விடுதி வார்டன்கள் தவறு செய்தால் கடுமையான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவினை உண்டு உணவின் தரத்தினை பரிசோதித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சி சார்பில் நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சத்து 60 ஆயிரம் செலவில் கழிவுநீர் கால்வாய், சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை ஆட்சியர் முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகள் மந்தமாக நடைபெறுவதாகவும், அங்குள்ள வீடுகளின் பிளாட்பார ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும், உரிய நேரத்தில் பணிகளை முடித்து கழிவுநீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் இந்த பணியை பார்ப்பதற்கு வரும்பொழுது பணிகள் சரியில்லை என்று தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகளிடத்தில் எச்சரித்தார்.
பின்பு திடீரென ஆதிதிராவிடர் அரசு பெண்கள் விடுதியில் ஆட்சியர் முருகேஷ் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டார் சமையலறைக்கு சென்று உணவுப் பொருட்களை கேட்டறிந்தார் . மொத்தம் 81 மாணவர்கள் தங்கிப் படிக்கின்றனர் .ஆனால் 11 மாணவர்களுக்கு மட்டும் உணவு சமைக்கப் பட்டிருந்தது.
இதுகுறித்து ஆட்சியர் கேட்டதற்கு மீதமுள்ள மாணவர்கள் தேர்வுகள் முடிந்ததும் வீட்டிற்கு சென்று உள்ளதாக காப்பாளர் சிவசங்கரி கூறினார். இதை தொடர்ந்து உணவு பொருட்கள் மற்றும் மாணவர்களின் வருகை பதிவேடுகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த மாதம் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் மாணவர்கள் படிக்கும் விடுதிகளில் ஒரே நேரத்தில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டு வாரங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதில் 100% தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது தவறுகள் 50 சதவீதம் குறைந்துள்ளது. பதிவேடுகள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு இருந்தது.
மீண்டும் அடுத்த மாதத்தில் ஒருநாள் மாவட்டத்தில் உள்ள அனைத்து விடுதிகளிலும் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படும். அப்போது 20 சதவீத தவறுகள் நடந்திருந்தால் கூட அவர்கள் அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி விடுவேன் . அதற்கு பதிலாக புதிய காப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள், இதில் எந்த மாற்றமும் இல்லை . பணியிலிருந்து நீக்கியவர்களுக்கு எந்த மன்னிப்பும் இல்லை, என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.
அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவினை உண்டு உணவின் தரத்தினை பரிசோதித்தார். இதைத்தொடர்ந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் முருகேஷ், அங்குள்ள ரேஷன் கடையில் அரிசி உள்பட உணவுப் பொருட்களின் இருப்பு பதிவேடுகளை ஆய்வு செய்தார். பின்னர் மண்ணை இருப்பை ஸ்கேல் மூலம் அளந்து பார்த்தார்.
நபி நாயகம் தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் சேத்துப்பட்டு நான்குமுனை சந்திப்பில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் உடனே அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி செயல் அலுவலர் லோகநாதன் இடம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார் . சேத்துப்பட்டு சிறப்புநிலை பேரூராட்சியில் கால்நடை மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து கால்நடைகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.
ஆய்வின்போது மண்டல இணை இயக்குனர் கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர் சோமசுந்தரம், கால்நடை மருத்துவர்கள், வருவாய் அலுவலர்கள் கோவிந்தராஜ், குமாரவேல் செயல் அலுவலர் லோகநாதன், இளநிலை பொறியாளர்கள், ஆணையாளர்கள் அரசு அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu