மதுரையை கலக்கிய தியாகராஜ பாகவதரின் அபூர்வ புகைப்படம்
1950ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், நவராத்திரி பெருவிழாவில் ஏழிசை மன்னர் M.K.தியாகராஜ பாகவதர் கச்சேரியில் எடுக்கப்பட்ட அபூர்வ புகைப்படம் பாருங்கள்.
தியாகராஜபாகவதரின் பெருமைகளை பேசிக்கொண்டே இருக்கலாம். எழுதிக்கொண்டே இருக்கலாம். அவரது மந்திரக்குரலுக்கு மயங்காதவர்கள் அந்தக்காலத்தில் இல்லை. இப்போது திரைவிழாக்களுக்கு கூடும் கூட்டத்தை விட பல மடங்கு அந்தக்காலத்தில் தியாகராஜபாகவதர் கச்சேரிக்கு கூட்டம் கூடும்.
இந்நிலையில் 1950ம் ஆண்டு நவராத்திரி பெருவிழாவிற்கு தியாகராஜபாகவதரை அழைத்து கச்சேரி நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இந்த கச்சேரியை கோயில் வளாகத்திற்குள் நடத்துவது தான் மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகத்தின் வழக்கம். ஆனால் இப்போது வருவது சூப்பர் ஸ்டாரே... இவரது கச்சேரிக்கு கூடும் கூட்டத்தை மீனாட்சியம்மன் கோயி்ல் வளாகம் தாங்காது என்பதால், கச்சேரியை கோயிலுக்கு வெளியில் புதுமண்டப முகப்பில் வைத்து நடத்தினார்கள். அப்போது அத்தனை பத்திரிக்கைகளும் இந்த கச்சேரியை வெகுவாக புகழ்ந்து எழுதி குவித்து விட்டனர். கச்சேரி நடந்த புதுமண்டபம் உள்ள கீழச்சித்திரை வீதி தொடங்கி தென்புறம் வடபுறம் சிம்மக்கல் சாலை வரையிலும் கச்சேரியைக் கேட்கவும் பாகவதரைப் பார்க்கவும் கூடிய மக்கள் கூட்டம் இதுவரை மதுரை மாநகர் காணாத கூட்டம் என்று பிரமித்தபடி எழுதினார்கள். மைக்செட் போட்ட MMR ரேடியோஸ் குழாய் ஸ்பீக்கர் மட்டும் 300க்கு மேல் வைத்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையானது சித்திரைத் திருவிழா அளவுக்குக் கூட்டம் கூடியது எனவும் மதுரையே குலுங்கியது எனவும் புகழ்ந்து எழுதியது. இப்படி அந்தக்கால சூப்பர் ஸ்டார் தியாராஜபாகவதர் கச்சேரி படத்தை மிகுந்த சிரமத்திற்கு பின்னரே தேடி எடுக்க வேண்டி இருந்தது.