பொன்னியின் செல்வன் சுற்றுலா! தமிழ்நாடு சுற்றுலாத் துறை ஏற்பாடு

பொன்னியின் செல்வன் சுற்றுலா!  தமிழ்நாடு சுற்றுலாத் துறை ஏற்பாடு
Tamil Nadu Tourism Department -பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் தமிழ்நாடு சுற்றுலா துறை பொன்னியின் செல்வன் என்ற சிறப்பு சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது

Tamil Nadu Tourism Department -கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கி வெளியான திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் வாசகர் உலகில் ஏற்கனவே பெரும்புகழ் பெற்று விளங்கும் பொன்னியின் செல்வன் நாவலுக்கு, இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர் பட்டாளம் அதிகரித்துள்ளது. காதல், போர், துரோகம், சூழ்ச்சி, வஞ்சகம் என அனைத்து கலவையான உணர்வுகளையும் கொண்ட பொன்னியின் செல்வன் நாவல், தற்போதைய இளம் தலைமுறையினரை வெகுவாக கவர்ந்து வருகிறது.

பொன்னியின் செல்வன் கதை புத்தக வடிவில் மட்டுமல்லாது, ஆடியோ, வீடியோ என பல்வேறு வடிவங்களில் பலரை சென்றடைந்து வருகிறது. அதே சமயம் இந்த கதையில் வரும் இடங்களை நேரில் காணும் ஆர்வமும் மக்களிடையே அதிகரித்துள்ளது.


ஏற்கனவே சில தனியார் அமைப்புகள் பொன்னியின் செல்வன் சுற்றுலா என நடத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழக சுற்றுலாத்துறையும் பொன்னியின் செல்வன் சுற்றுலா என்ற பெயரில் புதிய சுற்றுலா திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பாக பொன்னியின் செல்வன் நாவலில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் தொடர்புடைய இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஃபிளை ஹாலிடேஸ் என்ற தனியார் அமைப்புடன் இணைந்து தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது. 2 இரவுகள், 3 நாட்கள் என இந்த சுற்றுலா பயணம் சென்னையில் தொடங்கும்

சென்னையில் தொடங்கி தஞ்சாவூர், பின்னர் மீண்டும் சென்னை என 2 இரவு, 3 பகல்களுக்கு இந்த சுற்றுலா திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து சொகுசு பேருந்தில் மாமல்லபுரம், வீரநாராயணபுரம் எனப்படும் வீராணம் ஏரி, கும்பகோணம், பட்டீஸ்வரம், திருவையாறு, நாகை உள்பட கதையில் வரும் பல்வேறு இடங்களுக்கும், அந்த பகுதிகளில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோவில்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் வந்தியத்தேவன் எனும் கதாபாத்திரத்தின் வழியே பயணிக்கும். தமிழக சுற்றுலாத்துறையின் பொன்னியின் செல்வன் சுற்றுலா சோழர் கால கல்வெட்டுகள், கோவில் கட்டடக்கலை, சிற்பங்கள் ஆகியவற்றை கண்டு களிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலாவின்போது சம்பவங்கள் நடைபெற்ற இடங்களின் வரலாற்று முக்கியத்துவத்தை விளக்கும் நிபுணர்களும் உடன் வருகின்றனர். இதில் ராஜராஜசோழன் குறித்த தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டு, கண்டராதித்த சோழன், செம்பியன் மாதேவி பற்றிய திருநல்லம் கல்வெட்டு, பழுவேட்டரையர்களை குறிப்பிடும் பழுவூர் கோவில் கல்வெட்டு, ஆதித்த கரிகாலன் பற்றிய குடந்தை நாகேஸ்வரர் கோவில் கல்வெட்டு, வானவன் மாதவி பற்றி குறிப்பிடும் உடையார்குடி கல்வெட்டு, உத்தம சோழர் குறித்த திருக்கோடிகா கல்வெட்டு, ஆதித்த கரிகாலன் கொலைக்கு காரணமானவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து விவரிக்கும் உடையார்குடி கல்வெட்டு ஆகியவற்றை நேரில் காட்டி விளக்கமளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலா செல்லும் நபர்களுக்கு உணவு, தங்குமிடம் ஆகியவை சேர்த்து ஒரு நபருக்கு குறைந்தபட்சம் ரூ. 11,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது., தமிழர் வரலாற்றின் முக்கியமான பகுதிகளையும், 'பொன்னியின் செல்வன் நாவலில் படித்த இடங்களையும் நேரில் பார்த்து மகிழ வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டணத்தை ஒரு பொருட்டாக கருதாமல் தமிழக சுற்றுலாத்துறையின் இணையதளத்தில் பொதுமக்கள் ஆர்வமாக முன்பதிவு செய்து வருகின்றனர்.

இந்த சுற்றுலாவில் இணைய விருப்பமுள்ளவர்கள் www.ttdconline.com ல் பதிவு செய்யலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Read MoreRead Less
Next Story