Memorable Days of Tap Recorder-அது ஒரு கனாக்காலம்..!
ரெக்கார்ட்டிங் செய்த பாடல்கள் கேட்ட 1980ம் ஆண்டு காலத்தை பற்றிய ஒரு அழகிய பதிவு.;
Memorable Days of Tap Recorder, Cinema News, Ilayaraja Music, Ilayaraja Hits, 1980
டேப் ரிகார்டர் & கேஸட் இவையிரண்டும் அறிமுகமான போது உலகில் இதை விட ஒரு விஞ்ஞான வளர்ச்சி ஏதும் இருக்காது என்று நம்பினோம். அந்தளவு அதன் மீது கவர்ச்சி ஏற்பட்டது. அதிலும் கேஸட்டில் பாடல்கள் ரிகார்டிங் செய்யப்போவதே ஒரு தனி சுகம். பரிட்சைக்கு கூட அப்படித் தயாராகி இருக்க மாட்டோம். நமக்கு பிடித்த பாடல்களை...பட்டியலிட்டு அதனை மியூசிக்கல்ஸ் என்ற பெயரில் அமைந்துள்ள ரிகார்டிங் கடைக்குச் சென்று கொடுத்து விட்டால் 6 நாட்களுக்கு பிறகு வரச்சொல்வார்கள்.
அதிலும் 60 நிமிட கேஸட்டில் 12 பாடல்களும், 90 நிமிட கேஸட்டில் 18 பாடல்களும் பதியலாம். கடைக்காரர்கள் நமக்கு 60 நிமிட கேஸட்டையே பரிந்துரை செய்வார்கள். 90 நிமிட கேஸட் டைட் ஆகி அடிக்கடி சிக்கிக்கொள்ளும் எனவும் கூறுவார்கள். உண்மையில் 60 நிமிடம் என்றால் இன்னொரு கேஸட் அதிகமாக விற்கும் என்பது இதன் பின் ஒளிந்திருக்கும் வணிக நுட்பம்.
முதலில் நம்மை சினிமா பற்றிய அறிவுத் தேடலில் விட்டவர்களும் மியூசிக்கல்ஸ் கடைக்காரர்கள் தான். என்ன பாட்டு? என்ன படம் என்பதே அவர்களுக்குத் தெரியாது. என்ன படம்னு சொல்லுங்க தம்பி என்று நம்மிடம் கேட்பார்கள். இவர்கள் மிதவாதிகள்.
இசை ஞானம் இல்லாது சம்பாதிக்க இத்தொழிலில் இறங்கியவர்கள் தீவிரவாதிகள். சங்கர்கணேஷ் இசையமைத்த பாடல்களை இளையராஜா ஹிட்ஸில் பதிந்து தந்து விட்டு கேட்டால் தம்பி இது ராஜா மியூசிக் தான் என்று கூசாமல் சொல்வார்கள்.
அதை உறுதி செய்ய தீக்குண்டமே இறங்குவார்கள். நாமும் பயந்து, 'ஆமாங்க அண்ணன் சொன்னா சரியாத் தான் இருக்கும்' என ஜகா வாங்கவேண்டி இருக்கும். இதற்காகவே தேடித்தேடி பாடல்கள் பற்றிய விவரங்களை எடுக்க கற்றுக்கொண்டோம். இதனால் வாசிக்கும் பழக்கம் அதிகரித்தது. பிறகு சில வருடங்களில் ரசனையானவர்கள் இத்தொழிலில் வந்தார்கள்.
இவர்கள் கடையில் அழகாக பைண்டிங் செய்யப்பட்ட பெரிய நோட் ஒன்று இருக்கும், அதில் அழகான கையெழுத்தில் படத்தின் பெயரும் பாடலின் முதல் வரியும் எழுதப்பட்டிருக்கும். அதற்கு நேராக ஒரு எண்ணும் குறிப்பிட்டு இருக்கும், அதன் படி எழுதி கொடுத்தால் போதும். அதிலும் சிலர் ரஜினி ஹிட்ஸ், கமல்ஹிட்ஸ், ராஜாஹிட்ஸ் எனப் பிரித்து எழுதி இருப்பார்கள். சிலர் கலர் ஸ்கெட்ச் பேனாவில் தென்றல், நிலா, பூ, நெஞ்சம் என தொடங்கும் பாடல்களாக தனித்தனி நோட்டுகளில் ரசனையாக எழுதி வைத்திருப்பார்கள். நாம் கேட்ட பாடல்களை பதிந்து அவர்கள் தந்து விட்ட அடுத்த நொடி வீட்டிற்கு வந்து டேப்ரிகார்டரில் பாடலை கேட்கும் சுகம் அடடா. அது ஒரு கனாக்காலம்.
இளையராஜாவின் பொற்காலமான 80களில் கல்லுக்குள் ஈரம், பன்னீர்புஷ்பங்கள், ஆராதனை, மஞ்சள் நிலா, ஆனந்தக்கும்மி, காதல் ஓவியம், சிட்டுக்குருவி, என ராஜா பட்டையை கிளப்பிய திகட்டாத பாடல்கள். சில மொக்கை படங்களில் கூட அற்புதமான பாடல்களை தந்து இருப்பார் ராஜா. அதைத் தேடி எடுத்து பதிவதில் தனிச்சிறப்பு. அந்த படங்களின் பேரெல்லாம் தேடுவதற்கு கூகுள் வசதி அன்று இல்லை. தனி நோட்டு வைத்து எழுதிக் கொள்வோம். அந்த நோட்டு தான் அப்போது கூகுள்.
இதற்குப் பிறகு அசெம்பிள் செட் வந்து சக்கை போடு போட்டது. இதற்காக தனி ஸ்பீக்கர் பாக்ஸ் செய்து வைத்திருப்போம். இப்போது மோகன், விஜயகாந்த், ராமராஜன் பாடல்களின் காலம். அந்த பாடல்கள் ஸ்டீரியோ இசையில் கிடைத்தன. அந்த பாடல்களின் ஸ்டீரியோ இசையை தெருவே அலற விட்டு கேட்டது ஒரு அலாதி இன்பம். இதில் டேப் சிக்கி கொள்வது அதை பென்சிலால் சரி செய்வது, அறுந்து போன டேப்பை குய்க்பிக்ஸ் வைத்து ஒட்டுவது போன்ற மெக்கானிக் வேலைகளும் தெரிந்து வைத்து கொண்டோம்.
இன்று அந்த நினைவுகள் ஏதோ ஒன்றை இழந்துவிட்டோம் என்ற ஏக்கத்துடன் கடந்து செல்கிறது,காலம். அதுவும் ஒரு கனாக்காலம்.