மார்பகப் புற்றுநோய்: என்னென்ன அறிகுறிகள், எப்படி தடுப்பது?
மார்பகப் புற்றுநோய் என்பது பெண்களுக்கே வரும் புற்று நோய்களுள் ஒன்று. ஆரம்பத்தில் கண்டறிந்தால் மீண்டு வருவது சுலபம்;
மார்பகப் புற்றுநோய் என்பது பெண்களுக்கே வரும் புற்று நோய்களுள் ஒன்று. இது மார்பகத் திசுக்களில் ஆரம்பிக்கும் புற்றுநோய்களைக் குறிக்கும். உலகெங்கும் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில், 10.4% நிகழ்வுகள் மார்பகப் புற்றுநோயால் ஏற்படுகிறது என்கிறது ஒரு கணக்கெடுப்பு.
நம் உடல் பலவகையான உயிரணுக்களால் ஆனது. உடல் வளர, ஆரோக்கியமாக இருக்க, இந்த உயிரணுக்கள் வளர்ந்து பெருகி, மேலும் பல உயிரணுக்களை உருவாக்குகின்றன. இந்தச் சீரான பணியில் ஏதேனும் தவறு ஏற்படும்போது, புதிய உயிரணுக்கள் அதிகமாக உருவாகிவிடுகின்றன. பழைய உயிரணுக்கள் அவற்றின் கால அளவை மீறி உயிர் வாழ்ந்துவிடுகின்றன. இந்த அதிகப்படியான உயிரணுக்கள் உடலில் கட்டியாகத் தோன்றுகின்றன.
எல்லாக் கட்டிகளுமே புற்றுநோய்க் கட்டிகள் அல்ல. புற்றுநோய் அல்லாத கட்டிகளால் உயிருக்கு ஆபத்து இல்லை. இத்தகைய கட்டிகளை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினால் மீண்டும் தோன்றுவதில்லை; அவை உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவுவதில்லை.
புற்றுநோய்க்கு காரணம் என்ன?
இதற்கு ஒரு குறிப்பிட்ட காரணி இல்லை. அடிப்படையாக உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் இறப்பைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு புற்றுநோயாகத் தோன்றுகிறது.
உலகெங்கும் உள்ள நாடுகளில் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள்தான் என்றாலும், நமது நாட்டில் மட்டும் நிலைமை தலைகீழாக இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ICMR - Indian Council of Medical Research) கூறியுள்ளது. இந்தியாவில் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதுடன் அவர்களை அதிகம் பாதிப்பது மார்பகப் புற்றுநோய் என்பது தெரியவந்துள்ளது.
அக்டோபர் மாதத்தை, மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக உலகம் முழுவதும் அனுசரிக்கும் சூழலில், இந்திய அரசும் இதுகுறித்த விழிப்புணர்வைப் பெண்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.
இந்திய புற்றுநோய் மையம் அளித்துள்ள சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி, லட்சம் இந்தியப் பெண்களில் 26 பேருக்கு மார்பகப் புற்றுநோய் காணப்படுகிறது. இதில் கவலைதரும் விஷயம் என்னவென்றால், மார்பகப் புற்றுநோய் தாமதமாகக் கண்டறியப்படுவதால், 50 சதவிகிதத்தினர் இறந்து விடுகின்றனர். அதாவது, தொடக்க நிலையில் மார்பில் வலியற்ற சிறு கட்டியாகத் தோன்றும்போது அதை அலட்சியப்படுத்திவிடுவதால் நாளடைவில் அந்தக் கட்டி வளர்ச்சியடைந்து, வலி நிறைந்த பெரிய கட்டியாக மாறும்போதுதான் பெண்கள் சிகிச்சையைநாடுகின்றனர்.
பெண்கள் சிறுவயதிலேயே பூப்படைவது, 30 வயதுக்குப் பிறகு நடக்கும் திருமணங்கள், அதன் தொடர்ச்சியாக நடக்கும் குழந்தைப்பேறுக்கான தொடர் ஹார்மோன் சிகிச்சைகள், டெஸ்ட் டியூப் பேபி போன்ற செயற்கைக் கருத்தரிப்பு முறைகள் மற்றும் தாமதமாகும் மெனோபாஸ் போன்றவைதான் மார்பகப் புற்றுநோய் வர முக்கியக் காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.
மார்பக புற்றுநோய் அறிகுறிகள்
சுயபரிசோதனையின்போது நீங்கள் கவனிக்க வேண்டியவை:
- மார்பகம், அக்குள் பகுதிகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?
- மாற்றம் ஏற்பட்டிருந்தால், இது தொடர்ந்து சில நாட்கள் நீடிக்கிறதா?
இயற்கையாகவே நாளமில்லாச் சுரப்பிகளினால் ஒவ்வொரு மாதமும் மார்பகங்களில் சுழற்சியாக மாற்றங்கள் ஏற்படும். தொடர் பரிசோதனை மூலம் இயற்கையாக நிகழும் மாற்றத்துக்கும், புதிதாகத் தோன்றியுள்ள மாற்றங்களுக்கும் வித்தியாசம் கண்டுகொள்ள முடியும்.
மார்பகங்களில் ஏதேனும் வித்தியாசம் தொடர்ந்து கவனித்தால் மருத்துவரை உடனடியாக அணுகவும்.
மார்பகச் சுய பரிசோதனை செய்துகொள்வதற்கான 5 வழிகள்: (மாதம் ஒரு முறை)
முதல் கட்டம்: கண்ணாடியின் முன் நின்றுகொண்டு தோள்பட்டையை நேராகவும், கைகளை இடுப்பிலும் வைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் பரிசோதிக்க வேண்டியது:
- மார்பகங்கள் வழக்கமான அளவிலும், வடிவிலும், நிறத்திலும் இருக்கிறதா?
- வீக்கம் போன்றவை இல்லாமல் மார்பகங்கள் சரியான வடிவத்துடன் இருக்கிறதா?
- கீழ்க்கண்ட மாற்றங்கள் இருந்தால் மருத்துவரிடம் செல்லவும்.
- மார்பகத்தின் தோல் பகுதியில் சுருக்கம் அல்லது வீக்கம்
- காம்பு உள்நோக்கி இழுக்கப்பட்டிருத்தல்
- மார்பகங்களில் புண், வலி, சிகப்பு நிறம், தடிப்பு ஆகியவை இருத்தல்.
இரண்டாம் கட்டம்: இப்போது உங்கள் கைகளை உயர்த்திக்கொண்டு மேற்சொன்னவாறு அனைத்தையும் மீண்டும் கவனியுங்கள்
மூன்றாம்கட்டம்: கண்ணாடி முன் நின்று கொண்டு காம்புகளில் ரத்தம் அல்லது நீர் அல்லது பால் அல்லது மஞ்சள் நிறத் திரவம் வெளிப்படுகிறதா எனக் கவனிக்கவும்
நான்காம் கட்டம்: படுத்துக்கொண்டு வலது கையினால் இடது மார்பையும் இடது கையினால் வலது மார்பையும் கீழ்க்கண்டவாறு பரிசோதிக்கவும்.
விரல்களைச் சேர்த்து வைத்துக்கொண்டு விரல் நுனிகளால் அழுத்தமாகவும் மென்மையாகவும் சிறிய வட்டங்களாக மார்பகம் முழுமையும் அழுத்திப்பார்க்கவும்
(தோள்பட்டை எலும்பில் இருந்து வயிற்றின் மேல்பாகம் வரை, அக்குளில் இருந்து நெஞ்சின் நடுப்பகுதி வரை).
காம்பில் இருந்து ஆரம்பித்து வட்ட வடிவில் சிறிய வட்டத்தில் இருந்து பெரிய வட்டமாக மார்பகத்தின் வெளிப்புறம் வரை பரிசோதிக்கவும். மேலும், மேலிருந்து கீழாக அழுத்தித் தடவிப் பார்க்கவும். பலருக்கு இது சிறந்த முறையாகத் தோன்றும். அக்குள் மற்றும் மார்பகத்தின் எல்லாப் பகுதிகளையும் பரிசோதனை செய்வதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
ஐந்தாம் கட்டம் : இறுதியாக நின்றுகொண்டோ, உட்கார்ந்துகொண்டோ மார்பகத்தை அழுத்தி தடவிப் பார்க்கவும். மார்பகம் ஈரமாக இருக்கும்போது இப்படிப் பரிசோதிப்பது பெரும்போலோருக்கு எளிதாக இருக்கலாம். எனவே குளிக்கும்போது இப்படிப் பரிசோதித்துக் கொள்ளலாம்.
அதன்பிறகு `மாமோகிராம்' என்ற ஸ்கிரீனிங் டெஸ்ட், மிக முக்கியமான பரிசோதனை முறையாகும்.
மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் இந்த டெஸ்ட் ஒரு எக்ஸ்-ரே டெஸ்ட் தான். மார்பகத்தில் கட்டிகள் இல்லாவிட்டாலும்கூட, கட்டிகள் வருவதற்கான அறிகுறிகள், கால்சியம் அளவில் மாற்றங்களை இந்த `மாமோகிராம்' பரிசோதனை காட்டிக் கொடுத்துவிடும். இதன்மூலம் நோய் வரும்முன் கண்டறிந்து சிகிச்சை கொடுக்க முடியும்
40 வயதுக்குட்பட்ட பெண்கள், மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மருத்துவரிடம் மார்பகப் பரிசோதனை செய்தபிறகு, மருத்துவருக்குச் சந்தேகம் ஏற்பட்டால் மட்டும் `மாமோகிராம்' பரிசோதனை செய்து கொள்ளலாம். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறையும் `மாமோகிராம்' செய்து கொள்வதும் அவசியம்
`மாமோகிராம்' வெறும் எக்ஸ்-ரேதான் என்றாலும், அதன் துல்லியம் 85 சதவிகிதமாகும். பரிசோதனையில், அது ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவான கட்டிகளைக்கூடக் கண்டறிந்து விடும். இந்த பரிசோதனை முறை, 25 சதவிகித பெண்களை இறப்பிலிருந்து காக்கிறது
சில நேரங்களில் `மாமோகிராம்' பரிசோதனை முடிவுகள் சந்தேகத்துக்கிடமாக இருந்தால், அதன் கூடவே மார்பக ஸ்கேனிங் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மாறாக, `மாமோகிராம்' பரிசோதனை மூலம் மார்பகப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தால், அதனை மேலும் உறுதிசெய்ய, `எஃப்என்ஏசி' (FNAC) என்ற நீர்பரிசோதனை அல்லது பயாப்ஸி செய்ய வேண்டியிருக்கும்.
`மாமோகிராம்' பரிசோதனைக்கான செலவு தனியார் மருத்துவமனைகளில் இரண்டாயிரம் ரூபாய் வரை கட்டணம் ஆகலாம். ஆனாலும், ஆரம்பக் கட்டத்தில் கண்டறியப்பட்டால், மார்பகப் புற்றுநோயை முழுமையாகக் குணப்படுத்திவிடலாம் என்பதால் மார்பக சுயபரிசோதனை மற்றும் `மாமோகிராம்', தற்போது மிகவும் அவசியமானவையாக உள்ளன.
மார்பக சுயபரிசோதனை மற்றும் `மாமோகிராம்' முடிந்து, மார்பில் புற்றுநோய் கண்டறியப்பட்டால் அதன் நிலைகள் மற்றும் அதன் தீவிரம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு அதற்கேற்றாற்போல அறுவை சிகிச்சை, கதிரியக்கச் சிகிச்சை, கீமோதெரபி ஆகிய சிகிச்சைகளில் ஏதேனும் ஒன்றோ அல்லது அனைத்துமே வழங்கப்படுகிறது.
புற்றுநோய் என்றதும் யாரும் பயப்படவோ மனதளவில் சோர்ந்துபோகவோ தேவையில்லை. மார்பகப் புற்றுநோயையும், மரணத்தையும் வெல்லும் ஆற்றல்பெண்களுக்கு நிச்சயம் உண்டு.
`புற்றுநோய்க்கு மட்டும் பயப்படுங்கள். அதன் பரிசோதனைகளுக்கு அல்ல...' என்று பெண்களை `மாமோகிராம்'செய்ய அழைக்கிறது உலகப் புற்றுநோய் மையம்.