காலை உணவு திட்டம் குறித்து கலெக்டர் ஆய்வு
காலை உணவு திட்டத்தினை நேரில் ஆய்வு செய்து மாணவர்களுடன் உணவு உண்ட கலெக்டர் முருகேஷ் மற்றும் அதிகாரிகள்.
காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் ஊராட்சி தலைவர்களுடன் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் அறிவுறுத்தினார்.
ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற செயலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
ஊராட்சி மன்ற தலைவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதிகள் வாரத்தில் 2 முறை காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு குறித்து ஆய்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும். இந்த காலை உணவு திட்டமானது ஏழை, எளிய குழந்தைகளுக்கு ஒரு இன்றியமையாத திட்டமாக உள்ளது. அந்த திட்டத்தில் உணவிற்கு பயன்படுத்தப்படும் அரிசி, மளிகை பொருட்கள் தரமான முறையில் உள்ளதா, சத்தான காய்கறிகள் பயன்படுத்தப்படுகின்றதா, உணவு சுகாதாரமான முறையில் சமைக்கப்படுகின்றதா என்பது குறித்தும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
குழந்தை திருமணம் நடைபெறுகின்றது என்று தெரிந்தால் தடுத்து நிறுத்தி சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். கலைஞரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் வீடுகள் வழங்க கணக்கெடுப்பு பணிகள் முழுமையாக நடைபெற்று உள்ளதா என்றும் பயனாளிகளை தேர்வு செய்யும் போது ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் குடும்ப அட்டையில் உள்ள முகவரி சரியாக உள்ளதா என்பதை ஆய்வு மேற்கொண்ட பின்னரே பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும்.
ஜமுனாமரத்தூரில் உள்ள 11 ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்தும், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் முழுமையாக ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறதா என்றும் கண்காணிக்க வேண்டும்.
மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டப் பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் ஊரக சாலை பணிகள் ஆகியவற்றை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். மேலும் தற்போது வரை நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர் பிரதாப் சிங், உதவி கலெக்டர் (பயிற்சி) ரஷ்மி ராணி, ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu