சிவாஜி கணேசனை கௌரவித்த அமெரிக்க அதிபர் கென்னடி..!

அமெரிக்க அதிபராக இருந்த கென்னடி நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அழைத்து கௌரவித்துள்ளார்.

Update: 2024-01-23 00:41 GMT

அமெரிக்கா சென்று திரும்பிய சிவாஜியை, தமிழ் திரையுலகத்தினர் எம்.ஜி.ஆர்., தலைமையில் வரவேற்றனர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அமெரிக்காவுக்கு யானைக் குட்டி ஒன்றை அனுப்பிய நிலையில் அது குறித்து கேள்விப்பட்ட அப்போதைய அமெரிக்க அதிபர் கென்னடி போட்ட உத்தரவு தொடர்பான செய்தி தற்போது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

தமிழ் திரை உலகின் பிதாமகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவருடைய நடிப்பின் சாயல் கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுக்கும் இருக்கும் என்பதும் தெரிந்ததே. ஒரு நடிகர் வாழும் போதே அவருக்கு மிகப்பெரிய புகழ் கிடைத்தது என்பதும் உலகம் முழுவதும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மட்டுமே.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக கென்னடி இருந்த போது கடந்த 1962 ஆம் ஆண்டு அமெரிக்க பூங்கா ஒன்றுக்கு வரும் குழந்தைகள் விளையாடுவதற்காக யானைக் குட்டி ஒன்றை சிவாஜி கணேசன் பரிசாக வழங்கினார். அமெரிக்காவில் உள்ள இந்தியானா பொலிஸ் என்ற இடத்தில் உள்ள பூங்காவுக்கு சிவாஜி கணேசன் அனுப்பிய யானைக் குட்டிச்  சென்றது.

அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் அந்த யானை குட்டியுடன் விளையாடிய செய்தி பத்திரிகைகளில்  பரபரப்பான நிலையில் இது குறித்து கென்னடி கேள்விப்பட்டார். உடனடியாக சிவாஜி கணேசன் யார்? அவருடைய பின்னணி என்ன என்பதை அறிய முயற்சி செய்தார். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தொடர்பு கொண்ட அமெரிக்க அரசு, சிவாஜி பற்றிய முழு விவரங்களையும் கேட்டது.

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் சிவாஜி கணேசன் பற்றிய தகவல்களை அனுப்பி வைத்தது. அவற்றைப் படித்துப்  பார்த்து ஆச்சரியமடைந்த கென்னடி உடனடியாக சிவாஜி கணேசன் அமெரிக்க அரசின் விருந்தினராக சுற்றுலா வருவதற்கு அழைக்குமாறு அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார்.

இதன்படி சிவாஜி கணேசனுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட சிவாஜி கணேசன் அமெரிக்க அரசின் விருந்தினராக அமெரிக்கா சென்றார். இந்தியாவிலிருந்து ஒரு நடிகர் அமெரிக்காவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டது அதுவே முதல்முறை. இந்த பயணத்தின் போது தான் உலகின் மிகச்சிறந்த நடிகர் என்று அழைக்கப்பட்ட மார்லன் பிராண்டோவை சிவாஜி கணேசன் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் உள்ள பல இடங்களுக்கு சிவாஜி கணேசன் சுற்றுப்பயணம் செய்த போது அங்குள்ள இந்தியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்கள். இந்த பயணத்தின் போது அவர் அமெரிக்க அதிபர் கென்னடியையும் சந்தித்தார்.

இந்த நிலையில் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு சிவாஜி கணேசன் சென்னை திரும்பியபோது அப்போதைய நடிகர் சங்கத்  தலைவராக இருந்த எம் ஜி ஆர் மாலை அணிவித்து சென்னை விமான நிலையத்தில் சிவாஜியை சிறப்பாக வரவேற்றார். அதுமட்டுமின்றி சிவாஜியை நடிகர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

Tags:    

Similar News