உப்புமா சாப்பிட மறுத்து அடம் பிடித்த கமல்
கமல் உப்புமா சாப்பிட மறுத்து தகராறு செய்த சுவராஸ்யமான விஷயம் பற்றி இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கூறியுள்ளார்.;
களத்துார் கண்ணம்மா படப்பிடிப்பின் போது கமல் உப்புமா சாப்பிட மறுத்து தகராறு செய்த சுவராஸ்யமான விஷயம் பற்றி இயக்குனர் எஸ் பி முத்துராமன் கூறிய தகவல்...
களத்தூர் கண்ணம்மா பட ஷூட்டிங்கில் சாவித்ரி உப்புமாவை கமலுக்கு ஊட்டிவிட போகிற மாதிரி ஒரு காட்சி. அந்தக் காட்சியை படமாக்கும் போது எவ்வளவோ சொல்லியும் கமல்ஹாசன் அந்த உப்புமாவை சாப்பிட மறுத்தார். கமலுடைய அண்ணன் சந்திரஹாசன் சொல்லிப் பார்த்தார். கேட்கவில்லை. செட்டுக்கு வெளியே தூக்கிக்கொண்டுபோய் ‘ஏன், சாப்பிட மாட்டேங்குறே’ என்று கேட்டால், ‘இதுக்கு முன்னால மாந்தோப்புல நடிச்சேன். அந்தத் தோப்புல தொங்கிய மாங்காயெல்லாம் பேப்பர் மாங்காய். இங்கே சுத்தி இருக்குற சுவரெல்லாம் அட்டை சுவர். இந்த உப்புமாவும் மண்ணாத்தான் இருக்கும். சினிமாவே பொய்; உப்புமாவும் பொய்’ என்றார்(ன்).
நான், சாவித்திரி, இயக்குநர், சந்திரஹாசன் எல்லோரும் கமல் முன்னே அந்த உப்புமாவை சாப்பிட்டுக் காட்டினோம். அதன் பிறகே கமல் அதை சாப்பிட்டார். அந்த வயதில் கமலுக்கு அப்படி ஒரு கேள்வி ஞானம்.
படப்பிடிப்புக்கு இடையே கொஞ்சம் பிரேக் கிடைத்தாலும் மற்ற குழந்தைகள் செட்டுக்கு வெளியே விளையாட ஓடிவிடுவார்கள். கமல் மட்டும் ஸ்டுடியோவுக்குள் உள்ள பிரிவியூ தியேட்டரில் படம் பார்க்க சென்று விடுவார். படம் பார்ப்பதோடு நின்று விடாமல், அங்கே பார்த்த காட்சிகளை செட்டுக்கு வந்து எங்களிடம் நடித்தும் காட்டுவார்.
‘களத்தூர் கண்ணம்மா’ படம் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்ட நாட்களில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு தியேட்டருக்கும் சென்று மக்கள் முன் ஆட்டம் பாட்டம் என்று தனியாளாக நடத்திக் காட்டி மக்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்த பெருமை கமலுக்கு உண்டு. நட்சத்திர அந்தஸ்தை குழந்தையிலேயே பெற்றவர் கமல். ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் கமலை அறிமுகப்படுத்தியதில் ஏவி.எம்முக்குப் பெருமை. கமலை தூக்கி வளர்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது பெருமையிலும் பெருமை. ‘களத்தூர் கண்ணம்மா’ படப்பிடிப்பில் கமலை நான் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை கமல், பல ஆண்டுகள் பாதுகாத்து எனக்குப் பரிசாகக் கொடுத்தது பெருமையோ பெருமை! இவ்வாறு கூறியுள்ளார்.`