கட்டிட தொழிலாளர்கள் இடையே மோதல்: இளைஞரை கொன்று புதைத்த சக தொழிலாளி
கோவை அருகே கட்டிட தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் சக தொழிலாளி இளைஞரை கொன்று புதைத்து உள்ளார்.
கோவை மாவட்டம் அன்னூர் தாலுகாவிற்குட்பட்ட அல்லப்பாளையம் கிராமத்தில் ஸ்ரீதிருமுருகன் நகரில் தனியாருக்கு சொந்தமான மனையிடம் உள்ளது. இதில் கோவையை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கு சைட் நம்பர் 10ல் மனையிடம் உள்ளது. அந்த இடத்தில் தற்போது பாலகிருஷ்ணன் வீடு கட்டி வருகிறார். இதனிடையே நேற்று மாலை இடத்திற்கு பாலகிருஷ்ணன் வந்துள்ளார்.
அப்போது வீட்டின் ஓரத்தில் ஆண் ஒருவரின் சடலம் புதைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதன்பின் பாலகிருஷ்ணன் கொடுத்த தகவலின் பேரில் அன்னூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது வீட்டைக் கட்டி வரும் என்ஜினீயர் பிரகதீஷிடம் இது தொடர்பாக விசாரித்த போது கோவையை சேர்ந்த அசோக்குமார், நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ், முருகையன் ஆகியோர் வேலை செய்தது தெரிந்தது. விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வீடு கட்டும் இடத்தில் இவர்கள் மூவரும் குடிபோதையில் சண்டையிட்ட போது, சதீஷ், முருகன் ஆகியோர் சேர்ந்து அசோக் குமாரை தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் அசோக் குமார் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார். அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் சதீஷ், முருகையன் ஆகிய இருவரும் சேர்ந்து அசோக்குமாரின் உடலை அதே இடத்தில் குழி தோண்டி அவசர அவசரமாக புதைத்துள்ளனர்.
இதனிடையே சதீஷ் என்பவரது உடல் நீலகிரி மாவட்டம் லவ்டேல் பகுதியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காவல் துறையினர் முருகையினை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டிட தொழிலாளியை கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.