ஊழல், பண அரசியல், கிராமத்து வறுமை பற்றி தெளிவாக பேசும் ஹிட்லர்..!

ஊழல் வழக்கில் சிக்கி இருக்கும் அமைச்சர் ராஜவேலு (சரண்ராஜ்), வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வென்று விடலாம் என்று நினைக்கிறார்.

Update: 2024-09-30 05:32 GMT

ஹிட்லர் பட போஸ்டர்


ஊழல் செய்யும் சரண்ராஜ் பணம்கொடுத்து தேர்தலில் வென்றுவிடலாம் என்று  அவர் பணத்தை வெளியே எடுத்துச் செல்கிறார். ஆனால் பணம்  எடுத்துச் செல்பவர்களைக் கொன்று விட்டு அதை ஒரு கும்பல் திருடிச் செல்கிறது. இந்தக் கொலைகளுக்குப் பின்னால் இருப்பவர்களை விசாரிக்கத் தொடங்குகிறார் காவல்துறை துணை ஆணையர் சக்தி (கவுதம் வாசுதேவ் மேனன்).

இந்நிலையில், வங்கியில் பணியாற்றும் செல்வாவுக்கு (விஜய் ஆண்டனி) மின்சார ரயிலில் எதிர்ப்படும் சாரா (ரியா சுமன்) மீது காதல். ராஜவேலுவின் பணத்தைத் திருடி, கொலைகளைச் செய்வது யார்? இதற்கும் செல்வாவுக்கும் என்ன தொடர்பு? ராஜவேலுவின் அரசியல் எதிர்காலம் என்னவாகிறது? என்பது கதை.

‘படைவீரன்’, ‘வானம் கொட்டட்டும்’ படங்களுக்குப் பிறகு தனா இயக்கியிருக்கும் படம் இது. அரசியல் த்ரில்லர் களத்தைக் கையில் எடுத்த அவர், கதையில் புதுமையையும் திரைக்கதையில் சுவாரஸியத்தையும் போதுமான அளவு சேர்க்கத் தவறியிருக்கிறார். செல்வா - சாரா காதல் காட்சிகளும் சக்தியின் காவல்துறை விசாரணையும் மாறி மாறிப் பயணிக்கும் முதல் பாதியில் சில காட்சிகளை ரசிக்க முடிகிறது.

காதல் காட்சிகள் கதையின் மையத்துடன் தொடர்பற்றது என்றாலும் சில ரசனையான ஐடியாக்களால் கவர்கின்றன. கிராமத்துப் பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழப்பதை முதல் காட்சியிலேயே காண்பித்து விடுவதால் கதை என்ன என்பதை முதலிலேயே ஊகித்துவிட முடிகிறது.

எனவே தகவல்களை மறைத்துச் சொல்லும் திரைக்கதை உத்தி பெரிதாகக் கைகொடுக்கவில்லை. மின்சார ரயில் பயணத்தில் மர்மக் கொலைகள், அதைச் செய்வது யார் என்று கண்டுபிடிக்க முடியாத மர்மம் என சில விஷயங்கள் ரசிக்க வைத்தாலும் அவற்றை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறுகிறது திரைக்கதை.

விஜய் ஆண்டனி வழக்கமான வேடத்தில் நடித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் கூடுதலாக மெனக்கெட்டிருக்கிறார். ரியா சுமன் கொடுத்த வேலையை குறையின்றிச் செய்திருக்கிறார். கவுதம் வாசுதேவ் மேனன், சரண்ராஜ், அவரது தம்பியாக வரும் தமிழ், விவேக் பிரசன்னா என அனுபவம் மிக்க நடிகர்கள் பட்டாளம் தமது வேலையை சரியாக செய்திருந்தாலும் அவர்களது கதாபாத்திர வடிவமைப்பில் புதுமை இல்லை என்பதால் பெரிய தாக்கத்தை உணர முடியவில்லை. விவேக் - மெர்வின் இணையரின் பின்னணி இசை பரவாயில்லை. நவீன்குமார்.ஐ-யின் ஒளிப்பதிவு. காட்சி அனுபவமாகப் படத்தின் தரத்தை உயர்த்தி இருக்கிறது.

அரசியல்வாதிகளின் ஊழல், வாக்காளர்ளுக்குப் பணம் கொடுப்பது, கிராம மக்களின் துயரம் எனப் பல விஷயங்களைப் பேச முயன்றிருந்தாலும் எந்தவித தாக்கமும் செலுத்தத் தவறுகிறான் இந்த 'ஹிட்லர்'. 

Tags:    

Similar News