திருவண்ணாமலையில் எழுந்தருளும் லேட்டஸ்ட் லேடி சாமியார் அன்னபூரணி அரசு அம்மா??!!

திருவண்ணாமலையில் எழுந்தருளும் லேட்டஸ்ட் லேடி சாமியார் அன்னபூரணி அரசு அம்மா??!!
X

அன்னபூரணி


திருவண்ணாமலைக்கு அருகில் ஆசிரமம் கட்ட பூமி பூஜை போட்ட அன்னபூரணி அரசு அம்மா

ஸ்ரீ ரமணா ஆசிரமம், ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமம், ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம் என திருவண்ணாமலையில் பல ஆண்டுகளாக நிலைத்து நின்றது இந்த மூன்று ஆசிரமங்கள் மட்டும்தான். அதன்பிறகு 1995 ம் ஆண்டுக்கு பிறகு கிரிவலப்பாதை முழுவதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் உதவியோடு சோடியம் விளக்குகள் அமைக்கப்பட்டது. சாலைகள் விரிவு படுத்தப்பட்டன.

பவுர்ணமி கிரிவலம் சூடுபிடிக்க தொடங்கிய காலம் அது.கிரிவலப்பாதையில் சின்ன சின்ன ஆசிரமங்கள் முளைக்கத் தொடங்கின.இவர்கள் பௌர்ணமி அன்று ஒரு நாள் மட்டும் கடை விரித்தார்கள்.வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து கிரிவலம் வருவோரின் எண்ணிக்கை மாதமாதம் அதிகரித்துக் கொண்டே வந்தது. திடீர் ஆசிரமம் நடத்தும் சாமியார்களின் வருமானமும் அதிகரிக்கத் தொடங்கியது.

அன்னபூரணி புதுசும், பழசும்

மாதம் மாதம் காவல்துறையினர் , வருவாய்த்துறையினர் என பலரது கெடுபிடிகள் இருக்கவே நாம் ஏன் கிரிவலப் பாதையில் ஒரு இடம் வாங்கி ஆசிரமம் கட்ட கூடாது என்ற எண்ணம் பல சாமியார்களுக்கு உதயமானது. ஒரு சில சாமியார்கள் கிரிவலப்பாதையில் இடம் வாங்க தொடங்கினர். கிரிவலப்பாதை முழுவதும் நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்தது. நில உரிமையாளர்களும் நல்ல விலைக்கு தங்களது விவசாய நிலங்களை ஆசிரமம் கட்டுவதற்கு விற்கத் துவங்கினர். தமிழ்நாட்டு சாமியார்களை விட வெளிமாநில சாமியார்கள் இங்கு திருவண்ணாமலையில் முதலீடு செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டினர். அதனால் அவர்கள் விலையை உயர்த்தி வாங்கினர்.

திருவண்ணாமலையில் டிரஸ்ட் அமைப்பது என்பது குடிசைத் தொழிலாக மாறத் தொடங்கியது. அனைத்து ஆசிரமங்களும் பௌர்ணமி அன்று அன்னதானம் தொடங்கினர். பின்பு அன்னதானத்திற்கு நிதி கொடுங்கள் என்று மெதுவாக தங்களது வலையை விரித்தனர். சாமியாரை சந்திப்பதற்கு ஒரு தனி ரேட், அவரிடம் அருள்வாக்கு பெறுவதற்கு தனி ரேட் என்று பரிகாரங்கள் செய்வதற்கு தனி ரேட் என்று மெனு கார்டு போல் சாமியார்களை நாடிவரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு அவர்களிடம் வசூலிக்கப்பட்டது. பக்தர்களின் கூட்டம் அதிகமாக அதிகமாக இவர்களின் இந்த வருமானமும் அதிகரித்துக் கொண்டே வந்தது.

பக்கத்து மாநிலமான கேரளாவில் இருந்தும் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பிரபல சுவாமிஜியும் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள பிரபல ஆன்மீக அறக்கட்டளையும் திருவண்ணாமலையில் ஆசிரமங்கள் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்து முடிந்து உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி ஒரிஸா, ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் உள்ள சாமியார்களும் திருவண்ணாமலையில் முதலீடு செய்து தனது கணக்கை துவக்கியுள்ளனர்.

லேட்டஸ்ட் லேடி சாமியார் :

தற்பொழுது லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ள, அன்னபூரணி அரசு அம்மா திருவண்ணாமலையை தகிக்க வைத்துள்ளார்.

திருவண்ணாமலை அடுத்த கீழ்பெண்ணாத்தூர் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் புதிதாக ஆசிரமம் கட்ட பூமி பூஜை போட்டிருக்கிறார் அன்னபூரணி அரசு அம்மா. எல்லோரும் திருவண்ணாமலை கிரிவல பாதையை நோக்கி தான் வருவார்கள். தாங்கள் ஏன் இங்கு இந்த இடத்தை தேர்ந்தெடுத்தீர்கள் என்று அவரிடம் கேட்டபோது, 'தன்னால் அதிக பணம் செலவழிக்க முடியாது. குறைந்த அளவில் பணம் செலவழித்து இந்த இடத்தை வாங்கியதாகவும், இந்த இடத்தில் வரும் பொதுமக்களுக்கு ஆன்மீகம் மற்றும் அதனை சார்ந்து வரும் அனைத்து விஷயங்களையும் போதித்து அவர்களுக்கு முக்தி அடைய பயிற்சி தருவதாக தெரிவித்தார்.

செங்கல்பட்டை சேர்ந்த அன்னபூரணி என்பவர் புத்தாண்டு தினத்தில் தனியார் மண்டபம் ஒன்றில் ஆசி வழங்குவதாக கூறி விளம்பரம் செய்தார். அந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அப்போது மற்றொரு பெண்ணின் கணவரை அபகரித்ததாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அன்னபூரணி தோன்றியிருந்த வீடியோக்களும் வெளியானது. அரசு என்ற அந்த நபர் இறந்தவுடன், அவருக்கு சிலை வைத்து வழிபட்டதுடன், அன்னபூரணி அரசு அம்மா என தன்னை அழைத்துக்கொண்டு ஆன்மீக நிகழ்ச்சிகளையும் நடத்த தொடங்கினார்.

நிகழ்ச்சிகளுக்கு உரிய அனுமதி பெறவில்லை என போலீஸ் வரை பிரச்சனை சென்றதால் சில காலம் ஆன்லைனில் தோன்றி அன்னபூரணி பேசி வருகிறார். பல நல்ல விஷயங்களை செய்து வரும் பிரபல ஆசிரமங்கள் கூட இவ்வாறான சில ஆசிரமங்கள் செய்யும் தவறுகளால் அவர்களின் நல்ல பெயரும் கெட்டுப் போகின்றது. எனவே அரசாங்கம் தலையிட்டு ஆசிரமம் அமைப்பதற்கு உரிய அனுமதி பெற்றுள்ளனரா? அவர்களின் பின்புலம் போன்றவைகளை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!