணம், அதில் உள்ள ‘குர்குமின்’ என்ற பொருள்தான். அது சிறந்த ஆன்ட்டி ஆக்சிடெண்ட் மற்றும் ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி பொருள். மஞ்சளில் உள்ள ‘குர்குமின்’ அவ்வளவு எளிதாக குடலில் உறிஞ்சப்படாது. அது எளிதில் உறிஞ்சப்பட்டு, ரத்தத்தில் கலக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், கருப்பு மிளகு அல்லது கொழுப்புப் பொருட்களுடன் சேர்த்து மஞ்சளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் “ஃப்ரீ ரேடிக்கல்ஸ்” என்ற காரணிகளை மட்டுப்படுத்தும் ஆற்றல் மஞ்சளின் ‘குர்குமினுக்கு’ உண்டு. ‘குர்குமின்’ மூளையில் ‘Brain Derived Neurotrophic Factor’ என்ற புரதத்தை அதிகரிப்பதால், நினைவுத் திறன் மற்றும் கற்றறியும் திறன் அதிகமாக வாய்ப்புள்ளது. மேலும், வயதாவதால் ஏற்படக்கூடிய மூளை செயல்பாடு குறைபாட்டினை தள்ளிப்போடுகின்றது.
‘அல்சமைர் நோய்’ என்ற மூளை சம்பந்தப்பட்ட நோய் பாதிப்பை குறைக்கப் பயன்படுகின்றது. ‘குர்குமின்’ இரத்தநாளங்களில் உள்ள ‘என்டோத்தீலியம்’ என்ற லைனிங் செல்களின் செயல்பாட்டினை மேம்படுத்தி, இதய நோயை பாதிப்பை சீர்படுத்துகின்றது. புற்றுநோயை மற்ற உறுப்புகளுக்குப் பரவுவதை தடுக்கவும், புற்றுநோய் செல்கள் இறந்து போகவும் உதவுவதால், மஞ்சளில் உள்ள ‘குர்குமினுக்கு’ புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
‘ஆர்த்தரைட்டிஸ்’ என்று சொல்லக்கூடிய எலும்பு சம்பந்தப்பட்ட நோய்க்கு மருந்தாகவும் ‘குர்குமின்’ பயன்படுகின்றது. ‘Depression’ என்று சொல்லக்கூடிய மனச்சோர்வு நோய்க்கு சிறந்த மருந்து இந்த மஞ்சள். மஞ்சளில் உள்ள ‘குர்குமின்’ ஒரு சிறந்த ‘ஆன்ட்டி ஏஜிங்’ காரணியாகும். அதாவது, நமது வயதிற்குப் பொருத்தமற்ற வகையில், உடலுறுப்புகள் ‘வயதான’ நிலையை அடைவதை மஞ்சள் தடுக்கும்.
மஞ்சள் கிழங்கை இளம் சூடான தண்ணீரில் கழுவி, காயவைத்து, அச்சிடாத காகிதத் துண்டில் மடித்து, உணவுத் தர ப்ளாஸ்டிக் கொள்கலனில், காற்றுப்புகாமல் மூடி, குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால், இரண்டு வாரங்கள் வரை பயன்படுத்தலாம். அதேவேளையில், நன்கு கழுவி, காயவைத்த பின்னர், சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, காற்றுப்புகாத உணவுத் தர ப்ளாஸ்டிக் கொள்கலனில் வைத்து, ஃப்ரீஸரில் வைத்து பாதுகாத்தால், ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
மஞ்சள் பொடியை ஈரப்பதம் இல்லாத சற்று குளிர்வான இடத்தில், காற்றுப்புகா உணவுத் தரக் கொள்கலனில் வைத்து பாதுகாத்தால், 18 மாதங்கள் வரை பயன்படுத்தலாம் என மருத்துவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.