மீண்டும் ஆளவந்தான்: தாணு வெளியிட்ட தகவல்
ஆசியாவிலேயே, முதன் முறையாக மோஷன் கிராஃபிக்ஸ் கேமிராவைப் பயன்படுத்திய பெருமை `ஆளவந்தான்' படத்திற்கு உண்டு.;
"கடவுள் பாதி, மிருகம் பாதி, கலந்து செய்த கலவை நான். வெளியே மிருகம் உள்ளே கடவுள், விளங்க முடியா கவிதை நான்” என கமல் கர்ஜிக்கும் `ஆளவந்தான்' படம், 22 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் வெளியாகவிருக்கிறது.
நவீனத் தொழில்நுட்பத்துடன், மேம்பட்ட வெர்ஷனாக வரவிருக்கிறது என்கிறார்கள். `ஆளவந்தான்' ரி-ரிலீஸ் குறித்து விசாரிக்கையில், சமீபகாலமாக 'நல்லவனும் நானே. கெட்டவனும் நானே.', 'நானே ஹீரோ, நானே வில்லன்' டைப்பில் படங்கள் வருகின்றன. ஆனால் 22 வருடங்களுக்கு முன்னரே அப்படி வெளியான படம் தான் 'ஆளவந்தான்'.
1984ஆம் ஆண்டு கமல்ஹாசனால் எழுதப்பட்ட ‘தாயம்’ எனும் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் அக்கதையை திரைக்கதையாக மாற்றிய கமல், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் அதனை ஒப்படைத்து ஆளவந்தானை இயக்க வைத்தார்.
குடும்பத்தில் நடக்கும் சின்ன சின்ன தவறுகளின் விளைவு, குழந்தைகளை எப்படியெல்லாம் பாதிக்கும் என்ற ஒன்லைனுடன் மாறுபட்ட திரைக்கதையைக் கொண்டது இது. இரண்டு கமலில் ஒருவர் கமாண்டோ, மற்றொருவர் கொடூர வில்லன்.
கமல் தவிர ரவீணா டாண்டன், மனீஷா கொய்ராலா, மிலிந்த் குணாஜி, சரத்பாபு, அனுஹாசன் என ஏகப்பட்ட பேர் நடித்துள்ளனர். கலைப்புலி தாணுவின் தாணுவின் பிரமாண்டத் தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில், திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் பாடல்களை ஷங்கர் - ஈஷான் - லாய் கூட்டணியும், பின்னணி இசையை மகேஷ் மாதவனும் செய்திருந்தனர்.
ஆசியாவிலேயே, முதன்முறையாக மோஷன் கிராஃபிக்ஸ் கேமிராவைப் பயன்படுத்தியது இதில்தான். லைவ் சவுண்ட், மாறுபட்ட திரைக்கதை என்று ஒவ்வொரு காட்சிகளிலும் வித்தியாசம் காட்டியிருப்பார் கமல். தவிர, க்ளைமாக்ஸ் காட்சியில், இரண்டு கமலும் சண்டைபோடுவதை கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில், அன்றைய காலத்திலேயே எடுத்து மிரட்டியிருக்கின்றனர்.
சிறந்த ஸ்பெஷல் எபக்ட்ஸ்க்காக தேசிய விருதையும் பெற்று படம் அசத்தியது. இப்படத்தில் நந்து எனும் கதாபாத்திரத்துக்காக கமல்ஹாசன் நிர்வாணக் காட்சிகளிலும் நடித்திருந்தார். ஆனால் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டபோது அக்காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் படத்தில் அந்தக் காட்சிகள் இடம்பெறவில்லையாம்.
இப்படம் ரிலீஸ் ஆகி கமர்ஷியல் ரீதியாக எடுபடாம போன சில வருடங்கள் கழித்து, இப் படத்தின் மூலம்தான் பெரும் நஷ்டம் அடைந்ததாகவும், கமல்ஹாசனால் பல கோடி ரூபாயை இழந்ததாகவும் ஆளவந்தான் என்னை அழிக்க வந்தான் என்றும் தாணு ஒரு பேட்டியில் குற்றம் சாட்டியிருந்தார்.
பின்னாளில் ஒரு பேட்டியில், மீண்டும் 'ஆளவந்தான்' படத்தை வெளியிடும் திட்டம் உள்ளதாக தாணு கூறி" 'ஆளவந்தான்' சொன்ன கதை வேறு, எடுத்த கதை வேறு, வெளியான கதை வேறு. அது ஒரு குழப்பமான கதை. இரண்டே முக்கால் மணி நேரப் படம். 20 வருடம் கழித்து வர வேண்டிய கதையை அவர் முன்னரே சிந்திச்சுட்டார்.
அந்தப் பரிசோதனை முயற்சியை அவரே தயாரிச்சிருக்கலாம். ஏனோ என்னைத் தயாரிக்க வைச்சுட்டார். ஆனால், அந்த 'ஆளவந்தான்' படத்தை நான் மறுபடியும் மாற்றி எழுதப்போறேன். நானே அதை பக்காவா எடிட் செய்து மீண்டும் வெளியிட்டு, ஒரு உச்சத்துக்குக் கொண்டு செல்வேன்" என்றும் தாணு சொல்லி இருந்தார்.
இந்நிலையில் எழிலோடும்..பொழிலோடும்.. Aalavandhan விரைவில் வெள்ளித்திரையில். அப்படீன்னு தாணு டுவீட் செய்துள்ளார். இப்படி அவர் ஷேர் செஞ்சிருப்பதை அடுத்து தாணுவிடம் கேட்ட போது `` மீண்டும் ரிலீஸ் பண்ணப் போறது உண்மை தான். அப்பவே லேட்டஸ்ட் டெக்னாலஜியில் அந்தப் படம் வெளியானது. இப்போது இன்னும் நவீன தரத்தில், புதிய சவுண்ட் தொழில்நுட்பத்தில் வெளியாகவிருக்கிறது. முதலில் படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ், அதனைத் தொடர்ந்து டீசர், டிரெய்லர் எனப் புதுப்படத்தின் புரொமோஷன் போல, ஒவ்வொன்றாக வெளிவரவிருக்கிறது என தெரிவித்தார்.