பழைய கூட்டணி அமைந்தால் இணைந்து நடிக்கத் தயார்.. திருச்செந்தூரில் நடிகர் வடிவேலு பேட்டி…
பழைய காமெடி கூட்டணி அமைந்தால் இணைந்து நடிக்க தயார் என திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்த நகைச்சுவை நடிகர் வடிவேலு தெரிவித்தார்.;
நகைச்சுவை நடிகர் வடிவேலு அடிக்கடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வார். இந்த நிலையில், நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் சமீபத்தில் வெளியான நிலையில், நடிகர் வடிவேலு நேற்று இரவு திருச்செந்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நகைச்சுவை நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வருவதைக் கண்டதும் அவரை பார்க்க ரசிகர்கள் குவிந்தனர். ரசிகர்களின் ஆரவாரத்தால் வடிவேலு சிக்கித் தவித்தார்.
பின்னர் நடிகர் வடிவேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எத்தனையோ கோயில்கள் இருந்தாலும் திருச்செந்தூர் முருகன் கோயில் சிறப்பு பெற்றது. மனதில் என்ன குறைகள் இருந்தாலும் திருச்செந்தூர் முருகன் சன்னிதானம் வந்தால் அந்தக் குறைகள் நீங்கும். பொங்கலுக்கு வெளியாக உள்ள விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு ஆகிய இரண்டு படங்களுமே வெற்றியடைய வேண்டும்.
வெளியாகும் அனைத்துப் படங்களும் பெரிய வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால்தான் சினிமா நல்லா இருக்கும். சினிமாத்துறை நல்லா இருந்தால்தான் அனைவரும் நன்றாக இருக்க முடியும். என்னுடைய முந்தைய காமெடி நடிகர்கள் கூட்டணி வந்தால் இணைந்து நடிக்க வேண்டியது தான்.
தற்போது, மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன், ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி- 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறேன்.
நாய் சேகர் ரிட்டென்ஸ் படம் வெற்றிகரமாக மூன்றாவது வாரம் ஓடிக் கொண்டிருக்கிறது. குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். பலரும் படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக போன் செய்து வாழ்த்து சொல்லி பாராட்டி வருகின்றனர். நாய் சேகர் ரிட்டன்ஸ் வெற்றியால் தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருக்கிறார். நான் மீண்டும் திரையில் நடிக்க வந்தது மக்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அனைத்தும் கடவுளின் ஆசிர்வாதம் என நடிகர் வடிவேலு தெரிவித்தார்.