அரூர் கூலி தொழிலாளர்கள் இறந்த சம்பவம் : செம்மரக்கடத்தல் புரோக்கர் கைது

ஆந்திராவில் அரூர் கூலி தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில் செம்மரக்கடத்தல் புரோக்கர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-03 03:30 GMT

தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட ரகு.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த சித்தேரி மற்றும் சிட்லிங் வட்டாரப் பகுதியிலுள்ள தொழிலாளர்கள் சிலர் அண்மையில் ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டும் பணிக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.

இதில், சித்தேரி ஊராட்சி, மெதிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராமன் (40) என்பவர் அங்கு மர்மான முறையில் இறந்தார். தொடர்ந்து, ராமனின் சடலத்தை எடுத்து வந்த மர்ம நபர்கள், சித்தேரி பேருந்து நிறுத்தம் பகுதியில் வீசிவிட்டு சென்றனர். இதையடுத்து, இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக அரூரை அடுத்த சுமைதாங்கிமேடு கிராமத்தைச் சேர்ந்த கார் உரிமையாளர் சண்முகம் (47), இவரது கார் ஓட்டுநரான எல்லப்புடையாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மகன் பார்த்திபன் (22) ஆகியோரை அரூர் போலீசார் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து, சித்தேரி அருகேயுள்ள அழகூர் ஜக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செவத்தான் மகன் பாலகிருஷ்ணன் (44) என்பவர், ஆந்திர மாநிலம், கடப்பாவில் மர்மான முறையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, உயிரிழந்த தொழிலாளி பாலகிருஷ்ணனின் சடலம், கோட்டாட்சியர் விசாரணைக்கு பிறகு கடப்பாவில் அடக்கம் செய்யப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், அரூரை அடுத்த சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் ரகு (28) என்பவர், இடைத்தரகராக செயல்பட்டு சித்தேரி சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு செம்மரம் வெட்டும் பணிகளுக்கு தொழிலாளர்களை அழைத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, நீலகிரி மாவட்டம், உதகையில் தலைமறைவாக இருந்த ரகுவை பிடித்த தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News