மலச்சிக்கலை தவிர்க்கும் மருத்துவக் குணம் நிறைந்த மாம்பழம்!
மலச்சிக்கலை தவிர்க்கும் மருத்துவக் குணம் உள்ளிட்ட பல்வேறு பயன்கள் மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் என உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.;
“மாதா ஊட்டாத சோற்றை மாம்பழம் ஊட்டும்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்த வகையில், தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளதால் மாம்பழத்தை வாங்கும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும். மாம்பழத்தில் உள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவக் குணங்கள் குறித்தும் உணவு பாதுகாப்புத் துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் அளித்துள்ள விளக்கத்தை காண்போம்:
மாம்பழம் வாங்கும்போது நாம் நன்கு அறிந்த வியாபாரிகளிடம் வாங்க வேண்டும் என்று FSSAI அறிவுறுத்தியுள்ளது. மாம்பழத்தை வாங்கி வந்தவுடன், ஓடும் தண்ணீரில் (Running Water) நன்கு கழுவ வேண்டும் என்று FSSAI அறிவுறுத்தி உள்ளது. முடியும் எனில், மாம்பழத்தினை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அப்படி ஊறவைத்தால், தோல் மேல் இருக்கக்கூடிய எத்திலீன் படிமம் நீங்கிவிடும்.
நுகர்வோர்கள் இயன்றவரை மாம்பழத்தின் மீது கருப்புத் திட்டுக்கள் இல்லாத பழமாகப் பார்த்து வாங்க வேண்டும் என்று FSSAI அறிவுறுத்தியுள்ளது. மாம்பழத்தை மிருதுவாக அழுத்தினால், சற்று இறுக்கமாக இருக்க வேண்டும். நன்கு அழுந்தினால், அவற்றை வாங்க வேண்டாம்.
ஒரே மாதிரியாகவும் சீராகவும் மஞ்சள் நிறத்தில் அல்லாமல், சிறிது பச்சை நிறமும் இருக்குமாறு மாம்பழத்தைப் பார்த்து வாங்க வேண்டும். மாம்பழத்தை வாங்கி வந்த இரண்டு தினங்களுக்குள், அறை வெப்பநிலையில் வைத்திருந்து, அதனைப் பயன்படுத்துதல் நலம்.
நூறு கிராம் மாம்பழத்தில் 60 Kcal எரிசக்தியும், நீர்ச்சத்து 83.5 கி, மொத்த கொழுப்பு 0.38 கி, மொத்த கார்போஹைட்ரேட் 15 கி, அதில், நார்ச்சத்து 1.6 கி, புரதம் 0.82 கிராம் என்ற அளவிலும் உள்ளது. நூறு கிராம் மாம்பழத்தில் கால்சியம் 11 மிகி (தினசரி தேவையில் 1%), தாமிரம் 0.111 மிகி (தினசரி தேவையில் 6%), மெக்னீசியம் 10 மிகி (தினசரி தேவையில் 3%), மாங்கனீஸ் 0.06 மிகி (தினசரி தேவையில் 3%) மற்றும் பொட்டாசியம் 168 மிகி (தினசரி தேவையில் 4%) என்ற அளவில் உள்ளது.
நூறு கிராம் மாம்பழத்தில் வைட்டமின் - ஏ 54 மைகி (தினசரி தேவையில் 7%), வைட்டமின் - சி 36.4 மிகி (தினசரி தேவையில் 44%), வைட்டமின் - கே 4.2 மைகி (தினசரி தேவையில் 4%), வைட்டமின்-இ 0.9 மிகி (தினசரி தேவையில் 6%), வைட்டமின்-பி6 0.119 மிகி (தினசரி தேவையில் 9%) மற்றும் வைட்டமின்-பி9 (ஃபோலேட்) 43 மைகி (தினசரி தேவையில் 11%) என்றளவில் உள்ளது.
மாம்பழம் சாப்பிடுவதால் நமது உடலில் உள்ள ‘செல்’ செயல்பாட்டினை மேம்படுத்த உதவுகின்றது. நமது உடலின் நீர்ச்சத்தின் சமநிலையைப் பராமரிக்க உதவுகின்றது. மாம்பழத்தில் உள்ள Quercetin, mangiferin & norathyriol ஆகிய ஆன்ட்டி-ஆக்ஸிடெண்ட்ஸ்களால் ‘செல்’ பாதிப்பிற்கு எதிராக பாதுகாக்கின்றது.
ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி குணமும் மாம்பழத்தில் உண்டு. மலச்சிக்கலைத் தவிர்க்கும் குணமும் மாம்பழத்தில் உண்டு. ரத்தசோகை நோயின் தடுப்பிலும் மாம்பழத்தின் பங்கு உண்டு. மேங்கோ கெர்னல் ஃபேட், ஃப்ரஷ் ஜூஸஸ், தெர்மலி ப்ராஸஸ்டு ஃப்ரூட் நெக்டர், தெர்மலி ப்ராஸஸ்டு மேங்கோ பல்ப்/ப்யூரி, மேங்கோ சட்னி, டிரைடு மேங்கோ ஸ்லைஸஸ், டிரைடு மேங்கோ பௌடர் ஆகியவற்றிற்கு தனித்தனியாக தரங்களை FSSAI நிர்ணயித்துள்ளது. எனவே, பொதுமக்கள் மாம்பழங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கி, தரமான பழங்களைச் சாப்பிட்டு, மாம்பழங்களைப் போல் வாழ்வை மணக்கச் செய்வோம் என மருத்துவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.