25 நாளில் படத்தை முடித்து 175 நாள் ஹிட் அடித்த ரஜினி..!
ரஜினியின் கால்சீட் கிடைக்காமல் 25 நாளில் எடுக்கப்பட்ட படம், சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து 175 நாள் ஓடியது.;
ஆறு மாசம் ஒரு வருஷம் என்றெல்லாம் நடிச்சு படம் ஓடமாட்டேங்குது. ஆனால் மிக குறைந்த 25 நாட்களில் ஒரு படத்தை எடுத்து அதை வெற்றிமுரசு கொட்ட வைத்திருக்கிறார்கள்.
அந்த காலகட்டத்துல படம் எடுக்குற எஸ்.பி முத்துராமன் அதை தயாரிச்சு கதை வசனம் எழுதுற பஞ்சு அருணாச்சலம் போன்றோர் டக் டக் டக்கென்று எல்லாம் செய்து முடித்து விடுவர். திரைக்கதை எல்லாம் உட்கார்ந்தால் அப்படியே அருவி மாதிரி கொட்டும். இவர்கள் அப்படிப்பட்ட ஜாம்பவான்கள். ஒரு ஒன்லைனை வைத்தோ அல்லது வேறு படத்தின் கதையை வைத்தோ அப்படியே ஸ்க்ரீன்ப்ளேயை வேற லெவலில் எழுதி தமிழ் ரசிகர்களை கவர்ந்து விடுவார்கள்.
ஒருமுறை தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் கொஞ்சம் கஷ்ட காலத்தில் இருந்த நேரத்தில், இயக்குனர் எஸ்.பி முத்துராமன் , ரஜினியிடம் கால்ஷீட் கேட்போம். அதை வைத்து படம் தயாரியுங்கள் என ஆறுதல் சொல்லி இருக்கிறார். ரஜினியிடமும் கால்ஷீட் கேட்கப்பட்டிருக்கிறது. ரஜினி அப்போது 10 நாட்கள் கால்ஷீட் தான் உள்ளது என சொல்லி இருக்கிறார். 10 நாள் கால்ஷீட்டில் கெஸ்ட்ரோலில் தான் நடிக்க வைக்க முடியும். இன்னும் சில நாட்கள் கால்ஷீட் கேட்க மிகுந்த சிரமத்துக்கு இடையில் 25 நாட்களை ஒதுக்கி கொடுத்திருக்கிறார். 25 நாட்களில் 23 நாட்களிலேயே இந்த படத்தை எடுத்து முடித்து விட்டாராம். மீதி இருந்த இரண்டு நாட்களில் ரஜினியே ஷூட்டிங் ஸ்பாட்டில் டிராலி எல்லாம் தள்ளி ஜாலியாக அமர்க்களம் செய்தாராம்.
இன்சாப் கி புகார் என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் தான் இது. சாதாரண ஒன்லைனுக்கே எஸ்.பி முத்துராமனும் பஞ்சு அருணாசலமும் கதை திரைக்கதை மற்றும் வசனத்தில் தூள் கிளப்புவார்கள். இது ஏற்கனவே வந்த படம் வேறல்லவா அதனால் நன்கு அந்த ஹிந்தி படத்தை மெருகேற்றி தமிழுக்கு ஏற்றபடி கொண்டு வந்தனர்.
இப்படத்தில் முதலில் கெளதமி வேடத்தில் நடிக்க வேண்டியது தென்றலே என்னை தொடு ஜெயஸ்ரீயாம். அவர் திருமண நெருக்கடியில் இருந்ததால் பாதி நடித்த நிலையில் அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டு அறிமுக நடிகையாக கெளதமியை கொண்டு வந்திருக்கிறார்கள். முதன் முதலில் ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு பாடலைத்தான் ஷூட் செய்தார்களாம். ஆனால் இந்தபாடல் காட்சியில் முதன் முதலில் ரஜினியுடன் நடிக்க கெளதமி பயந்தாராம். அதனால் பாடலை கேன்சல் செய்து விட்டு முதலில் ரஜினியுடன் நடிக்க வைத்து அவரின் நடிப்பு பயம் போக்கி பாடல் காட்சியை எடுத்திருக்கிறார்கள்.
ரஜினியுடன் மற்றொரு நாயகனாக அப்போதைய முன்னணி நாயகன் பிரபு நடித்திருந்தது படத்திற்கு பலம் சேர்த்தது. ரஜினியும், பிரபுவும் சிறுவயதிலேயே வில்லன் ரவிச்சந்திரன் கூட்டத்தினரால் தனது தாய் தந்தையை இழக்கின்றனர். அதனால் அவர்களுக்கும் எதிரி வில்லன் ரவிச்சந்திரன் தான். சின்ன சின்ன சேட்டைகள் செய்து ஜெயிலுக்கு செல்லும் ரஜினியும், பிரபுவும் ஜெயிலில் தூக்கு தண்டனை கைதியாக இருக்கும் பாண்டியனை பார்க்கின்றனர்.
அவரது தங்கையின் வாழ்வை கெடுத்து ராதாரவி, உடந்தையாக இருக்கும் இன்ஸ்பெக்டர் நல்லசிவம் கேரக்டரில் வரும் வினுச்சக்கரவர்த்தி, ரவிச்சந்திரன் இவர்கள் பாண்டியனின் தங்கை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்கின்றனர். கொலைப்பழியை அண்ணன் பாண்டியன் மீதே போடுகின்றனர்.
அவரின் கண்ணீர் கதையை கேட்கும் ரஜினியும், பிரபுவும் இவர்கள் தான் நம்முடைய எதிரியும் கூட என அறிந்து கொள்கின்றனர். உன் எதிரிதான் எங்க எதிரியும் என சொல்லி தூக்கு தண்டனை கைதி பாண்டியனின் கையை உடைக்கின்றனர். ஏனென்றால் தூக்குத்தண்டனை கைதி ஏதாவது உடல் ரீதியாக பாதிக்கப்பட்டால் தண்டனையை தள்ளி வைக்க வேண்டும். அதனால் அவ்வாறு செய்து, சாதாரண குற்றத்துக்காக ஜெயில் சென்ற ரஜினி, பிரபு இருவரும் வெளியில் வந்து எதிரிகளை பழிவாங்குகின்றனர்.
ரஜினியின் அதிகபட்ச நகைச்சுவை தன்மை வெளிப்பட்ட படம் இது. ரஜினிக்குள் இருக்கும் நகைச்சுவை தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே எஸ்.பி.எம் இப்படத்தில் ரஜினி கதாபாத்திரத்தை சிறப்பாக வடிவமைத்தாராம். இன்ஸ்பெக்டராக வரும் வினுச்சக்கரவர்த்தி, அவரின் மனைவி மனோரமா போன்றோருடன் ரஜினி, பிரபு அடிக்கும் கூத்துக்கள் அப்போதைய நேரத்தில் திரையில் கலகலப்பினை ஏற்படுத்தியவை.
‘‘இப்ப என்ன செய்விங்க, இப்ப என்ன செய்விங்க’’ என நோட்டீஸை கடித்து விழுங்குவதும், வினுச்சக்கரவர்த்தி வீட்டுக்கு பெரிய மீசையுடன் விஜிலென்ஸ் ஆபிஸராக ரஜினி, பிரபு செல்வதும், ரஜினி இப்படத்தில் பேசும் பட்லர் இங்லீசும் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தது.
எம்.ஜி.ஆர் அந்த நேரத்தில் இறந்திருந்ததால், அந்த நேரத்து அரசியல் குழப்பங்களை வைத்து சோ வையும் வில்லன் கூட்டாளிகளில் ஒருவராக்கி அந்த நேர அரசியல் காமெடிகளை பேசவைத்து இருந்தனர்.
இறுதி காட்சியில் வில்லன் குரூப்புகளுடன் குகைக்குள் புதையல் எடுக்க செல்லும் காட்சிகள், பாம்புகள் அதற்கு இளையராஜா கொடுக்கும் பின்னணி இசை, நடந்து செல்லும் போது அடிக்கொரு முறை அரசியல் கமெண்ட்களை கொடுத்து செல்லும் சோ போன்ற அனைவரும் ரசிக்க வைத்தனர்.
க்ளைமாக்ஸ் காட்சிகள் அரக்கு பள்ளத்தாக்கில் போரா குகைகள் என்ற பகுதியில் படமாக்கப்பட இருந்ததாம். ஆனால் அங்கெல்லாம் சென்றால் ரஜினியின் கால்ஷீட் இன்னும் அதிகமாகும் என சென்னையிலேயே குகை செட் அப் செய்து படத்தை எடுத்து முடித்திருக்கின்றனர்.
இளையராஜா இசையில் ‘‘வா வா வஞ்சி இளமானே, ஜிங்கிடி ஜிங்கிடி, நாற்காலிக்கு சண்டை போடும், கண்டுபுடிச்சேன், கண்டுபுடிச்சேன்’ போன்ற இப்பட பாடல்கள் புகழ்பெற்றவை மேலும் இப்படத்தில் இடம்பெற்ற உத்தமபுத்திரி நானு பாடல் மூலம் தான் ஸ்வர்ணலதா பாடகியாக அறிமுகமானார். 25 நாட்களில் எடுக்கப்பட்ட இப்படம் 1988 ஏப்ரல் 14 தமிழ்ப்புத்தாண்டுக்கு வெளியாகி 175 நாட்கள் ஓடியது சிறப்பு.
சில நாட்களில் தூர்தர்ஷனில் ஞாயிற்றுக்கிழமை பட வரிசையில் ஒளிபரப்பட்டது. அதுவும் அன்று கிரிக்கெட் என்பதால் மதியம் 3 மணிக்கே இப்படத்தை ஒளிபரப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.