'கடவுள் தந்த உணவு' காளான் சாப்பிடுங்க...!

மனித ஆரோக்கியத்துக்காக கடவுள் படைத்த முக்கிய உணவுகளில் ஒன்றாக காளான் கருதப்படுகிறது. எனவே, தயக்கமின்றி காளான் சாப்பிடுங்கள். அது சைவம்தான்.

Update: 2022-12-04 11:27 GMT

‘சுடச்சுட’ ருசியா காளான் கிரேவி சாப்பிடலாம் வாங்க!

காளானில் உடலுக்குத் தேவையான சில அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்து உள்ளது என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால், இன்னும் சிலர் காளான்கள் உடலுக்கு தீமை தரக்கூடியவை. அவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்றும், அவை அசைவத்தை சேர்ந்தது என்றும் கூறி வருகின்றனர். ஆனால் சீனர்களின் உணவுகளில் காளானுக்கு மிக முக்கிய இடமுண்டு.


பலரும் விரும்பி உண்ணக்கூடிய உணவுகளில் காளானும் ஒன்று. இதனை விரும்பி உண்ணும் பலரும் அதன் சுவை மற்றும் ஊட்டச்சத்துகளுக்காகவே இதனை தொடர்ந்து சாப்பிடுகின்றனர். ஆனாலும், சிலர் காளான்கள் உடலுக்கு நல்லதா, கெட்டதா என்ற குழப்பத்தில் தான் இருக்கின்றனர்.

உண்மையில் காளான்கள் அதிசய உணவு என்றுதான் கூற வேண்டும். இது சைவ உணவுதான். காளான்களை அனைத்து வித சூழ்நிலைகளிலும் வளர்க்க முடியும். இதில் பல்வேறு வகைகள் உள்ளன. எல்லா வகையான காளான்களையும் உணவில் சேர்த்துக் கொள்ள முடியாது. ஏனெனில், இவற்றில் விஷத்தன்மை கொண்ட காளான்களும் உள்ளன. ஆனால் சாப்பிட ஏற்ற காளான்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


காளான் வகைகள்

இதுவரை கண்டறியப்பட்ட ஆயிரக்கணக்கான காளான் இனங்களில், 2 ஆயிரம் இன காளான்கள் மட்டுமே உண்ணக்கூடிய வகைகளாக உள்ளன. அதிலும், வணிக ரீதியாக 4 முதல் 5 வகை காளான் இனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. பெரும்பாலும் இந்தியாவில் மூன்று வகையான காளான்கள் மட்டுமே விரும்பி உண்ணப்படுகின்றன.

அவை என்னவென்றால், பட்டன் காளான், சிப்பிக் காளான் மற்றும் வைக்கோல் காளான் ஆகும். இந்த காளான் உற்பத்தியில் 90 சதவீதம் வணிக ரீதியாக பயிரிடப்படுவது பட்டன் காளான்கள் தான். சிறிய குடை வடிவ இந்த காளானில் புரதச் சத்து, நார்ச்சத்து, வைட்டமின் பி மற்றும் தாதுக்கள் அதிக அளவில் உள்ளன.


காளான் மருத்துவ குணங்கள்

மற்ற காய்கறிகளைப் போலவே, காளானிலும் மருத்துவ குணங்கள் அதிக அளவில் நிறைந்து உள்ளன. அதிலும், மைடேக், ஷிடேக் மற்றும் ரெய்ஷி ஆகிய காளான்களில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. காளான்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

அதேபோல இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்தி, கட்டுக்குள் வைக்கவும், ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் முடியும்.

காளான்கள் குறைந்த கலோரிகளைக் கொண்ட உணவு என்பதால் உடல் பருமனை தடுக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் இவை உதவுகின்றன. மேலும், சிவப்பு இறைச்சி போன்ற அதிக கொழுப்பு உணவுகளுக்கும் காளான்கள் சிறந்த மாற்று உணவாகும்.


வைட்டமின் 'டி' நிறைந்த காளான்

பொதுவாக, உடலுக்குத் தேவையான வைட்டமின் 'டி'  யை பெறுவதற்கு சூரிய ஒளி தான் சிறந்த தீர்வு. அதேபோல உணவுகளில் வைட்டமின் 'டி' பெரும்பாலும் அசைவ உணவுகளில் இருந்து தான் பெறப்படுகிறது. குறிப்பாக முட்டை, மீன், சிவப்பு இறைச்சி போன்ற அசைவ உணவுகளில் இருந்து அதிக அளவில் வைட்டமின் 'டி'  கிடைக்கிறது. ஆனால் சைவ உணவுகளில் வைட்டமின் 'டி' மிகக் குறைவு.

சைவ உணவுகளில் வைட்டமின் நிறைந்த உணவு என்றால் அது காளான் தான். அதனால் அசைவம் சாப்பிடாதவர்களும் உடலுக்குத் தேவையான போதிய அளவு வைட்டமின் 'டி' உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது.

ஆய்வு சொல்லும் உண்மை

சீனர்களுடைய கலாச்சாரத்தில் 'கடவுளின் உணவுகள்' என சிலவற்றைக் குறிப்பிடுகிறார்கள். அதாவது கடவுள், மனித குல ஆரோக்கியத்துக்காக படைத்த உணவுகள் என்று பொருள். அந்த பட்டியலில் காளானுக்கு மிக முக்கிய இடமுண்டு. காளானில் உள்ள ஆன்டி பாக்டீரியல் தன்மை மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கின்றன என்றும் இதை டயட்டரி சப்ளிமெண்டாக எடுத்துக் கொள்வது நல்லது என்றும் நேஷனல் சென்டர் பார் பயோடெக்னாலஜி இன்பர்மேஷன் நடத்துகிற நேஷனல் லைப்ரரி ஆப் மெடிசன் (national library of medicine) என்னும் ஆய்விதழில் Edible Mushrooms: Improving Human Health and  Promoting Quality Life என்னும் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


​காளானில் உள்ள ஊட்டச்சத்துகள்

பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம், காளான்கள் பாக்டீரியா எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புககளை கொண்டுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். காளான்களில் உள்ள மருத்துவ குணம் காரணமாக இவை, மருத்துவத் துறையில் ஹெல்த் சப்ளிமெண்ட்ஸ், காப்ஸ்யூல்கள், பவுடர், மாத்திரைகள், டானிக் போன்ற திரவ வடிவில் கூட விற்பனை செய்யப்படுகின்றன.

87 கிராம் சமைக்காத பட்டன் காளானில் 19 கலோரிகள், புரதம் 3, சில அத்தியாவசிய அமினோ அமிலங்கள், வைட்டமின் பி 9 ( போலேட் ) 12 முதல் 16 எம்சிஜி, வைட்டமின் பி 3 ( நியாசின் ) 3.31 எம்ஜி, வைட்டமின் பி 2 ( ரிபோப்ளேவின் ) 0.43 எம்ஜி, வைட்டமின் பி1 ( தியாமின் ) 0.08 எம்ஜி, வைட்டமின் பி6 0.1 எம்ஜி, செலினியம் 22.62 எம்சிஜி, தாமிரம் 0.43 எம்ஜி, பொட்டாசியம் 390 எம்ஜி, பாஸ்பரஸ் 104 மிகி, துத்தநாகம் 1 மிகி போன்றவை உள்ளன.

எனவே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காளான் சாப்பிடலாம். ஆரோக்கியத்தை பெறலாம்.

Similar News