இளையராஜா சம்பளத்தை உயர்த்த காரணம் யார்?
இளையராஜா தனது சம்பளத்தை உயர்த்த காரணமாக இருந்தது யார் தெரியுமா? படிங்க புரியும்.
சினிமாவில் அறிமுகம் கிடைத்து மேலே வளர்வது பெரிய பிரச்சனை. எனில் வளர்ந்த பின் எவ்வளவு சம்பளம் வாங்குகிறோம் என்பது பலருக்கும் ஈகோ தொடர்பான விஷயமாகவே இருக்கிறது. துவக்கத்தில் வாய்ப்பு கிடைத்தால் போதும் என இருப்பார்கள். கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக் கொள்வார்கள்.
ஆனால், ஒரு படத்தின் வெற்றிக்கு தன்னுடைய பங்கு முக்கியம் என்கிற எண்ணம் எப்போது ஏற்படுகிறதோ அப்போது ஒருவர் சம்பளத்தை ஏற்றி விடுவார். அதுவும் தன்னால் தான் படம் ஓடுகிறது என்கிற எண்ணம் வந்து விட்டால் தாறுமாறாக சம்பளத்தை உயர்த்தி விடுவார்கள்.
இது நடிகர், நடிகை, இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என எல்லோருக்கும் இது பொருந்தும். சினிமாவை பொறுத்த வரை ஹீரோவின் சம்பளமே மற்ற எல்லாவற்றையும் விட அதிகம். விஜய், அஜித், ரஜினி போன்றவர்கள் 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்குகிறார்கள். எனில் அதற்கு காரணம் படங்கள் ஓடுவதே அவர்களுக்காகத் தான். 1980களில் சினிமா உலகை கலக்கியவர் இசையமைப்பாளர் இளையராஜா. துவக்கத்தில் 5 ஆயிரம், 10 ஆயிரம் என கொஞ்சம் கொஞ்சமாக இவரின் சம்பளம் உயர்ந்து கொண்டே போனது. அவர் 50 ஆயிரம் சம்பளம் வாங்கி கொண்டிருந்த போது தான் பாக்கியராஜ் தான் எடுக்கவுள்ள தாவணி கனவுகள் படத்திற்கு இசையமைக்க கேட்டு ராஜாவிடம் போனார்.
அப்போது ஒரு லட்சம் சம்பளம் கேட்டிருக்கிறார் இளையராஜா. அதிர்ந்து போன பாக்கியராஜ் ‘என்னங்க ஒரு லட்சம் கேட்குறீங்க?’ என பாக்கியராஜ் கேட்க ராஜாவோ ‘என் அளவு இசை ஞானம் இல்லாத ஒருத்தர் தமிழ் சினிமாவில் ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் போது நான் கேட்கக் கூடாதா?’ என கேட்டாராம். ராஜா சொன்ன அந்த ஒருவர் டி.ராஜேந்தர்.
அப்போது டி.ராஜேந்திரின் இசைக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருந்தது. தான் இயக்கும் படங்கள் மட்டுமில்லாமல் மற்ற சில இயக்குனர்களின் படங்களுக்கும் இசையமைத்து கொடுத்தார் டி.ராஜேந்தர். அப்படி இசையமைக்க அவர் ஒரு லட்சம் சம்பளம் வாங்கினார். இதை ஒப்பிட்டு தான் ராஜா பாக்கியராஜிடம் தனக்கு ஒரு லட்சம் சம்பளமாக கேட்டார். பாக்கியராஜும் அவர் சம்பளத்தை கொடுத்து விட்டார்.