இனிமே சாப்பிடும்போது தண்ணீர் குடிக்காதீங்க...

நம் உடலின் இயக்கத்துக்கும், ஆற்றலுக்கும் குடிநீர் மிக மிக அவசியம். அதே வேளையில், உணவு சாப்பிடும்போது குடிநீர் அருந்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்; அதுதான் உடல் நலனுக்கும், ஆரோக்கியத்துக்கும் மிக நல்லது என்கின்றனர் உடலியல் சார்ந்த வல்லுனர்கள்.

Update: 2022-08-08 14:02 GMT

சாப்பிடும் போது தண்ணீர் அருந்தினால், வரும் பாதிப்புகளை பற்றி தெரிந்து கொள்வோம்

நம் உடலின் இயக்கத்துக்கு நீர் மிகவும் அவசியமானது. உடலில் உள்ள எல்லா உறுப்புகளின் இயக்கத்துக்கும் நீர் தான் அடிப்படை. மனித உடலில், உணவு செரிப்பதில் துவங்கி, கழிவுகளை வெளியேற்றுவது வரை அனைத்துக்கும் நீர் தான் பயன்படுகிறது. அதனால் தான் உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் அது நிறைய ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்கின்றனர்.

நம்முடைய உடல், சருமம், தலைமுடி என அத்தனையும் ஆரோக்கியமாக இருக்க தண்ணீர் மிக மிக அவசியம். உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்போது உடலில் எந்த வித தொற்றுக்களும் அவ்வளவு எளிதில் தங்காது. உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் கல்லீரலும், சிறுநீரகமும் வெளியேற்றி விடும்.

உடல் நீரேற்றமாக இருக்கும்போது சரும வறட்சியின்றி, ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் இருக்கும். அதனால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால் எப்போது குடிக்க வேண்டும், எப்படி குடிக்க வேண்டும், எவ்வளவு குடிக்க வேண்டும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


சாப்பிடும்போது அருகில் கட்டாயம் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பலர் சொல்வதுண்டு;  தண்ணீர் நிறைய குடித்தால் சரியாக சாப்பிட முடியாது என்றும் சிலர் கூறுவது வழக்கம். சாப்பிடும் முன் அல்லது சாப்பிட்ட பிறகுதான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதனால், சாப்பிடும்போது இடையிடையே தண்ணீர் குடிப்பது சரியா, தவறா என்ற குழப்பமே பலருக்கும் ஏற்படும். 

சாப்பிடும்போது இடையிடையே, தண்ணீர் குடிப்பதால் சில சிக்கல்கள் உண்டாவது உண்மைதான்.  நீர், ஜூஸ் போன்றவற்றை சாப்பிடும்போது உட்கொள்வதால் செரிமான சுழற்சியின் போது சுரக்கும் சில சுரப்பிகள் சுரக்காமல் போகும். அது செரிமானத்தை கடினமாக்கும். சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கும் பழக்கத்தில், இரண்டையுமே ஒன்று போல பாவித்து உணவை மென்று சாப்பிடுவதில்லை. உணவை அப்படியே வேகமாக விழுங்கும் போது, அது செரிமானத்தை மேலும் மோசமாக்கும்.சில திட உணவு வகைகளுடன் திரவத்தை கலக்க கூடாது. அப்படி தண்ணீர் அல்லது வேறு பானங்கள் குடிக்கும்போது அவை நேரடியாக குடலுக்குள் சென்று, அனைத்து செரிமான நொதிகளையும் நீக்கி, செரிமானத்தை தடுத்து விடும்.

உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கவும், எடையை குறைக்கவும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. ஆனால், சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் அது எடையை அதிகரிக்க செய்யும் என்ற உண்மையும் தெரிய வந்துள்ளது.

ஏனென்றால் சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் இன்சுலின் அளவு அதிகரித்து, உணவு உடைக்கப்பட்டு கொழுப்பை உருவாக்கி, பின் அது உடலில் சேமித்து வைக்கப்படுகிறது. அதோடு செரிமான ஆற்றல் குறையும். செரிமான ஆற்றல் குறைவாக இருந்தாலே உடல் பருமன் உண்டாக ஆரம்பித்துவிடும்.


​சாப்பிடும் போது இடையிடையே திரவ உணவுகளை அதிகமாக எடுத்துக் கொண்டால், அது வயிறு மற்றும் வாய்ப்பகுதியில் அதிக அமிலச் சுரப்பை ஏற்படுத்தும். இது அதிக காற்றை விழுங்க செய்யும், தட்டில் உள்ள உணவின் சுவையையும் ஊட்டச்சத்தையும் ரசித்து சாப்பிட முடியாமல் போகும். அதனால் இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரிக்க செய்யும். அது வாயுத்தொல்லை, அசிடிட்டி ஆகியவற்றை ஏற்படுத்தும்.

இன்சுலின சரியாக சுரக்காதது மட்டும் நீரிழிவை உண்டாக்குவதில்லை. இன்சுலின் அதிகமாக சுரப்பதும் கூட நீரிழிவுக்கு மிக முக்கியக் காரணங்களில் ஒன்று. இன்சுலின் ஹார்மோன் சுரப்பு ரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பது மற்றும் உடலில் கொழுப்பு தேங்காமல் பார்த்துக் கொள்வது ஆகிய பணிகளை செய்யும். இதுவே சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் இன்சுலின் சுரப்பு அதிகமாகி, அதுவே கொழுப்பை அதிகரிக்க செய்து உடல் பருமனை உண்டாக்குகிறது.


சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதால் மட்டும் இந்த பிரச்சினை உண்டாவதில்லை. ஜூஸ், சோடா என எல்லா வகை நீர் ஆகாரங்களும் இதில் அடங்கும். நம்முடைய உடலின் ஜீரண ஆற்றலை முறைப்படுத்தவும் மேம்படுத்தவும் உமிழ்நீர் மிக முக்கியம்.

இதுதான் நம்முடைய உணவின் கடின மூலக்கூறுகளை உடைத்து, உணவு துகள்களை மென்மையாக்கி, ஜீரணத்தை அதிகமாக்குகிறது. ஆனால் நாம் உணவு உட்கொள்ளும்போது இடையில் தண்ணீர் குடிப்பதன் மூலம் உமிழ்நீர் சுரப்பு குறைந்து ஜீரணத்தை தாமதப்படுத்துகிறது

ஆகவே, இனிமேல் சாப்பிடும்போது தண்ணீர் குடிக்காதீங்க... ப்ளீஸ்.

Similar News