எம்ஜிஆர் கொடுத்த விருந்து :புரியாமல் தவித்த லட்சுமி..!
எம்.ஜி.ஆர்., தமிழகத்திற்கு பெரிய விருந்து தரப்போகிறேன் என கூறியது எனக்கு அப்போது புரியவில்லை என நடிகை லட்சுமி தெரிவித்திருந்தார்.
துக்ளக் 31.07.2019 தேதியிட்ட வார இதழில் நடிகை லட்சுமியுடன் வாசகர்கள் சந்திப்பு என்ற நிகழ்ச்சி நடந்தது. அதில் நடிகை லட்சுமி பேசியவற்றிலிருந்து ஒரு பகுதி நம் வாசகர்களுக்காக.
“எம்.ஜி.ஆருடன் 1972ல் ‘இதயவீணை’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது காஷ்மீரில் எங்கள் எல்லோருக்கும் ஒரு இரவு விருந்து கொடுத்து விட்டு, ‘விரைவில் தமிழகத்திற்கு ஒரு விருந்து தரப் போகிறேன்’ என்று எம்.ஜி.ஆர் சொன்னார். ஆனால் அப்போது எனக்கு, மஞ்சுளாவுக்கு எல்லாம், அது அரசியலைப் பற்றியது என்பதே புரியவில்லை. அந்தப் படத்தில் டப்பிங் பேசிய போது கூட, “விரைவில் அரசியலுக்கு வருவேன்” என்கிற மாதிரியான சூசகமான வசனங்களை எம்.ஜி.ஆர் பேசியிருந்தார். அது கூட அவர் கட்சி ஆரம்பித்த பின்னர் தான் புரிந்தது. இப்படி ஒரு மக்கு போலவே தான் நான் இருந்திருக்கிறேன்.
‘ராஜராஜசோழன்’ திரைப்படத்தில் நான் ஒரு நீளமான வசனத்தைப் பேசி விட்டு, என்னுடைய தலையில் இருக்கும் கிரீடத்தைக் கழட்டி வைத்து விட்டுப் போகிற மாதிரியான காட்சி ஒன்று உண்டு. படத்தில் அந்த காட்சியைப் பார்த்துவிட்டுப் பலபேர் என்னிடம் வந்து “அந்தக் காட்சியில் சிவாஜியையே தூக்கிச் சாப்பிடுகிற மாதிரி நடித்து விட்டாய்” என்று என்னைப் பாராட்டினார்கள். நான் அதிர்ந்து போனேன்.
ஏன் என்றால் அந்தக் காட்சியில் நான் எப்படி நடிக்க வேண்டும்; எப்படி வசனம் பேச வேண்டும் என்று எனக்குச் சொல்லித் தந்ததே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். அவர் சொல்லித் தராமல் போயிருந்தால் அந்தக் காட்சி அவ்வளவு சிறப்பாக வந்திருக்காது”. இவ்வாறு பேசியிருந்தார்.