நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம்: அதிகாரியிடம் விவசாயிகள் புகார்

நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம்: அதிகாரியிடம் விவசாயிகள் புகார்
X

நெல் கொள்முதல் நிலையத்தில் இலஞ்சம் கேட்பதாக அதிகாரியிடம் மனு அளித்த விவசாயிகள்

நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நெல்லை எடுப்பதாக அதிகாரியிடம் புகார் தெரிவித்து மனு கொடுத்தனர்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டத்தைச் சோந்த விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் அங்குள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளா் (நிலம்) தேன்மொழி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வட்டாட்சியா் சஜேஷ்பாபு, வேளாண்மை உதவி இயக்குநா் சவிதா, உதவி வேளாண்மை அலுவலா் ராமு, மண்டல துணை வட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி, தனி வட்டாட்சியா் வைதேகி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், சனிக்கவாடி கிராமத்தைச் சோந்த விவசாயி ரகு பேசும்போது, இணையவழியில் பதிவு செய்து எடப்பிறை கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு நெல் மூட்டைகளை திங்கள்கிழமை எடைபோட எடுத்துச் சென்றேன். அங்கு பணியில் இருந்த அதிகாரி ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் என 106 மூட்டைகளுக்கு ரூ.5 ஆயிரம் தந்தால்தான் நெல்லை எடுத்துக்கொள்ள முடியும் என்றாா்.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, ஆட்சியரின் நேர்முக உதவியாளா் (நிலம்) தேன்மொழியிடம் மனு கொடுத்தாா்.

மேலும், விவசாயிகள் பேசுகையில், செங்குணம், சதுப்பேரி, எடப்பிறை என பல்வேறு பகுதிகளில் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். சனிக்கவாடி, கொரால்பாக்கம் கிராமங்களில் தெரு மின்விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினா்.

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூரில் வட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடந்தது. திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

தாசில்தார் சாப்ஜான், வட்டார வேளாண் உதவி இயக்குனர் சந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பன்னீர்செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன், வேளாண் பொறியியல் துறை அலுவலர் கிருஷ்ணன், தோட்டக்கலை துறை அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் துணை அலுவலர் சுப்பிரமணி வரவேற்றார்.

இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் வேட்டவலம் மணிகண்டன், அட்மா ஆலோசனை குழு தலைவர் சோமாசிபாடி சிவக்குமார், இயற்கை விவசாயி சிறுநாத்தூர் கிருஷ்ணன், உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், இயற்கை விவசாயம் செய்வதற்கு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுப்பணித்துறை, பஞ்சாயத்து ஏரிகள் மற்றும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவைக்கேற்றார் போல் தோட்டக்கலை துறை மூலம் மண்ணின் தன்மைக்கு ஏற்ப விதைகள் வழங்க வேண்டும்.

சிறுநாத்தூர் பள்ளியில் குடிநீர் வழங்கவும், கழிவறை பழுதடைந்துள்ளதை சீரமைக்கவும் வேண்டும். ஏரியில் வண்டல் மண் எடுப்பதற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கூடுதலாக மண் எடுக்கப்படுகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேட்டவலம்-வயலூர், வயலூர்-கீழ்பென்னாத்தூர் வரை உள்ள சாலையில் தேவையற்ற பகுதியில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க அவசியமற்ற வேகத்தடைகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயிர் காப்பீட்டு நிறுவனங்களில் காப்பீட்டு திட்டத்தில் இழப்பீடு தொகையை தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பசுந்தாழ் உர விதைகள் மானிய விலையில் கூடுதலாக வழங்க வேண்டும். வீடு தேடி மருத்துவ திட்டத்தில் சித்த மருத்துவம் இடம்பெறச் செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!