கொரோனா தடுப்பூசி திருவிழா
புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது
புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது. அதில் தடுப்பூசி செலுத்தி கொண்டபவர்களில் 25 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து அதிகளவு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. அதனை தொடர்ந்து யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் கொரோனா இரண்டாம் அலை பேரதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. எனவே புதுச்சேரி அரசு ஊரடங்கை அமல்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்தியது. முதலில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. பிறகு 18 வயது முதல் அனைவரும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோர் அதிக எண்ணிக்கையில் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். இதன் காரணமாக கொரோனா பரவல் எண்ணிக்கை குறைந்து வருகிறது என புதுச்சேரி சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 16-ந்தேதி முதல் தடுப்பூசி திருவிழா தொடங்கப்பட்டுள்ளது. அதன் படி அரசு மருத்துவமனைகளிலும் நகரின் முக்கிய இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக அதிக எண்ணிக்கையில் மக்கள் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர்.
மேலும் 2 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழாவை நீட்டிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முடிவெடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்ட 25 நபர்கள் தினமும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட்ட முதல் 10 கிராமங்களுக்கு விருது வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 5 தன்னார்வலர்களுக்கும் மற்றும் தனி நபர்களுக்கும் பரிசுத்தொகையுடன் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.