காற்றில் கலந்த "மயிலு": நீங்காத நினைவுகள்

மயிலுவாக அறிமுகம் ஆகி மயில் போன்றே வாழ்ந்து காற்றில் கரைந்த ஸ்ரீதேவிக்கு நினைவு நாள்

Update: 2022-08-14 14:45 GMT

ஒரு பாட்டை கேட்டதுமே டக்கென, அந்த நடிகையின் முகம், நம் கண்முன் வருகிறது என்றால்.. ஸ்ரீதேவி அதில் நடித்தார் என்பதைவிட அதற்கு என்ன காரணமாக இருக்கும், ..?!

கூர்மையான மூக்கு.. பளிங்கு முகத்தில் ஊசலாடிய மீன் கண்கள்... சுருண்டு விழும் கேசம்.. கிறங்கி போகும் மொத்த அழகையும் வாரி தன்னிடத்தே வைத்து கொண்டவர் ஸ்ரீதேவி...!

அந்த கால படங்களில் ஒரு வெள்ளை கலரில் மூக்குத்தி அணிந்திருப்பார்.. அது 7 வெள்ளை கற்கள் பதித்தது... ஸ்ரீதேவியை பார்க்கும்போதெல்லாம் இந்த வெள்ளை கலர் மூக்குத்திதான் அனைவரின் கண்ணிலும் படும்..!

இதில்தான் அன்றைய இளைஞர்கள் விழுந்து விட்டார்களோ என்னவோ, ஆளாளுக்கு ஸ்ரீதேவி மாதிரியே தங்களுக்கு பொண்ணு வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தனர்.

ரொம்பவும் சிக்கலான கதைதான் "மூன்று முடிச்சு".. இப்படத்தின் ஜீவநாடியே ஸ்ரீதேவிதான். வெறும் 13 வயசு தான். நிர்மலமான அந்த முகத்தில்தான் எவ்வளவு உணர்ச்சிகள்!! எவ்வளவு குமுறல்கள்!! எவ்வளவு வேதனைகள்!!

இதில் தன்னை முழுமையாக சித்தரித்த திறமை அபூர்வமானது. சோக விழிகளும், உதடுகளும், துடிக்கும் கன்னங்களும், வழிந்தோடும் கண்ணீரும் எண்ணற்ற செய்திகளை உணர்வுகளை நம் முன்னே கொண்டு வந்து கொட்டியது.

இதற்கு அடுத்தாற்போல், "16 வயதினிலே". தமிழ் சினிமாவின் 75 ஆண்டுகால வரலாற்றில் இன்றுவரை நம்பர் ஒன் இடத்தை டித்துள்ள படம்.  ஸ்டுடியோக்களிலிருந்து சினிமாவை கிராமங்களின் தெருக்களில் நடமாட வைத்த முதல் படம்... மண்வாசனையை ரசிகர்கள், நுகர்ந்த முதல் படம்.

குழந்தைத்தனமான ஒரு பெண், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் பக்குவத்துடன் எப்படி கையாள்கிறாள் என்பதில் மயிலின் மிளிர்ந்த நடிப்பும், சப்பாணியின் அரை நிர்வாண உடையும், பரட்டையின் புது ஸ்டைலும், குருவம்மாளின் யதார்த்தமும்... மயிலுவை 'மைல்'... 'மைல்' என்றழைத்த டாக்டரின் தமிழ் உச்சரிப்பும், இளையராஜாவின் கிராமிய இசை ஆளுமையும்.. பட்ஜெட் பற்றாக்குறைவால், ஸ்லோமோஷன் காட்சிக்காக, செந்தூரப்பூவே பாட்டில், மயிலுவை மெதுவாக ஓடவிட்டு படம் பிடித்த நிவாஸின் கேமராவும், அப்படியே கிராமிய வாழ்வியலை நம் கண்முன்விரிய செய்தது.

"என்னோட பேரு குயில் இல்ல... மயில்" என்று சொன்னதுமே, எல்லோர் மனதிலும், இந்த மயிலு மழையென நிரம்பி விட்டாள்...!

தமிழ்நாட்டிலிருந்து ஹிந்தி சினிமாவுக்கு போய் தங்கள் ஆதிக்கத்தை செலுத்திய வஹிதா ரஹ்மான், வைஜெயந்திமாலா, ஹேமமாலினி-க்கு பிறகு ஸ்ரீதேவி மிக முக்கியமானவர்!!

ரொம்ப கம்மியான பேச்சு.. ஜாக்கிரதையான வார்த்தை உதிர்த்தலை கையாண்டார் ஸ்ரீதேவி.. எந்த உச்சத்துக்கு போனபோதும் கர்வம் இருந்ததில்லை.. அதே அப்பாவித்தனம், அதே குழந்தை முகம், நிரம்பியிருந்தது.... அதே சமயம், அதுவே அவரது மைனஸாகவும் இருந்தது.. எக்காலத்திலும் யாராலும் ஸ்ரீதேவி எளிதாக அணுக முடியாதவராகவே இருந்திருக்கிறார்.

நிர்பந்தமா? நெருக்கடியா? பாதுகாப்பு வேண்டியா? எப்படியோ இந்த கல்யாணம் நடந்து முடிந்துவிட்டது.. நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா வீட்டில் கல்யாண அறிவிப்பை, ஶ்ரீதேவி சொன்னபோது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியைவிட குழப்பம்தான் அதிகமானது.

இறுதிகாலத்தில்கூட அவருக்கான சுதந்திர எல்லைகள் வரையறுக்கப்பட்டதா? மறுக்கப்பட்டதா? அவமானங்களை சந்தித்தாரா? குழப்பத்தோடு குழப்பமாகவே அந்த உயிர் பிரிந்துள்ளது..!

ஒரு பெண்ணின் சுதந்திர எல்லைகளை, பெரும்பாலும், அவள் சார்ந்திருக்கும் நபர்களே தீர்மானிக்கிறார்கள். அந்தவகையில் ஶ்ரீதேவிக்கும், கூண்டு மட்டும் மாறியதே தவிர, குமுறல்கள் ஓயவில்லை.

அதேசமயம், இயற்கைக்கு மாறாக நாம் எந்த விஷயத்தை செய்தாலும், அது நமக்கே எதிராகிவிடும் என்பதையும், தனிமனித "ஒழுக்கமே", மனித வாழ்வின் உயரத்தை தீர்மானிக்கிறது என்பதையும் நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது..!

ஶ்ரீதேவியை பொறுத்தவரை, "தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்பதை தவிர வேறென்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. எனினும், நிறைய அழுத்தமான... அதே சமயம் நம் மனதில் இருந்து நீங்காத படைப்புகளை தந்துவிட்டு போயுள்ளார் இந்த பெண் கலைஞர்.. இவைகளை அசைபோட காலம் நமக்கு போறாது.

துறுதுறு நடிப்பு, நளினமான நடன அசைவுகள், அவரது சிறு சிறு நுணுக்களில்கூட நடிப்பை வெளிப்படுத்தும் பாங்கு... என பக்குவப்பட்ட நடிகை என்பதை அரை நூற்றாண்டு காலங்களில் நிரூபித்திருக்கிறார்.

ஆபாசத்தில் புரண்டு நெளியும் பல நடிகைகளுக்கு மத்தியில் துள்ளியோடும் அழகிய மான்குட்டியாக திகழ்ந்தார் ஸ்ரீதேவி. தரமும், கண்ணியமும், பக்குவமும் அவரது நடிப்பில் இழைந்து கிடந்தது..!

அத்தகைய ஆரோக்கிய கதாபாத்திரம் அவரது ஒவ்வொரு படங்களிலும் வியாபித்திருந்தது.. காலம் எவ்வளவோ கடந்து போனாலும், ரசனைகளின் சித்திரங்கள் காலங்காலமாக நம் கூடவே பயணப்படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

ஸ்ரீதேவி, பண்பட்ட நடிப்பிற்குரிய ஒரு பயிற்சிக் கல்லூரியும் ஆவார்... "16 வயதினிலே" மயிலுவாக, "ஜானி" அர்ச்சனாவாக, "மூன்றாம்பிறை" விஜியாக, "வாழ்வே மாயம்" தேவியாக மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவின் ஆதர்ச கதாநாயாகியாக இன்னும் நூற்றாண்டு காலம் நம் நினைவில் வாழ்ந்து கொண்டிருப்பார்.

வேறென்ன சொல்ல?! 'மூன்றாம் பிறை' படத்தில் வரும் இந்த வரிகளைதான் சொல்ல வேண்டி உள்ளது..!

"ஏனோ தெய்வம் சதிசெய்தது, பேதை போல விதி செய்தது..."!!

Tags:    

Similar News