பால் தெரியும்.. பாலில் உள்ள வகைகள் தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்..

பால் மற்றும் பாலின் வகைகள், தரங்கள் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2023-04-15 05:28 GMT

பால். (மாதிரி படம்).

நமது உணவு வகைகளில் பால் பிரதான இடத்தை பெற்று உள்ளது. பால், தயிர், மோர், தேநீர் என பாலை பல வகைகளில் நாம் பயன்படுத்தி வருகிறோம். பொதுவாக காய்ச்சாத பசும்பாலில் கிருமிகள் இருக்கும் என்பதால் பாலைக் காய்ச்சாமல் பருகக் கூடாது. பால் குறித்தும், எந்தெந்த பாலில் என்ன சத்துக்கள் உள்ளன என்பது குறித்தும் உணவு பாதுகாப்பு துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

பாலின் தரங்களை FSSAI மிகவும் விரிவாக நிர்ணயத்துள்ளது. நாம் அவசியமானவற்றை மட்டும் பார்ப்போம். பசு, எருமை, வெள்ளாடு, செம்மறியாடு, ஒட்டகம் ஆகியவற்றில் இருந்துப் பெறப்படும் பால் மட்டுமே “பால்” என்று FSSAI வரையறுத்துள்ளது. (கழுதை உள்ளிட்ட மற்ற விலங்குகளை பால் விலங்குகளாக FSSAI அங்கீகரிக்கவில்லை. அதனால், அவற்றின் பாலிற்குத் தரங்கள் நிர்ணயிக்கப்படவில்லை.

பாலை FSSAI பல்வேறு வகைகளில் தரம் பிரித்து உள்ளது. அதாவது, பச்சைப் பால் (Raw or Fresh Milk), பதப்படுத்தப்பட்டு, நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardised Milk), சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk), இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (Double Toned Milk), ஏடு எடுக்கப்பட்ட பால் (Skimmed Milk), நிறை கொழுப்பு பால் (Full Cream Milk), கலவைப் பால் (Mixed Milk) என்ற வகைகள் உள்ளன.

கலவைப் பால் என்பது, மேற்கூறிய விலங்குகளின் பாலின் கலவையாகும் என்று FSSAI வரையறுத்துள்ளது. எருமைப் பாலில் கொழுப்புச் சத்து 6 சதவீதத்திற்கும் குறையாமலும், கொழுப்பற்ற இதரத் திடச்சத்துக்கள் 9 சதவீதத்திற்கும் குறையாமலும் இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது. பசும்பாலில் கொழுப்புச் சத்து 3.2 சதவீதத்திற்கும் குறையாமலும், கொழுப்பற்ற இதரத் திடச்சத்துக்கள் 8.3 சதவீதத்திற்கும் குறையாமலும் இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது.

தமிழ்நாட்டின் ஆட்டுப்பாலில் (வெள்ளாடு/செம்மறியாடு) கொழுப்புச் சத்து 3 சதவீதத்திற்கும் குறையாமலும், கொழுப்பற்ற இதரத் திடச்சத்துக்கள் 9 சதவீதத்திற்கும் குறையாமலும் இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது. ஒட்டகப் பாலில் கொழுப்புச் சத்து 2 சதவீதத்திற்கும் குறையாமலும், கொழுப்பற்ற இதரத் திடச்சத்துக்கள் 6 சதவீதத்திற்கும் குறையாமலும் இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது.

கலவைப் பாலில் கொழுப்புச் சத்து 4.5 சதவீதத்திற்கும் குறையாமலும், கொழுப்பற்ற இதரத் திடச்சத்துக்கள் 8.5 சதவீதத்திற்கும் குறையாமலும் இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது என மருத்துவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News