சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் இளவரசனாக முடி சூடுவாரா..? பிரின்ஸ் வெற்றிக்கு வாழ்த்துக்கள்..!

Rise and fall of actor Sivakarthikeyan- சொந்த முயற்சி மற்றும் உழைப்பில் சினிமாவில் உச்சம் தொட்ட சிவகார்த்திகேயன் இன்னல்களை சந்தித்ததன் காரணங்கள் என்ன..? தெரிஞ்சுக்கோங்க.

Update: 2022-10-23 09:01 GMT

பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன், மரியா ரியாபோஷாப்கா

Rise and fall of actor Sivakarthikeyan-சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா வரலாற்றில் குறைந்தபட்சம் 1990களில் இருந்து டிவி தொகுப்பாளர்கள் வரிசையில்  தனித்துவமானவராக அறியப்பட்டவர். அவரது அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பு மற்றும் இணையத்தின்  நல்ல வழிகாட்டல் மூலம் உயர்ந்தார். சினிமாவில் எந்தவித பின்புலமும் இல்லாமல் சொந்த முயற்சியில் வந்த சில நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை மிக குறைந்த காலத்தில் சிவா செய்த சாதனைகளைப்  போல, தமிழ் சினிமா வரலாற்றில் வேறு எந்த நடிகரும் செய்திருக்கவில்லை. அவரைப்போல வேகமாக உயர்ந்த நடிகர்கள் அரிது.


சினிமாவில் இவரைவிட பெரிய ஜாம்பவான்கள் இருந்த போதிலும் மற்ற நடிகர்களை ஒப்பிடும்போது அவரது படங்கள் அனைத்தும் நான்காவதாக அதிக சதவீத லாப விகிதத்தை கொடுத்துள்ளது. இப்படி உச்சம் தொட்ட சிவகார்த்திகேயன், இன்று ரூ.100 கோடி வரை கடன் சுமையில் சிக்கியுள்ளார். தனது வரவு செலவுகள் குறித்து எதுவும் அறியாதவராக இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. ரூ.70 கோடி முதல் ரூ.80 கோடி வரை சம்பாதித்த அவருக்கு செலவுகள் என்ன என்பது தெரியாமல் இருந்துள்ளது. அதாவது அவருக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளது.


அவரது வளர்ச்சி கண்டு தாங்கிக்கொள்ள முடியாத சிலரின் சதியால் இது நேர்ந்துள்ளது என்று சிலர் கூறினாலும் கூட அவரது நடவடிக்கைகள் அதை உறுதிப்படுத்தவில்லை. தேனைத்தடவி குழந்தைகளுக்கு மருந்து ஊட்டுவதுபோல அவரிடம் ஆசைகாட்டி மோசம் செய்துள்ளதை தாமதமாகவே  சிவா புரிந்துகொண்டுள்ளார் என்கிறார்கள் அவரது நலவிரும்பிகள். சினிமாவில்  இருந்தே அவரை விரட்டிவிடவேண்டும் என்கிற அளவுக்கு உடன் இருந்தவர்கள் சதி செய்திருப்பதாக கூறுகிறார்கள்.

எவ்வாறு இருப்பினும் சிவகார்த்திகேயனின் எழுச்சியும் வீழ்ச்சியும் அவரது தொலைக்காட்சி தொகுப்பாளர் பணி முதல் 2017-18 காலகட்டத்தில் அவர் ஸ்டாராக உயர்ந்தது வரை பார்ப்போம்.


சிவாவின்  எழுச்சி

சிவகார்த்திகேயன் ஒரு பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளராகவும்  மிமிக்ரிசெய்வதிலும் வல்லவர். அவர் மிமிக்ரி மற்றும்   நகைச்சுவையான  பேச்சுக்காக பரிசு பெற்றவர். அவர் திறமையானவர், ஆனால் அவரைப்போலவே அதே பரிசுகளைப் பெற்ற ஒரு டஜனுக்கும் மேலாக  மற்றவர்களும் இருந்தனர். ஆனால் மற்றவர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன் பின்னரே அவர் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆனார். 

Rise and fall of actor Sivakarthikeyan

2007ம் ஆண்டில் சிவகார்த்திகேயனுக்கு முதல் முதலில் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிக்க சிறிய வாய்ப்பு கிடைத்தது. அதாவது ஒரு சிறிய பாத்திரத்தில் நடிப்பதற்காக அழைத்திருந்தனர். 22 நாட்களில் முடியும் என்று எதிர்பார்த்த ஷூட்டிங் சுமார் 10 மாதங்களாக நீடித்தது. வருமானத்தை விட்டுவிட்டு இவ்வளவு நீண்ட காலம் செலவழிப்பதை விரும்பாத சிவா, தொலைக்காட்சி வேலையே போதும் என்று மீண்டும் தொகுப்பாளர் பணிக்கே திரும்பிவிட்டார்.


முதல் சினிமா வாய்ப்பு 

சிவாவின் தொகுப்பாளர் பணியில் அவரை கவனித்த நடிகர் தனுஷ், சிவா ஒரு பெரிய நட்சத்திரமாக வர வாய்ப்பு உள்ளது என்று நம்பினார். ஆனால் சிவாவுக்கே அதில் நம்பிக்கை இல்லை. 2011ம் வருஷம், தனுஷ் நடித்து வெளிவந்த திரைப்படமான 3 இல் சிவாவுக்கு நடிக்கும் வாய்ப்பை வழங்கினார். சிவாவும் அந்த முதல் வாய்ப்பை சரியாக பயன்படுத்தினார்.

அதன் பின்னர் இயக்குநர் பாண்டிராஜ் சிவாவுக்கு மெரினா படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார். மீண்டும் சிவாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. சிவா அதிர்ஷ்டசாலியானார். இயக்குனர் பாண்டிராஜின் முதல் தேர்வாக இருந்தவர் நடிகர் விமல்தான். ஆனால் விமல் பெரிய சம்பளம் கேட்டதால் அந்த வாய்ப்பு சிவாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. மெரினாவில் சிவாவின் சம்பளம் ஒரு நாளைக்கு ரூ.1000 . படம் லாபகரமாக ஓடினால் ரூ. 50,000 லாபத்தின் சதவீதம் என்று பேசப்பட்டிருந்தது.

தொடர்ந்து சிவாவின் நடிப்பு பாராட்டைப்பெற்றது. அதன்பின் கேடி பில்லா கில்லாடி ரங்காவிற்கு பாண்டிராஜ் விமல் தேதிகளை பயன்படுத்தியபோது, சிவாவுக்கு விமலுக்கு இணையாக சீன்கள் வழங்கப்பட்டன. விமல்,சிவா இருவரின் நண்பராக சூரியைப் பயன்படுத்தினார் பாண்டிராஜ். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.


சிறந்த நாயகன் சிவா 

இந்த படத்தில் விமலைவிட சிவாவின் நடிப்பை பலரும் ரசித்து பாராட்டினர். குறைந்த பட்ஜெட் படங்களின் சிறந்த நாயகன் சிவா என்ற எழுதப்படாத விதியாகிப்போனது. சிறிய தயாரிப்பாளர்கள் சிவாவுக்கு அள்ளிக்கொடுக்கத் தயாராக இருந்தனர். குறைந்த பட்ஜெட்டில் படம் தயாரித்தால் அதிக லாபம் சம்பாதித்துக்கொடுக்கும் ஹீரோ சிவா என்ற அந்தஸ்தைப் பெற்றார். தனுஷ்,முருகதாஸ் போன்ற தயாரிப்பாளர்கள் கூட  சிவாவை ஹீரோவாக்கி குறைந்த பட்ஜெட்டில் படங்களைத் தயாரிக்க முடிவு செய்தனர்.

இதனால் சிவாவுக்கு ஏறுமுகம். ஏராளமான வெற்றிகள் வந்தன. எதிர் நீச்சல் (சராசரி வெற்றி ), மான் கராத்தே (நல்ல ஹிட்), காக்கி சட்டை (நல்ல ஹிட்), வருத்தப்படாத வாலிபர் சங்கம் (சூப்பர் ஹிட்) மற்றும் ரஜினி முருகன் (சூப்பர்ஹிட்). இப்படி  வெளிவந்த சிவாவின் ஒவ்வொரு படமும் வியாபார ரீதியாக வெற்றியடைந்தது. ஒவ்வொரு படமும் குறைந்தபட்ஷம் 77 சதவீதம் முதல் 210 சதவீதம் வரை தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டித் தந்தது. சிவாவுக்கு ரசிகர்களும் குவிந்தனர்.

சிவா சாதாரண தோற்றம் கொண்ட எல்லோருக்கும் அறிமுகமான (பக்கத்து வீட்டு பையனைப்போல) ஒரு அடக்கமான, நையாண்டித்தனம் உள்ள, ஆனால் போராடும் திறன்பெற்ற ஒரு ஹீரோவாக அடையாளம் காணப்பட்டார். இப்படி வளர்ந்த சிவா தானே கோடாலியை எடுத்து காலில் போட்டுக்கொண்டார்.


வளர் பிறை

ரஜினி முருகன் வெற்றிக்குப் பிறகு 2016ல் சிவாவின் புகழ் உச்சம் தொட்டது. ஆனால் அதற்குப்பிறகு அவரது படங்களை வெளியிடுவதில் சில சிக்கல்களை சந்திக்க நேரிட்டது. ரஜினி முருகன் சில சிக்கல்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்டது. பொதுவாகவே சிக்கல்களை சந்திக்கும் திரைப்படங்கள் வெற்றியடைவதில்லை என்ற கருத்து தமிழ் சினிமாவில் நிலவி வந்தது. அதை பொய்யாக்கி ரஜினி முருகன் திரைப்படம் தமிழ் சினிமாவில் ப்ளாக்பஸ்டர் பார் எக்ஸலன்ஸ் ஆனது. இயக்குனர் பொன்ராம் அந்த படத்தின் மூலம் தனது கடன்களை எல்லாம் அடைத்துவிட்டு சிவா வீட்டிற்கு வந்து அவருக்கு நன்றி கூறி அழுதார் என்று கூறுகிறார்கள்.

Rise and fall of actor Sivakarthikeyan

சரியில்லாத வழிகாட்டிகள் 

இப்படி வளர்ந்துவரும் சூழலில் அவரது நண்பர்கள் சிலரின் தவறான வழிகாட்டுதல்களால் சிவாவுக்கு தலைக்கனம் அல்லது ஈகோ வந்தது. வளரும்போது சாதாரணமாக எல்லோருக்கும் வருவதுதான் என்றாலும் ரஜினி,கமல், விஜய்,அஜித் போன்றவர்கள் அதைக் கட்டுப்படுத்தினர். அதனால் அவர்கள் வளர்ந்தார்கள்.

ஆனால், சிவாவின் நண்பர்கள் அவருக்கு நல்ல வழியைக்காட்டவில்லை. உங்கள் மீது தனுஷுக்குப்  பொறாமை. நீங்களே படம் தயாரியுங்கள். லாபம் உங்களுக்கே வரும் என்றெல்லாம் கூறி அவரை குழப்பநிலைக்குத் தள்ளினர். மற்றவர்களுக்காக நடித்து கோடிகோடியாக அவர்களுக்கு ஏன் லாபம் சம்பாதித்துக்கொடுக்கிறீர்கள். நாமே படம் தயாரிப்போம். நமக்கே லாபம் குவியும்  என்றனர்.


அஜித் அட்வைஸ் 

அப்போது கூட தனுஷ் நம் திறமையை அடையாளம் கண்டவர்.  நம் மீது அவர் ஏன் பொறாமைப்படப்போகிறார் என்று சிந்தித்து இருந்தால் அவருக்கு வீழ்ச்சி வந்திருக்காது. சிவா படம் தயாரிக்கிறார் என்றதும், நடிகர் அஜித் சிவாவை தனிப்பட்ட முறையில் வீட்டுக்கு அழைத்து, 'சிவா உனக்கு நல்ல பியூச்சர் இருக்கு. நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்து. தயாரிப்பில் இறங்காதே. இது என்னுடைய பர்சனல் அட்வைஸ்' என்று கூறியுள்ளார். அதற்கும் சிவாவின் நண்பர்கள் அஜித்துக்கே உங்கள் வளர்ச்சி மீது பொறாமை என்று போட்டார்களே ஒரு போடு. அதையும் சிவா நம்பியதுதான் அவரது துரதிர்ஷடம்.

சிவாவின் ஈகோவால், படம் என்னால் மட்டுமே வெற்றிபெறுகிறது. நான் நடித்தால் போதும் படம் ஹிட்டாகும் என்று கண்மூடித்தனமாக நம்பி கதைத்  தேர்வில் கோட்டைவிட்டார். யாரும் என்னை வெல்ல முடியாது என்று  கற்பனை வளர்த்தார்.


தனுஷ் எல்லா இடங்களிலும் தன்னை நாசப்படுத்துகிறார் என்று சிவா நம்பினார். அது முற்றிலும் பொய்யானது. தனுஷ்-ன்  விஐபி போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றதோடு, காக்கா முட்டை மற்றும் காக்கி சட்டை போன்ற அவரது சொந்த தயாரிப்பு திரைப்படங்கள் அவருக்கு நிறைய பணம் சம்பாதித்துக்கொடுத்தது. ஆனால் சிவா வேறு தயாரிப்பாளர் படங்களில் நடிக்க மறுத்துவிட்டார். மேலும் சிவாவை முற்றிலும் அழிக்கும் பொறுப்பினை அவரது நண்பர் (மன்னன் பெயர் கொண்டவர்) எடுத்துக்கொண்டார். சிவாவின் பினாமி தயாரிப்பாளராக மாறினார்.

கடைசியில் அவரே எல்லாம் முடிவு செய்யும் ஆளாக மாறிப்போனார். அதுவும் சிவாவின் சறுக்கலுக்கு முதல் அச்சாரம் எனலாம். என்னதான் நண்பர்  என்றாலும் சிவாவின் கண்காணிப்பு இல்லாமல் எல்லாம் நடந்ததாக இப்போது தெரியவந்துள்ளது. சிவாவை உயர்த்திப்பேசியே அவரை பாதாளத்தில் தள்ளியவர்கள் என்கிறார்கள். தயாரிப்பாளர்களிடம் கதை கேட்கும்போதெல்லாம் அடுத்த ரஜினி சிவாதான் என்றெல்லாம் பேசிய சம்பவங்களும் நடந்ததாக இன்று கோடம்பாக்கத்து காற்றில் பரவுகிறது.

Rise and fall of actor Sivakarthikeyan


24AM ஸ்டுடியோ

24AM ஸ்டுடியோ தொடக்கமே அவரது வீழ்ச்சிக்கான பாதையை தேடிக்கொடுத்தது என்று சிலர் ஓபனாகவே கூறுகிறார்கள். சிவாவின் மாற்றங்களை தமிழ் ஊடகங்கள் உடனடியாக பார்த்தன. அடக்கம், தயாரிப்பாளர்களிடம் எதையும் வலியுறுத்திக்  கேட்காத, அமைதியான, நல்ல குணமுள்ள இளைஞனாக இருந்த சிவா, காணாமல் போனார்.

போலி பிம்பம் 

ஆடி கார் வாங்கினார். தனது பத்திரிகை வெளியீடுகள் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாக்கள் எல்லாம்  5 ஸ்டார் ஓட்டல்களில் நடைபெற வேண்டும் என்று டிமாண்ட் வைத்தார்.பேட்டிகள் கொடுக்க மறுத்துவிட்டார். (பெரிய நட்சத்திரம் பேட்டி கொடுக்க மாட்டாராம்). எனது படங்களில் கண்டிப்பாக ஹெலிகாப்டர் ஷாட் இருக்கணும் என்றார். அதற்கு ரெமோ படமே முதல் சாட்சி. ரெமோ அசல் பட்ஜெட்டைத் தாண்டி செலவுகள் எகிறின. இந்த வீண் செலவுகளால் 24AM ஸ்டுடியோவுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

ஆனால் சிவாவின் நண்பர்களோ உண்மையை மறைத்து படம் சூப்பர் ஹிட் மற்றும் பிளாக்பஸ்டர் என்று கூறி அவரை நம்ப வைத்தார்கள். படத்தின் முதலீடு என்ன? செலவு என்ன? வருமானம் எவ்வளவு? எல்லாம் போக லாபம் எவ்வளவு போன்ற எந்த விபரங்களும் சிவாவுக்குத்தெரியாது. வியாபாரம் பண்ணியதெல்லாம் சிவாவின் நண்பர்.

இதற்கிடையில் சிவா OMR சாலைக்கு அருகில் ஒரு விலையுயர்ந்த பங்களாவை வாங்கினார். அவர் இப்போது ஒரு போலி மாடஸ்டியை வளர்த்துக் கொண்டார் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். அனைவரையும் சிவா 'அண்ணா' என்று பணிவாக அழைப்பார். இப்போது அந்த சிவா இல்லை என்று வருத்தப்பட்டார்களாம், சாதாரண டெக்னீசியன்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை.


தொடர் தோல்வி 

சிவா இயக்கிய 'வேலைக்காரன்' உயர்த்தப்பட்ட பெரிய பட்ஜெட்டால் அந்த திரைப்படம் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. ஆனால் படம் "ஹிட்" என்று பல சார்பு கட்டுரைகள் வெளிவந்தன. நிதி ரீதியாக வெற்றிதான் என்று அவரது நண்பர் கூறியதை சிவாவும் நம்பினார். பின்னர் பொன்ராம் அவரை சீமராஜாவில் இயக்க வந்தபோது சிவா மகிழ்ச்சியடைந்தார்.

இந்த படத்திலும் ஏகப்பட்ட டிமாண்டுகள். ரூ.16.50 கோடி செலவிட்டு பாகுபலி காட்சிபோல சீன் வேண்டும் என்று இதிலும் பட்ஜெட் எகிறியது. படம் தோல்வியைத் தழுவியது. இப்போது தயாரிப்பாளர்கள் சிவாவிடம் நேரடியாக தோல்விகள் குறித்து  கூறினார்கள். அப்போதுதான் சிவாவுக்கு சில உண்மைகள் தெரிய வந்துள்ளது.

சிவாவின் கண்களுக்குத் தெரியாத பைனான்சியர்கள் வெளியே வந்து நஷ்டத்தை சிவாவிடம் சொன்னார்கள். சீமராஜாவுக்கு நஷ்டம் ஏற்பட்டது என்பதை அப்போதுதான் சிவா புரிந்துகொண்டார். ஆனால் அதற்குப்பிறகுதான் அவர் வாழ்க்கையில் பல அதிர்ச்சிகளை சந்தித்தார். பைனான்சியர்கள் அவரிடம் ரெமோ, வேலைக்காரன், சீமராஜா ஆகிய படங்கள் பெரிய தோல்வியடைந்துவிட்டன.  உங்கள் நண்பர் எங்களுக்கு ரூ. 67 கோடி பணம் தரவேண்டும் என்று கூறினார்கள். தலைசுற்றிய சிவா தனது  நண்பரிடம், பணத்தை எப்படி செலுத்துவது என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவரது நண்பரோ "என்னிடம் ஒன்றுமில்லை. நீங்கள் நடிப்பதற்கான உங்கள் தேதிகள் மட்டுமே என்னிடம் உள்ளன என்றாராம் கூலாக. 

Rise and fall of actor Sivakarthikeyan


ரூ.82 கோடி கடன் 

இப்போதுதான் சிவாவின் மனதில், அஜித் கூறியது நினைவுக்கு வந்திருக்கும். இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று சிவா பைனான்சியர்களிடம் கேட்டார். அவர்கள் சிவாவிடம், கடனை அடைக்கும் வரை உங்கள் சம்பாத்தியத்தில் 70சதவீதம் எங்கள் கடனுக்குத் தரவேண்டும் என்றார்கள்.

அதனால், சிவா ஏறக்குறைய ரூ. 82 கோடியை வட்டியுடன் சேர்த்து கட்டியாக வேண்டும். சிவாவுக்கு வேறு வழியும் தெரியவில்லை. ரூ. 82 கோடி கடனை சிவா தனது அடுத்த 10 படங்களின் மூலம் அதாவது ஒரு படத்திற்கு ரூ.8.20 கோடி வீதம் பைனான்சியர்களுக்கு கட்டுவதாக ஒப்பந்தம் போடப்பட்டது.

சிவகார்த்திகேயன் இன்று

சிவா, சிறந்த திறமையுடையவர். நண்பர்கள் கூறியதைக்கேட்டு ஈகோ வளர்த்து, பிற நடிகர்களை ஒப்பிட்டதை நம்பி மோசம் போனார். கஷ்டங்களில் உதவும் அவரது நண்பர் தனுஷ் போன்றோரின் நட்பைக்கெடுத்துக்கொண்டார். ஆனாலும் சிவாவுக்கு இன்னும் சந்தை வாய்ப்புகள் உள்ளன. அதனால் இனிமேலாவது அவர் சரியான பாதையை தேர்வு செய்து பயணிக்க  வேண்டும். நம்பிக்கைக்குரியவர்களை மட்டும் அருகில் சேர்த்துக்கொள்ளவேண்டும். 

அதற்குப்பின்னர் அவரது டாக்டர், கனா, டான் போன்ற படங்கள் அவருக்கு சுமாரான வெற்றியைத் தந்தன. அதன் தொடர்ச்சியாக தற்போது பிரின்ஸ் தீபாவளிக்கு வெளியாகியுள்ளது.


பிரின்ஸ் வெற்றிக்கு வாழ்த்துக்கள்

உங்களின் 'பிரின்ஸ்' படம் வெற்றி பெற்று சாதனைப் படைக்கவேண்டும். தீபாவளியில் அசுரன் வதை செய்து கொல்லப்பட்டதைப் போல உங்கள் வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்கள் அனைத்தையும் நீங்கள் முறியடித்து வெற்றி பெற வாழ்த்துகிறோம். தோல்விகள் உங்களுக்கான வீழ்ச்சியல்ல...உங்களுக்கான அனுபவப்பாடம். 

Tags:    

Similar News