கவுண்டமணி - செந்தில் சில சுவாரஸ்யங்கள்..!

சிலரின் வாழ்க்கையில் நல்ல நேரம் என்பது எப்படி யார் மூலமாக வரும் என சொல்லவே முடியாது.

Update: 2024-03-10 08:33 GMT

சரியான நேரத்தில் நாம் எடுக்கும் முடிவே நமது வாழ்க்கையை மாற்றி விடும். சில சமயம் மற்றவர்கள் மூலம் நமது வாழ்க்கை மாறி விடும். அப்படி கவுண்டமணியால் செந்திலின் வாழ்க்கை மாறியது பற்றித்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

கவுண்டமணியும் செந்திலும் சினிமாவில் சேர்ந்து நடித்தது தான் பலருக்கும் தெரியும். ஆனால், சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அவர்கள் இருவரும் நாடகங்களில் ஒன்றாக இணைந்து நடித்திருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரியாது. பல வருடங்கள் இருவரும் நாடகங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஆனால், அதற்கு முன்பு இருவரும் ஒரு துணிக்கடையில் ஒன்றாக வேலை பார்த்திருக்கிறார்கள். வேலை செய்யும் நேரம் போக மற்ற நேரங்களில், அதாவது மாலை மற்றும் இரவில் நாடகங்களில் நடித்து வந்தார் கவுண்டமணி. அப்போது அவரின் பெயர் சுப்பிரமணி. அப்போது ஒருநாள் நாடகங்களில் ஸ்கிரீன் என சொல்லப்படும் மேடையில் போடப்படும் துணியை பிடித்துக்கொள்ள ஒருவர் தேவைப்பட்டது.

‘யாராவது இருந்தால் அழைத்து வா’ என நாடகத்தின் முதலாளி கவுண்டமணியிடம் சொல்ல அவருக்கு செந்தில் ஞாபகம்  வந்தது. உடனே அவரிடம் சென்று ‘நீ இந்த வேலையை செய்’ என அழைத்திருக்கிறார். செந்திலோ ‘ எனக்கு 7 ரூபாய் சம்பளம் கொடுக்குறாங்க. நான் வரல’ என சொல்லி இருக்கிறார்.

கவுண்டமணியோ ‘உனக்கு 10 ரூபாய் நான் வாங்கித்  தருகிறேன்’ என சொல்லி அவரை அழைத்துச்  சென்று நாடகத்தில் சேர்த்து விட்டுள்ளார். அந்த வேலையை செந்தில் செய்து கொண்டிருந்த போது ஒருநாள் ஒரு நடிகர் வரவில்லை. எனவே அந்த வேடத்தில் செந்திலை நடிக்க வைத்தனர்.

அவரும் அதில் சிறப்பாக நடிக்க அப்படியே கவுண்டமணியுடன் சேர்ந்து அவரும் நாடகங்களில் நடிக்கத்  துவங்கினார். அதன்பின் இருவரும் சினிமாவில் நுழைந்து பல வருடங்கள் பிரிக்க முடியாத கூட்டணியாக விளங்கி ரசிகர்களை சிரிக்க வைத்ததுதான் சினிமாவின் வரலாறு.

Tags:    

Similar News