விளைநிலத்தில் மின் கோபுரம்: இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

விளைநிலத்தில் மின் கோபுரம்:  இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
X

கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்

விழுப்புரம் மாவட்டத்தில் மின் கோபுரம் அமைக்க நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் செஞ்சி, மேல்மலையனூர் ஆகிய பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்கும், பணி தொடங்கும் முன் இழப்பீடு வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஏ.வி.ஸ்டாலின்மணி தலைமையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர், செஞ்சி ஆகிய வட்டங்களில் தமிழ்நாடு மின் உற்பத்தி தொடரமைப்பு கழகம் மற்றும் பவர் கிரிட் நிறுவனம் சார்பில் பாக்கம், புதுப்பாளையம், கருவாச்சி, தாங்கள், சத்தியமங்கலம், விநாயகபுரம், ரெட்டிபாளையம், ஆற்காம்பூண்டி, தென்பாலை, ராஜபாளையம், செவலபுரை, தாதங்குப்பம், பொற்குணம், கலிங்கமலை உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக மின் பாதை செல்வதால் கரும்பு, தென்னை,சவுக்கு உள்ளிட்ட விவசாயிகள் நடவு செய்து உள்ள பல்வேறு பயிர்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் சுமார் 30 செண்ட் அளவில் நிலம் பாதிக்கப்படுகிறது, மின் பாதை கீழே உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகள் பாதிக்கப்பட்டு விவசாய நிலத்திற்கு பாசன தேவை பாதிக்கப்பட்டு உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சியர் முயற்சியால் பாதிக்கப்பட்ட கிணறுகளுக்கு அங்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது, அதுபோல் விழுப்புரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டு உள்ள விவசாய கிணறுகளுக்கு இழப்பீடு வழங்க அரசு புதிய அரசாணை வெளியீடு செய்ய ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும்,

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிய பின்பே சம்மந்தப்பட்ட நிறுவனம் பணி தொடங்க அனுமதி வழங்கவேண்டும், மின் கோபுரங்கள் விவசாய நிலங்கள் வழியே அமைவதால் நிலமதிப்பு குறைந்து, விவசாயம் பாதிக்கப்படுவதால், இனிவரும் காலங்களில் சாலை வழியாக மின்சாரத்தை கேபிள் வழியாக எடுத்து செல்ல வேண்டும் என அந்த மனுவில் ஆட்சியருக்கு கோரிக்கையாக தெரிவித்துள்ளனர்.

மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர், ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் முன்னாள் மாநில செயலாளர் என்.சுப்பிரமணியன்,மாவட்ட செயலாளர் ஆர்.டி.முருகன், மாவட்ட தலைவர் பி.சிவராமன், மாநில குழு உறுப்பினர் ஆர்.தாண்டவராயன், மாவட்ட துணைத்தலைவர் கோ.மாதவன், வட்ட செயலாளர்கள் வி.சிவன்,ஏ.நாகராஜன், வட்ட தலைவர் எஸ்.ராஜாராமன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!