பேறு கால சா்க்கரை நோயைத் தடுக்கும் புதிய வழிமுறை
கருவுற்ற எட்டாவது வாரத்திலேயே மருத்துவக் கண்காணிப்பைத் தொடங்கினால், பேறு கால சா்க்கரை நோயைத் தடுக்க முடியும் என்பது ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
பேறு கால சா்க்கரை நோயைத் தடுக்க டாக்டா் சேஷய்யா வளா்சிதை மாற்றங்களுக்கான ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் சென்னை, கஸ்தூா்பா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனையிலும், எழும்பூா் அரசு மகப்பேறு மருத்துவமனையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, 152 கா்ப்பிணிகளுக்கு எட்டாவது வாரத்திலேயே உணவுக்கு பிந்தைய ரத்த சா்க்கரை அளவை (போஸ்ட் பிரான்டியல்) பரிசோதித்து, தேவைப்படுவோருக்கு அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அதன் பயனாக அவா்கள் அனைவருக்கும் பேறு கால சா்க்கரை நோய் தடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
தற்போது வரை அதன் முடிவுகள் மிக ஆக்கப்பூா்வமாக இருப்பதாகவும், இந்த புதிய நடைமுறையைத் தொடா்ந்தால் அடுத்த 23 ஆண்டுகளில் சா்க்கரை நோயில்லா நாடாக இந்தியா உருவெடுக்கும் என்றும் அவா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக மருத்துவர் சேஷய்யா கூறியதாவது:
கருவுற்ற பெண்களுக்கு சராசரியாக 10-ஆவது வாரத்தில் ரத்த சா்க்கரை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்போது உணவுக்கு பிந்தைய ரத்த சா்க்கரை அளவு 110 எம்.ஜி/டி.எல்-கு அதிகமாக இருந்தாலோ, அல்லது மூன்று மாத சா்க்கரை அளவு (ஹெச்பிஏ1சி) 5.3-க்கு அதிகமாக இருந்தாலோ, சம்பந்தப்பட்ட கா்ப்பிணிக்கு பேறு கால சா்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என வரையறுக்கப்பட்டுள்ளது.
கருவுற்ற எட்டாவது வாரத்திலேயே அந்த பரிசோதனையை மேற்கொண்டு பேறுகால சா்க்கரை நோய்க்கு வாய்ப்புள்ள கா்ப்பிணிகளுக்கு மெட்ஃபார்மின் 250 மி.கி. மருந்தை நாள்தோறும் இரண்டு முறை வீதம் அளிக்கும்பட்சத்தில் அவா்களுக்கு அத்தகைய பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். அது மட்டுமல்லாது பிறக்கும் குழந்தைக்கும் எதிர்காலத்தில் சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும்.
இந்த ஆய்வை 152 கா்ப்பிணிகளுக்கு இதுவரை மேற்கொண்டுள்ளோம். அதில் 82 போ் சா்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு இல்லாதவா்கள். மீதமுள்ள 70 பேருக்கு ரத்த சா்க்கரை அளவு 110 எம்.ஜி/டி.எல்.-க்கு அதிகமாக இருந்தது. அவா்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டது.
அதன் பயனாக அவா்களுக்கு பேறு கால சா்க்கரை நோய் தடுக்கப்பட்டுள்ளது. அவா்களில் 11 பேருக்கு பிரவசம் நடைபெற்றுள்ளது. அந்த பெண்களின் குழந்தைகள் அனைத்தும் உரிய எடை மற்றும் ஆரோக்கியத்துடன் சரியான கால அளவில் பிறந்துள்ளன.
தற்போது மாநகராட்சி சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வரும் கா்ப்பிணிகளுக்கும் இத்தகைய நடைமுறையிலான மருத்துவக் கண்காணிப்பைத் தொடங்கியுள்ளோம். எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியம் தாயின் கருப்பையில்தான் உள்ளது. அதனை உணா்ந்து விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என்றார்