மிளகாய் பிரியர்களே கவனமாக இருங்கள்.. உங்களுக்கான விழிப்புணர்வு பதிவு இதோ...

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பச்சை மிளகாய், மிளகாய் பொடி ஆகியவற்றில் உள்ள சத்துக்கள், பாதிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

Update: 2023-03-16 04:16 GMT

பச்சை மிளகாய். (மாதிரி படம்).

சமையலில் எது இருக்குமோ? இருக்காதோ? ஆனால், கண்டிப்பாக காரம் மிகுந்த பச்சை மிளகாய் ஒன்றாவது இடம்பெற்றுவிடும். அப்படிபட்டி பச்சை மிளகாய், மிளகாய் பொடி உள்ளிட்டவைகளில் உள்ள தரங்கள், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், நற்பலன்கள், பாதிப்புகள் மற்றும் கலப்படம் உள்ளிட்ட விவரங்களை உணவு பாதுகாப்பு துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் அளித்துள்ள விழிப்புணர்வு பதிவு இதோ:

மிளகாயை உணவில் மூன்று வகைகளாக பயன்படுத்துகிறோம். அதாவது, பச்சை மிளகாய், வற மிளகாய், மிளகாய் பொடி. இதில், வற மிளகாய்க்கும், மிளகாய் பொடிக்கும் FSSAI தரங்களை நிர்ணயித்துள்ளது. பச்சை மிளகாய்க்கு இன்னும் தரங்கள் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், உணவு வகைப்பாட்டில், காய்கறி வகையில் அது சேர்க்கப்பட்டுள்ளது.


மிளகாய் வற்றலில் இறந்து போன பூச்சிகளோ,பூச்சிகளின் துகள்களோ அல்லது எலிகளின் எச்சங்களோ காணப்படக்கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. மேலும், மிளகாய்வற்றலில் செயற்கை நிறமி இருக்க கூடாது. மினரல் ஆயில் பூச்சு இருக்கக்கூடாது. உடம்புக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய வேறு எந்தப் பொருட்களும் இருக்கக் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது.

உடைந்து போன மிளகாய் மற்றும் விதைகள் 5 சதவீதத்திற்கும் மிகாமலும், ஈரப்பதம் 11 சதவீதத்திற்கும் மிகாமலும், வெளிப்புற பொருட்கள் ஒரு சதவீதத்திற்கும் மிகாமலும் இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது. மிளகாய் பொடியில் இரண்டு சதவீதம் வரை தாவர எண்ணெயைக் கலந்து கொள்ளலாம் என்று FSSAI வரையறுத்துள்ளது.


மிளகாய் பொடியில் நார்ச்சத்து 30 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது. நூறு கிராம் மிளகாயில் 40 Kcal எரிசக்தியும், மொத்த கார்போஹைட்ரேட் ஒன்பது கிராம், புரதம் இரண்டு கிராம் என்ற அளவிலும் உள்ளது. நூறு கிராம் மிளகாயில் வைட்டமின்-சி 144 மில்லி கிராம் உள்ளது (தினசரி தேவையில் 173 சதவீதம் உள்ளது.) அதுபோல், இரும்புச்சத்து ஒரு மில்லி கிராம் (தினசரி தேவையில் 8 சதவீதம்), மெக்னீசியம் 23 மில்லிகிராம் (தினசரி தேவையில் 6 சதவீதம்), பொட்டாசியம் 322 மில்லிகிராம் (தினசரி தேவையில் 7 சதவீதம்) என்ற அளவில் உள்ளது.


மிளகாயும், வறமிளகாயும் வாங்கும் போது, அவை ஒரே சீரான நிறத்துடன் இருக்கின்றதா என்பதை உறுதி செய்து வாங்க வேண்டும். மிளகாய் காம்பானது தடிமனாகவும், புதிதாகவும் இருக்கின்றதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். காம்பில் வெடிப்புகள் இருந்தாலோ அல்லது சேதமடைந்திருந்தாலோ அவற்றை வாங்கக்கூடாது. பச்சை மிளகாயை குளிர்பதனப் பெட்டியில் வைப்பதாக இருப்பின், காம்பினை நீக்கிவிட்டு, ஒரு உணவு தர பிளாஸ்டிக் கொள்கலனில் வைக்கவும். உணவு தரமில்லாத பிளாஸ்டிக் பையில் போட்டு வைக்க வேண்டாம்.

வற மிளகாயையும், மிளகாய் பொடியையும் வெளிச்சம் குறைவாக உள்ள இடங்களில் பாதுகாப்பாக வைத்துப் பயன்படுத்தலாம். வற மிளகாயிற்கு, உடல் வலியைக் குறைக்கும் தன்மை உண்டு. ஆனால், அது நிரந்தரமானதல்ல. உடல் எடையை குறைப்பதற்கும் மிளகாயைப் பயன்படுத்தலாம். உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் மிளகாயில் சற்று அதிகம் காணப்படுகிறது. இதனால், மிளாகாயை மிதமான அளவில் சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தியும் சற்று அதிகமாகின்றது.


அதே வேளையில், அதிகமாக மிளகாய் அல்லது வறமிளகாய் அல்லது மிளகாய் பொடி ஆகியற்றை எடுத்துக்கொண்டால், நமது வயிற்றில் புண் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. (தினசரி 6-8 கிராம் என்ற அளவிற்குள் மட்டும் மிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வது பாதுகாப்பானது.) மிளகாயை அதிகமாக எடுத்துக் கொள்வதினால் மலச்சிக்கல், மலம் கழிக்கும் போது எரிச்சல் போன்றவை ஏற்படும்.

அதிகபட்ச மிளகாய் எடுத்துக் கொள்வதினால் நமக்கு பித்தப்பை அல்லது இறைப்பையில் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன என மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

Similar News